கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்?!

கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்?!

நம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில், வருகிற ஆகஸ்ட் 15 முதல் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நாடு தாண்டி சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிப்பிதுங்கி நிற்கின்றன. இதற்கான தடுப்பு மருந்தும் இன்றளவும் கண்டறியப்படவில்லை. உலக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு, 200க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு, அவை பல்வேறு சோதனை நிலைகளில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம், இந்தியாவின் முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) உடன் இணைந்து, ‘கோவேக்சின்’ என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியின், இரண்டாம் கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதலை பெற்றது.

இதை அடுத்து கொரோனா தடுப்பு மருந்து சோதனையை துரிதப்படுத்த பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ஐ.சி.எம்.ஆர்., கடிதம் எழுதியுள்ளது. ஜூலை 7 ம் தேதி முதல் மனிதர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட இருப்பதாக ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்து உள்ளார். மேலும், சோதனை வெற்றி அடைந்தால் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும், ஆகஸ்ட் 15ம் தேதி தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுவே கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் காடிலா நிறுவனமும் வெற்றிகரமாக கொரோனா தடுப்பூசி தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது. முதல்கட்டமாக விலங்குகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதித்து பார்க்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். மனிதர்களிடம் நடத்தப்படும் முதல் கட்ட பரிசோதனையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களிடம், குறிப்பிட அளவிலான டோசுகளுடன் நடத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவுகள் மற்றும் பக்கவிளைவுகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட சோதனை சற்று அதிக எண்ணிக்கையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!