நான் ‘அதுக்கு’ சரிப்பட்டு வர மாட்டேன் – ரஜினி இன்றைய பேச்சு முழு விபரம்!

நான் ‘அதுக்கு’ சரிப்பட்டு வர மாட்டேன் – ரஜினி இன்றைய பேச்சு முழு விபரம்!

முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை. முதல்வராக என்னைக் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.

நான் நினைத்திருந்தால் அப்பவே முயற்சி பண்ணியிருக்கலாம். 45 வயசிலேயே பெயர், புகழ், எல்லாம் பார்த்து விட்டேன். அப்பவே எனக்குப் பதவி ஆசை இல்லை. அப்ப வராத ஆசையா இப்ப 68 வயசுல வரப் போகுது?

அதிலும் முதல்வராக என்னை நினைத்துப் பார்க்கவே முடியாது. சட்டப்பேரவையில் உட்கார்வது, பேசுவது என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே இல்லை. என் ரத்தத்தில் அது வரவே இல்லை

இதை ஏற்கனவே நான் 2017ல் பேட்டி அளித்த போதே சொல்லியிருக்கிறேன்.

நான் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் வெவ்வேறாக இருக்கும். நான் கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன்

அதிலும் இன்றைய இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருவேன்

இதெல்லாம் இன்று ரஜினி ஒரு பிரஸ் மீட் என்ற பெயரில் கூடிய கூட்டத்தில் சொன்னதாக்கும்..

தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்று சொல்லிய ரஜினிகாந்த் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரே ஆண்டு காலம் இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து இன்று அறிவித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் , தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எல்லாம் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும், தமிழக மக்கள் இடையே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியல் கட்சித் தொடங்குவேன் என்றும், அரசியலில் மாற்றம் ஏற்படாது என்று தெரிந்தால், நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 2021ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியை தமிழர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவர்கள் தற்போது தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் மிகப் பெரிய ஆளுமை மிக்க தலைவரின் வாரிசையும், தமிழகத்தை ஆளுபவர்களையும், முழு கஜானாவையும் வைத்திருப்பவர்களையும் நாம் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது ஏற்படாவிட்டால் எப்போதும் ஏற்படாது, நமது ஒரே முழக்கம் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்றும் ரஜினி கூறியுள்ளார். வெறுமனே வாக்குகளைப் பிரிப்பதற்காக மட்டும் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து சென்னையில் இன்று லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியது இதுதான்:

எனக்கு ஒருவிஷயத்தில் திருப்தி இல்லை. இது தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் என ஏற்கனவே நான் கூறியிருந்தேன். மாவட்ட செயலாளர்களிடம் இருந்து எந்த செய்தியும் வெளியே வர வில்லை. இதற்கெல்லாம் நான் முற்றுப்புள்ளி வைக்கவே இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருக் கிறேன். இந்த நேரத்தில், என்னுடைய வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்றும், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் ஆசைப்படும் மக்களுக்கும் ஒரு கண்ணோட்டம். நான் அரசியலுக்கு வரும் முன்பே ஒன்றை தெரிவித்தால் எனக்கு ஒரு தெளிவு வரும் என்பதற்காகவே இந்த சந்திப்பு. 1996ல் இருந்து 25 வருடமாக ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறுகிறார். ஆனால், 2017 டிசம்பர் 31ல் தான் நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறினேன். இனிமேலாவது, 25 வருடமாக ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறுகிறார் என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறேன். 1996ல் எதிர்பார்க்காத விதமாக அரசியலில் என்னுடைய பெயர் அடிபட்டது. அப்போதி லிருந்து அரசியலில் ஈடுபடுவது குறித்து தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். 2017ல் எப்போது ஆட்சி விழுந்திடுமோ என்ற நிலை இருந்தது. அப்போது என்னை வாழவைத்த தெய்வங்களுக்காக அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்தேன். அப்போதே, சிஸ்டம் கெட்டுப் போய் உள்ளது. அதை சரிசெய்ய வேண்டும். மக்கள் மத்தியில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்தேன். இதை சரிசெய்யாமல் அரசியலுக்கு வந்திருந்தால் மீன் கொழம்பு பாத்திரத்தில் சர்க்கரை பொங்கல் வைத்தது போல் இருக்கும்.

