பன்னாட்டு குடும்ப தினம்!

பன்னாட்டு குடும்ப தினம்!

ண்டுதோறும் மே 15 ஆம் தேதி உலகம் முழுவதும் பன்னாட்டுக் குடும்ப நாள் (International Day of Families) கொண்டாடப்படுகிறது. 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இந்த நாள் அறிவிக்கப்பட்டு, 1994 முதல் உலகளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், சமூகத்தில் குடும்ப அமைப்பு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளிப்படுத்தவும் இந்த நாள் ஒரு முக்கிய தளமாக அமைகிறது.

குடும்பத்தின் முக்கியத்துவம்

குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம். குடும்பம் என்பது சமூகத்தின் அடிப்படை அலகு. அன்பு, புரிதல், பரஸ்பர மரியாதை, மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் அடித்தளத்தில் குடும்பம் உருவாகிறது. குழந்தைகளுக்கு முதல் பள்ளியாகவும், பண்புகள், மதிப்புகள், மற்றும் கலாசாரத்தை கற்பிக்கும் மையமாகவும் குடும்பம் விளங்குகிறது. ஒரு வலிமையான குடும்ப அமைப்பு, தனிமனித வளர்ச்சிக்கும், சமூக நலனுக்கும் முக்கிய பங்காற்றுகிறது. இப்போது காலங்களும், நேரங்களும் மாறிக் கொண்டே போகிறது.. தொழில் முறை, தனிமை என பல்வேறு காரணங்களால் கூட்டு குடும்ப முறை சிதைந்து வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் புதுமணத் தம்பதி தனிக்குடித்தனம் போவது திருமணத்திற்கு முன்பே முடிவாகி விடுகிறது. தாத்தா மடி அரட்டை, பாட்டியின் நிலாச்சோறு, அத்தைகளின் கதை என எத்தனையோ மகிழ்ச்சியான தருணங்கள் இன்று காணாமல் போய்விட்டன. அதனால் தான் கோபம், கட்டுப்பாடின்மை, பொறுமையின்மை என ஒருவிதமான மனநோய்களுக்கு ஆட்பட்டது போல குழந்தைகளின் வாழ்க்கை மாறிவருகிறது. அழிந்து போன சிட்டுக் குருவிகள் போல குடும்பம் என்ற அமைப்பும் சிதைந்து போய் விட்டது.

சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா என்ற உறவுப் பெயர்கள் எல்லாம் மறைந்து ஆன்ட்டி, அங்கிள் என்பவை பொதுப்பெயர்களாகிவிட்டன. பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளை அண்ணன் என்றழைத்த மரபுகளைக் கடந்து, அனைவரையும் கஸின் என்றழைக்கத் தொடங்கிவிட்டோம். மனித வாழ்க்கையே இயந்திர மயமாகிப்போனது. காலத்தின் கட்டாயமாகிப் போன மற்றொரு மாற்றங்களில் ஒன்று, பணி காரணமாக தாய், தந்தையரைப் பிரிந்து வெளிநாட்டில் வசிப்பது, மற்றும், கிராமங்களை விட்டு விட்டு நகரங்களில் வாழ்வது என குடும்பம் பிரிந்து போனது. பிரிந்துபோனது என்று கூறுவதைவிட, சிதைந்து போனது என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

தற்போது ஒரு விடுமுறை தினத்தில் குடும்பத்தில் நாம் என்ன பார்க்கிறோம்? அப்பா வாட்ஸ் அப்பில், அம்மா போனில், பிள்ளைகள் பேஸ்புக்கில் மூழ்கி கிடப்பதே என்றாகி விட்டது. பணி நேரம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடனேயே உறங்கச் செல்வதையும் வழக்கமாக்கி வருகிறோம். சந்தோஷமாக கூடி பேசுவதே இல்லை. குடும்பத்துடன் சுற்றுலா சென்றாலும் அதை அனுபவிக்காமல் செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் போடுவதிலேயே குறியாக இருக்கிறோம். இந்த நிலை மாறியாக வேண்டும். கல்வி, பணிவாய்ப்பு மற்றும் இணையதளங்களின் வருகையால் வீட்டுக்குள்ளேயே குடும்பங்கள் சிதறி இருப்பதை தற்போது காண முடிகிறது. ஒரே கூரையின் கீழ் இருந்தாலும் வேறு வேறு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதை உணர வேண்டும்.

