2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது இந்தியா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்றது நியூசிலாந்து அணி . கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் டாசில் தோற்பதில் அதிரடி காட்டி வரும் இந்திய அணி, ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டிக்காக நேற்று டாஸ் போடப்பட்டபோதும் 15வது முறையாக தோல்வியை சந்தித்தது. கடந்த 2023 நவம்பர் முதல் நேற்றைய ஒரு நாள் போட்டி வரை டாஸ் போடும்போது இந்திய அணி தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இது 12வது டாஸ் தோல்வி. இதையடுத்து, அதிக முறை டாஸ் தோற்ற கேப்டன் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவுடன் ரோகித் சர்மா பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தியாவிற்கு அப்படியோர் சாதனை வழங்கிய நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்து விளையாட தொடங்கியது.

ஆரம்பத்தில் நியூசிலாந்து ஓரளவு ரன்கள் குவித்தது போல இருந்தாலும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூசிலாந்து அணி சார்பாக டேரில் மிட்செல் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். அடுத்து மைக்கேல் பிரேஸ்வெல் 53 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். ரச்சன் ரவீந்திரா 37 ரன்களும், க்ளென் பிலிப்ஸ் 34 ரன்களும், வில் யங் 15 ரன்களும், டாம் லதாம் 14 ரன்களும், கேன் வில்லியம்சன் 11 ரன்களும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 8 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினார். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
50 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் , சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் ஒருபுறம் ரோஹித் சிறப்பாக விளையாட, மறுபுறம் சுப்மன் கில் நிதானமாக விளையாடி வந்தார். இதற்கிடையில் ரோஹித் தனது 41-வது பந்தில் அரைசதம் பூர்த்தி செய்தார்.
நிதானமாக விளையாடி வந்த சுப்மன் கில் 19-வது ஓவரில் க்ளென் பிலிப்ஸிடம் கேட்சை கொடுத்து 31 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் விராட்கோலி வந்த வேகத்தில் 1 ரன் மட்டுமே எடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இருப்பினும் அடுத்த சில ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் ரோஹித் 76 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் அரை சதத்தை தவற விட்டு 48 ரன்களும், அக்சர் படேல் 29 ரன்களும், ஹர்திக் பாண்டியா 18 ரன்களும் எடுத்தனர். இறுதியாக இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து இலக்கை எட்டி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
கடைசிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் கே.எல் ராகுல் 34* ரன்களுடனும் , ரவீந்திர ஜடேஜா 9* ரன்னுடனும் இருந்தனர். அதிகபட்சமாக இந்திய அணியில் ரோஹித் 76 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல் தலா 2 விக்கெட்டையும், ரச்சின் ரவீந்திரா, ஜேமிசன் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.
மினி உலகக்கோப்பை எனக் கருதப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இறுதியாக 2013ஆம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் 76 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
தொடர் நாயகன்தொடர் நாயகன் விருது, நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திராவிற்கு வழங்கப்பட்டது.
டெயில் பீஸ்:
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணிக்கு 2.24 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹19.45 கோடி) பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தை பெற்ற நியூசிலாந்து அணிக்கு 1.12 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹9.72 கோடி) வழங்கப்பட்டது.