இதற்கு முதலில் அரசியல் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இதற்காக மூன்று திட்டங்களை நான் வைத்திருந்தேன். தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகியவை இரண்டு பெரும் ஜாம்பவான் கட்சிகள் ஆகும். இந்த கட்சிகளில் 67 ஆயிரம் பூத் கமிட்டிகள் தவிர 50 ஆயிரத்திற்கும் மேல் கட்சி பதவிகள் உள்ளது. இந்த பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே தேவை. தேர்தல் முடிந்த பிறகு இந்த பதவிகள் தேவை இல்லை. இந்த பதவியில் உள்ளவர்கள் டெண்டர் உள்ளிட்டவைகளில் ஊழலில் ஈடுபடுவார்கள். இது கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படும். அரசியலையே தொழிலாக அவர்கள் செய்கிறார்கள். எனவே, நான் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற பதவிகளை வைத்துக்கொண்டு, தேர்தல் முடிந்த பிறகு தேவையான பதவிகளை மட்டும் வைத்துக்கொள்ளலாம்.

 

 

ஒரு பண்டிகை முடிந்தவுடன் விழாவிற்கு வந்த சமையல்கார்களையும், வேலைக்காரகளையும் அனுப்பிவிடுவோமே தவிர அவர்களை உடனே வைத்துக்கொள்ள மாட்டோம். அதேபோலத்தான் கட்சிப் பதவியும். சட்டமன்றத்தில் 40, 50, 60 வயதுக்கும் மேல் தான் உள்ளார்கள். அங்கு வருபவர் கள் தான் வருகிறார்கள். புதிதாக மற்றவர்கள் வருவதில்லை. இளைஞர்களுக்கு பதவி கிடைப்ப தில்லை. அப்படி பதவி கிடைத்தால், எம்.எல்.ஏ,எம்.பி அல்லது கோடீஸ்வரன் மகன்களாக இருக்க வேண்டும். எனவே, நான் என்னுடைய கட்சியில் 60 முதல் 65 சதவீதம் 50 வயதுக்கு கீழ் உள்ள படித்தவர்களை, நல்ல பெயர் உள்ளவர்களுக்கு சீட் கொடுக்கிறேன். வேறு கட்சியில் உள்ள நல்லவர்களையும் உள்ளே சேர்க்க இருக்கிறேன். இதேபோல், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், மருத்துவர்கள் போன்றவர்களை நேரடியாக நான் சந்தித்து அரசியலுக்கு அழைக்க உள்ளேன்.

புது ரத்தத்தை சட்டமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும். அதற்கு ரஜினிகாந்த் ஒரு பாலமாக இருக்க வேண்டும். என்னுடைய பேர், புகழ், நம்பிக்கை இதற்கு உதவும் என நம்புகிறேன். மூன்றா வதாக, இந்தியாவில் தேசிய கட்சியை தவிர மாநிலத்தில் ஆட்சிக்கும், கட்சிக்கும் ஒருவரே தலைவராக உள்ளார்கள். இதனால், 5 வருடம் மக்கள் எந்த கேள்வியும் கேட்க முடியாது. கட்சியிலும் யாரும் எதுவும் கேட்க முடியாது. எனவே, கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை.