பன்னாட்டுக் குடும்ப நாளின் நோக்கம்

மனித வாழ்க்கையின் அடித்தளமே குடும்பம் தான். அலுவலகம் என்பது வேறு, குடும்பம் என்பது வேறு என்பதை நினைவில் கொண்டு அலுவலகப் பணிகளை வீட்டில் செய்யாமல் குடும்பத்திற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். முதலில் நம் குடும்பத்தை ஒற்றுமையாக்கி அமைதியுடன் வாழப் பழக வேண்டும். குடும்பத்தில் அமைதி நிலவினால் மட்டுமே நம்மால் சமூகத்தில் அமைதியான மனிதராக வலம் வந்து மாற்றத்தை உருவாக்க முடியும். நம் வழியாக மற்றவரும் அமைதியை அடைய முடியும் என்பதை கருத்தில் கொண்டு, உலகளாவிய இந்த குடும்ப தினத்தில் உலகமுழுவதும் ஒரே குடும்பமாக எண்ணி நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்வித்து உலகத்தில் அமைதியும் இணைக்கவாழ்வும் நிலவ பாடுபடவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. மேலும் குடும்பங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களை அரசுகள், சமூகங்கள், மற்றும் தனிநபர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளுக்கு ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் (Theme) அறிவிக்கப்படுகிறது.
ஆந்த வகையில் 2025 ஆம் ஆண்டு பன்னாட்டு குடும்ப நாளின் (International Day of Families) கருப்பொருள் “Families and Climate Change” (குடும்பங்களும் காலநிலை மாற்றமும்) ஆகும். இந்தக் கருப்பொருள் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குடும்பங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும், குடும்பங்கள் நிலையான வாழ்க்கை முறைகளை மேற்கொள்வதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உதவுவதற்கு அவற்றின் பங்கை வலியுறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

பொருளாதார அழுத்தங்கள்: வேலையின்மை, வறுமை, மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குடும்பங்களின் நிலைத்தன்மையை பாதிக்கின்றன.

நவீன வாழ்க்கை முறை: தொழில்நுட்பத்தின் ஆதிக்கம், வேலை-வாழ்க்கை சமநிலையின்மை, மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவை குடும்ப உறவுகளை சவாலுக்கு உட்படுத்துகின்றன.

சமூக மாற்றங்கள்: விவாகரத்து, ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், மற்றும் புலம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

சுற்றுச்சூழல் பிரச்சனைகள்: காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரழிவுகள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன.

பன்னாட்டுக் குடும்ப நாளைக் கொண்டாடுவது எப்படி?

குடும்ப நேரம்: குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவது, உறவுகளை வலுப்படுத்த உதவும்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: குடும்பங்களின் முக்கியத்துவம் மற்றும் அவை எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தலாம்.

சமூகப் பங்களிப்பு: குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு உதவலாம்.

கலாசார நிகழ்வுகள்: குடும்ப ஒற்றுமையை வெளிப்படுத்தும் கலை, இசை, மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம்.

தமிழகத்தில் குடும்பத்தின் பங்கு

தமிழ் கலாசாரத்தில் குடும்பம் ஒரு மையப் பங்கு வகிக்கிறது. கூட்டுக் குடும்ப மரபு, மூத்தவர்களுக்கு மரியாதை, மற்றும் உறவினர்களிடையே ஒற்றுமை ஆகியவை தமிழ் குடும்பங்களின் சிறப்பம்சங்களாகும். இருப்பினும், நவீனமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் காரணமாக, தமிழகத்திலும் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் மற்றும் சிறிய குடும்ப அமைப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தேவைப்படுகின்றன.

மொத்தத்தில் இந்த பன்னாட்டுக் குடும்ப நாள், குடும்பங்களின் மதிப்பை நினைவூட்டுவதோடு, அவற்றை வலுப்படுத்துவதற்கு நாம் ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அன்பு, ஒற்றுமை, மற்றும் பரஸ்பர ஆதரவுடன் கூடிய குடும்பங்கள், ஒரு வலிமையான சமூகத்தை உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைகின்றன. இந்த நாளில், நம் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவழித்து, அவர்களுடனான பந்தத்தை மேலும் வலுப்படுத்துவோம்.

குடும்பம் ஒன்றுபட்டால், உலகம் செழிக்கும்!

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts