ஹைதராபாத் பிரியாணிக்கு புவிசார் குறியீடு கிடைக்கலை!

ஹைதராபாத் பிரியாணிக்கு புவிசார் குறியீடு  கிடைக்கலை!

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பான உணவு என்று ஏதாவது ஒரு உணவு வகை இருக்கும். இவ்வகை உணவுப் பொருட்கள் வணிகப்படுத்தப்படும் போது, வேறு பகுதியைச் சார்ந்தவர்கள் அந்த பிரபலமான உணவு உருவான இடத்தை வைத்து வணிகம் செய்து விடக்கூடாது என்பதற்காக புவிசார் குறியீடு என்ற முறை கொண்டுவரப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன்ஸ், சேலம் மாம்பழம் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இதனால், வேறு பகுதியில் மேற்கண்ட உணவுப் பொருட்களை அதே பெயரில் உருவாக்க முடியாது.

biryani mar 9

இந்நிலையில், மிகப் பிரபலமான ஹைதராபாத் பிரியாணிக்கு புவிசார்குறியீடு பெறுவதற்காக டெக்கான் பிரியாணி கூட்டமைப்பினர் சென்னையில் உள்ள புவிசார் குறியீடு அலுவலகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தனர்.புவிசார் குறியீடு ஒரு உணவுக்கு வழங்க வேண்டும் என்றால், அந்த உணவு நீண்ட பாரம்பரியம் கொண்டதற்கான வரலாற்று ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். ஆனால், ஹைதராபாத் பிரியாணிக்கு அப்படிப்பட்ட ஆவணங்கள் எதும் இல்லாத காரணத்தால் ஐதராபாத் பிரியாணிக்கு புவிசார் குறியீடு அளிக்கக் கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரா தகவல்:

இந்த பிரியாணியின் வரலாற்றை பற்றி ஆராய்ந்தால் அது நம்மை கி.பி 2-ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்கிறது. அதாவது அந்தக் காலங்களில் அரிசி, இறைச்சி, நெய், மஞ்சள், கொத்துமல்லி தூள், மிளகு, புன்னை இலை ஆகியவற்றை சேர்த்து செய்யப்பட்ட ‘ஊன் சோறு’ எனும் உணவு வகை இன்றைய பிரியாணியோடு ஒத்துப்போகிறது. இதைத் தவிர்த்து பார்த்தால் பிரியாணியின் தோற்றம் குறித்தும், அது இந்தியா வந்து சேர்ந்த விதம் பற்றியும் நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. இவற்றில் பரவலாக நம்பப்படும் கருத்து, பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும் ‘பிர்யான்’ எனும் பாரசீகச் சொல்லிலிருந்து பிறந்ததாக சொல்லப்படுவது. அதாவது பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்து, பின்னர் பிரியாணி சமைக்கும் முறை இந்தியாவில் உருவானது..\

அதிலும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பெரும்பாலும் அசைவப் பிரியர்கள் அனைவராலும் ஹைதராபாத் பிரியாணி விரும்பப்படுகிறது. இந்திய சமையல் பாணியின் அங்கமாகக் கருதப்படும் ஹைதராபாத் பிரியாணி முன்பு நிஜாம் அரண்மனை சமையலறையில் மீன், காடை, இறால், மான் மற்றும் முயல் உட்பட 49 வகைகளில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரியாணி உலகப் பிரபலம் என்பதால் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் ஹைதராபாத் பிரியாணி உணவகங்களை பார்க்க முடிகிறது.