முதல்வர் பதவியை நான் எப்போதும் நினைத்து பார்த்தது இல்லை. நான் கட்சி தலைவனாக இருப்பேன். ஒரு நல்ல இளைஞனை முதல்வர் பதவியில் உட்கார வைப்போம். நம் கட்சி எதிர்கட்சி மாதிரி. யார் தப்பு செய்தாலும் சுட்டிகாட்டுவோம். தப்பு செய்தால் முதல்வரை தூக்கி எறிவோம். கட்சி வேறு, ஆட்சி வேறு. இதுதான் என்னுடைய 3 திட்டம். இதை மக்கள் விரும்புவார்கள் என நான் மிகவும் உறுதியாக இருந்தேன். இந்த திட்டத்தையே எனக்குள்ளே வைத்திருந்தேன். இந்த திட்டம் குறித்து எனக்கு நெருங்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதியாளர்களிடம் தெரிவித்தேன். ஆனால், இதற்கு அரசியல்வாதிகள் ஒப்புக்கொள்ளவில்லை. மூன்றாவது திட்டத்தை யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இது எனக்கு தூக்கிவாரிப்போட்டது. அரசியலுக்கு வேறு வருவேன் என்று சொல்லிவிட்டனே. என்ன செய்வது என தெரியவில்லை.

எனவே, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி இதுகுறித்து சொன்னேன். முதல் திட்டத்தை கூறவில்லை. அப்படி கூறினால், கோவம் ஒரே அடியாக ஏறிவிடுமே என்று கூறவில்லை. எனவே, மூன்றாவது திட்டத்தையே அவர்களிடம் தெரிவித்தேன். அதில் முரன்பாடு ஏற்பட்டது. நான் 2017ல் இருந்தே சொல்லி வருகிறேன் எனக்கு முதல்வர் பதவி தேவையில்லை என்று. நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு மாற்று அரசியல் கொண்டுவர வேண்டும். ஒரு நல்ல தலைவனை உண்டாக்க வேண்டும். திமுக, அதிமுக என்ற இரண்டு பெரும் ஜாம்பவான்கள் தமிழகத்தில் உள்ளார்கள். கலைஞர், ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகளும் இல்லை. எனவே. இது தான் வெற்றிடம். இது நல்ல சந்தர்ப்பம். இந்த நாளில் ஒரு எழுச்சி உருவாக வேண்டும். அப்படி எழுச்சி உருவானால் இந்த பெயர், புகழ், பணம் எல்லம் ஓடி விடும். இதையே நான் விரும்புகிறேன். இந்த எழுச்சி மக்களிடையே உருவாக வேண்டும். இந்த மண் புரட்சிக்கு பேர்போன பூமி. எனவே, இந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் நீங்கள் தான் எடுத்துச்சொல்ல வேண்டும். இது நடக்கவில்லை .

நான்அரசியலுக்கு வரவேண்டும் என்றால், ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் இதை நீங்கள் செய்யுங்கள். எழுச்சியை நீங்கள் செய்யுங்கள். இது இந்தியா முழுக்க பரவ வேண்டும். இளைஞர்கள் புரட்சி செய்ய வேண்டும். உங்கள் கையில் தான் உள்ளது. அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்பவும் இல்லை. இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

குறிப்பாக ஓட்டுப் போடும் பெண்களில் 50 சதவீதம் பேர், அடுத்தவர்களிடம் யாருக்கு ஓட்டுப் போடனும்னு கேட்டு ஓட்டுப் போடுகிறார்கள். 30 சதவீதம் பேர் மட்டுமே விவரம் தெரிந்தவர்களாக உள்ளனர். 30 சதவீதம் பேர் அறிவில்லாமல் இருக்கிறார்கள்.

நான் 71 வயதில் அரசியலுக்கு வந்திருக்கிறேன். இப்போதே உடம்பில் பல இடங்களில் பேட்ஜ் உள்ளது. பொழைச்சு வந்திருக்கிறேன். இப்போது(2021ல்) வெற்றி பெறாவிட்டால், 76வயதில்(2026 தேர்தல்) எப்படி என்று நினைத்துப் பார்க்க முடியுமா. மக்களும் என்னை எப்படி அந்த வயதில் ஒப்புக் கொள்வார்கள்.

இப்படி எல்லாம் ரஜினிகாந்த் தனது நிலைப்பாட்டை சொல்லிவிட்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், புறக்கணித்துவிட்டுச் சென்றுவிட்டார்