மருத்துவச்சிகள் நாள்!
மருத்துவச்சியின் சர்வதேச நாள் -இதே மே 5 அன்று கொண்டாடப்படுது. மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர், தாய் சேய் செவிலி, பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணி புரிகின்றனர். இவர்களின் அறிவு, திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல்இத்தினம் உலகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் அந்தக் காலத்தில் ஊருக்கெல்லாம் பிரசவம் பார்த்துக் கொடுப்பவள். ஒரு சித்த மருத்துவருக்கு இணையாக பச்சிலைகளை அறிந்து வைத்திருப்பாள்.
நாடி பிடிப்பது, நடை பார்ப்பது எல்லாம் கிடையாது. கண்ணெதிரே பார்த்த மாத்திரத்தில் மனக்கணக்குப் போட்டு விடுவாள்.
ஒரு கிராமத்தில் யாரேனும் கர்ப்பமுற்று விட்டார்கள் என்ற சேதி கிடைத்த அடுத்த கணம், அந்த வீட்டின் வாசலில் நிற்பாள்.
என்னென்ன சாப்பிட வேண்டும்; என்ன சாப்பிடக் கூடாது. எப்போது குளிக்க வேண்டும்; எப்போது கூடாது. என்னென்னெ வேலைகள் செய்ய வேண்டும்; எதையெல்லாம் செய்யக் கூடாது. எத்தனை மாதம் வரை உடலுறவு கொள்ளலாம்; எதன்பின் கூடாது. எப்படி உட்கார வேண்டும்… எப்படி படுத்துக்கொள்ள வேண்டும் என்று சகலவற்றையும் கண்டிப்பு கலந்த பாசத்தோடு சொல்லித் தருவாள். இன்னொரு தாயாக நின்று தயை புரிவாள். முடிவில், உயிர் போய் விடாமல் பிரசவம் பார்த்துக் கொடுப்பாள். குலம் தழைக்க வைப்பாள்.
ஒருவேளை தாயில்லாத அநாதைப்பெண் என்றால், அந்த வீட்டிலேயே ஒரு ஓரத்தில் தங்கிக்கொள்வாள். தலைக்கு எண்ணெய் தேய்ப்பது முதல் கால்பிடித்து விடுவது வரை சகலமும் செய்து, கர்பிணியையும் அவள் கொண்ட கருவையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து எடுப்பாள்.
பத்தாம் மாதம், நாலு புறம் சீலை கட்டி, நடுவே கிடந்து துடிக்கும் தாயைவிடக் கூடுதலாக மனம் துடித்து, பிள்ளையை வெளி வாங்கி, கழுவி, நலம் செய்து, பிள்ளைக்கு மருந்தூட்டி, வழித்து அமர்ந்து கால் மேலிட்டு, தலைக்கு ஊற்றி, தொட்டிலிட்டு, பேரிட்டு, பிரசவ மருந்து செய்து, பத்திய சோறு ஆக்கிப் போட்டு, பித்த வாயு உருவி எடுக்கும் பச்சிலை மருந்தை இடுப்பு நோக மைய அரைத்துக் கொடுத்து, உப்புசம் குறைத்து, உடல்நலம் தேற்றி, தாயும் குழந்தையும் அச்சம் நீங்கி சிரிப்பதைக் கண்டு, திருஷ்டி சுத்தி தெருவில் போட்டுப் போய்க் கொண்டேயிருப்பாள்.
பக்கத்து தெருவில் கர்ப்பம் தரித்திருக்கும் அடுத்த அநாதையைக் கவனிக்க வேண்டுமே!
ஆம், அந்த ஊர் மனிதர்கள்மீது அவ்வளவு அன்பு அவளுக்கு. தான் பிறப்பெடுத்ததே அந்த ஊர் கர்ப்பிணிப் பெண்களைக் காப்பாற்றத்தான் என்றும் குழந்தைகள் பிறந்து இந்த உலகைக் காணத்தான் என்றும் பரிபூரணமாக தன்னை ஒப்புக்கொடுத்த ‘மகா மனுஷி’ அந்த ஊர் மருத்துவச்சி. பிரசவம் பார்த்ததற்கு பிரதியுபகாரமாக எதையும் அவள் பெற்றுக் கொள்வதில்லை. அவளுக்கென்று ஊரோரமாய் கொஞ்சம் கீரைத் தோட்டம் இருக்கும். பத்துப் பதினைந்து முருங்கை மரங்கள் இருக்கும். அதிலேயே, தன் ஜீவனத்தை நடத்திக்கொள்வாள். புதுத்துணி எடுத்துக் கொடுத்தால், “எனக்கென்னடி கிழவி… நீ உடுத்திக்கடி என் செல்லம்…” என்பாள். அவ்வப்போது வந்து குழந்தைகளைக் கொஞ்சிப் போவதிலேயே அவளுக்குக் கொள்ளை இன்பம்.
அப்படி அந்த ஊரில் எத்தனை அநாதைத் தாய்மார்களுக்குத் தாயாக இருந்திருக்கிறாளோ? எத்தனைக் குழந்தைகளுக்கு இந்த உலகத்தைக் காணும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறாளோ? அவளது வழிகாட்டுதலும் துணையும் இல்லாது போயிருக்குமானால் எத்தனைக் சிசுக்கள் கருவிலேயே கருகியிருக்குமோ? எத்தனை தாய்மார்களின் உயிர் போயிருக்குமோ? அதனால் எத்தனைப் பேரின் சந்ததி தழைக்காமல் அழிந்து போயிருக்குமோ?
இத்தனை கேள்விகளுக்கும் தன் பாசம் சுமந்த எதிர்பார்ப்பில்லாத வெள்ளந்தியான புன்சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்து, அந்த ஊரின் பெண்களுக்கு எல்லாம் மன தைரியம் அளித்தபடி வளைய வந்துகொண்டிருந்த மகா மனுஷி-களை நினைவுப்படுத்தி மரியாதை செலுத்த வேண்டியதை நினைவூட்டும் நாள்