June 2, 2023

இந்தியா வருவதற்கான விசா நிறுத்தி வைப்பு! – கொரோனா பீதி!

கொரோனா வைரஸ் நோயை உலக சுகாதார நிறுவனம் சர்வதேச தொற்றுநோயாக அறிவித்து உள்ளது. அதன் எதிரொலியாக மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கான விசா வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்த விசா நிறுத்தம் இன்று அமலுக்கு வந்துள்ளது. வெளிநாட்டு பயணிகளால் நோய் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

உலகெங்கிலும் 118 நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயால் தற்போதைய நிலவரப் படி 1,26,139க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நேற்று மட்டும் 7,191 பேருக்கு புதியதாக வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல் உலகளவில் 4,627 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 331 பேர் இறந்துள்ளனர். முதலில் வைரஸ் பரவிய சீனாவில் மட்டும் 80,796 பேர் பாதிக்கப்பட்டும் 3,169 பேர் இறந்தும் உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவிற்கு அடுத்த இடத்தில் இத்தாலி (பாதிப்பு – 12,462, பலி – 827), ஈரான், தென்கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் உள்ளன. உலக அளவில் மொத்தம் 119 நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்த வைரசின் பாதிப்பிலிருந்து பொது மக்கள் தங்களை தற்காத்து கொள்ள, மத்திய, மாநில அரசு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. உலக நாடுகளும், கொரோனா பாதிப்புள்ள நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான விசாவை ரத்து செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆனாலும், கொரோனாவின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. கொரோனா வைரசின் பாதிப்பை (கோவிட் 19) கருத்தில் கொண்டு கோவிட் 19-ஐ, உலக அளவிலான தொற்றுநோயாக நேற்றிரவு உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் கூறும்போது, “உலக நாடுகளில் கொரோனா வைரசால் ஏற்பட்டுவரும் உயிரிழப்புகள் கவலையளிப்பதாக உள்ளன. இதையடுத்து, கொரோனா வைரஸ் உலக அளவிலான தொற்றுநோயாக அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கான அனைத்து மதிப்பீட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டன” என்றார்.

இதற்கு முன், கடந்த 2009ம் ஆண்டு, பன்றிக் காய்ச்சலை உண்டாகும் ஹெச்1என்1 வைரசை உலக அளவிலான தொற்றுநோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பரவலைத் தொற்றுநோய் என்று அறிவித்ததால் இந்தியாவுக்கான அனைத்து விசாக்களும் (வெளிநாடுகளுக்குச் சென்று வருவதற்கான ஆவணம் அல்லது கடவுச் சீட்டு) ஏப். 15ம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இத்தாலி போன்ற வெளிநாட்டுப் பயணி களாலும், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த இந்தியர்களாலும் நோய் தொற்று பரவியது. தற்போதுவரை 62 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசின் தற்போதைய உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய அரசின் உத்தியோக பூர்வ, ஐ.நா / சர்வதேச நிறுவனங்கள், வேலைவாய்ப்பு, திட்ட விசாக் கள் தவிர, சுற்றுலா உட்பட தற்போதுள்ள அனைத்து விசாக்களும் ஏப். 15ம் தேதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. பிப். 15ம் தேதிக்கு பிறகு சீனா, இத்தாலி, ஈரான், கொரியா குடியரசு, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த இந்தியர்கள் உட்பட அனைத்து பயணிகளும் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்’ என்று அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இ-விசா நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து விசா-வும் நிறுத்தி வைப்பு, இன்று ஒருங்கிணைக்கப் பட்ட சர்வதேச நேரம் (ஜிஎம்டி) 12 மணிக்கு தொடங்கியது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணி முதல் விசா இடைநிறுத்தம் அமலுக்கு வருகிறது. விமான பயணம் மட்டுமின்றி கப்பல் பயணத்திற்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும், கட்டாய காரணத்திற்காக இந்தியாவுக்கு வர விரும்பும் எந்தவொரு வெளிநாட்டவரும் அருகிலுள்ள இந்திய தூதரகத்தை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.