நேஷனல் காபி டே!

நேஷனல் காபி டே!

ன்றைய (குட்) மார்னிங்கில் காபியைக் குடித்துக் கொண்டே இதைப் படிப்பவர்கள், அடடே இன்னிக்கு ஒரு காபி எக்ஸ்ட்ரா வேணும்னு கேட்டு வாங்கிக் குடிங்க, வாழ்க்கையை காபியை சுவைப்பது போல சுவைக்கணும் என்பார்கள். காபியின் சுவையே அதை மெதுவாக சுவைப்பதில் தான் இருக்கிறது. அன்றைய கால கடுங்காப்பியிலிருந்து, இன்றைய தின ஃகேபுசினோ(capuchino) வரையில், காபியின் எல்லா வகைகளுமே எல்லோருக்கும் ஃபேவ்ரேட் தான்..!

ஏழை முதல் பணக்காரன் வரை இந்த கருப்பு நிறத்தழகியின் போதைக்கு மயங்காதவர்கள் இல்லை.ஒரு நாளைக்கு பத்து தடவைக்கு மேல் காபி குடிப்பவர்களைக் கூட பார்க்கிறோம். காலை முதல் இரவு வரையில் காபியில் பிறந்து காபியிலேயே வாழும் காபி பிரியர்களைப் பார்க்கும் போது திகைப்பும் வியப்பும் சேர்ந்தே வருகிறது. அந்த காலம் முதல் இந்த காலம் வரையில் காபிக்கு உண்டான மவுசும் அதன் மீதான மோகமும் வற்றாத ஆறாகவே காட்சியளிக்கிறது. என்ன தான் காலாச்சார மாறுபாடுகள் வந்து போனாலும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை வீட்டிற்கு வந்தவர்களை காபி கொடுத்து உபசரிக்கும் வழக்கம் நம்மிடையே மாறாமல் தான் இருக்கிறது. வீட்டிற்கு வந்தவர்களை காபியாவது சாப்பிட்டுட்டு தான் போகனும் என்று அன்பு கலந்த வற்புறுத்தலுடன் காபியை கொடுத்து குடிக்கச் செய்யும் போது உறவுகளின் மீதான அன்பும் பாசமும் மனதில் ஒரு பாசப் பிணைப்பை ஏற்படுத்தி விடுகிறது.

காஃபி தயாரிப்பது ஒரு கலை. இது ஒரு மொழி என்று கூட சொல்லலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மனிதன் சிறந்த காஃபியை நோக்கிப் பயணம் செய்கிறான். இன்று உலகின் பல நாடுகளில் தயாரிக்கப்படும் பிரபல காஃபி வகைகள் இவை: எஸ்ப்ரசோ (Espresso), எஸ்ப்ரசோ மாச்சியாடோ (Espresso Macchiato), காப்பசீனோ (Cappuccino), காபி லட்டே (Cafe Latte), மோக்கசினோ (Mocha chino), அமெரிக்கானோ (America-no), ஐரிஷ் காபி (Irish coffee), டர்கிஷ் காபி (Turkish coffee), வெள்ளை காபி (White coffee).

தமிழ்நாட்டில் காஃபி என்பது லைஃப்லைன். காலையில் ஃபில்ட்டர் காஃபி இல்லையென்றால் பைத்தியமே பிடித்துவிடும். அந்தளவுக்கு மக்கள் காஃபிக்கு அடிமைகள். “மிகச்சிறந்த ஃபில்டர் காஃபியை இனிமேல்தான் குடிக்கவேண்டும்” என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவதுண்டு. ‘கும்பகோணம் டிகிரி (ஃபில்டர்) காஃபி’ கடைகளை இன்று ஹைவேக்களில் பரவலாகக் காண்கிறோம். பெரிய பித்தளை காஃபி ஃபில்டரில் டிகாக்க்ஷன் மற்றும் வாயகன்ற பாத்திரத்தில் கொதிக்கும் பால். பித்தளை டபாரா டம்ளரில் நுரை பொங்க கொடுப்பார்கள். சுற்றி கார் பார்க்கிங்.

‘கும்பகோணம் டிகிரி ஃபில்டர் காஃபியின்’ வரலாறு 1960 களில் கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்குப் பக்கத்தில் மொட்டைக்கோபுர வாசலில் இருந்த ‘லெட்சுமி விலாஸ் காபி கிளப்பிலிருந்து’ தொடங்குகிறது. கடையின் உரிமையாளர் காஃபி தயாரிப்பவர் எல்லாம் ஒருவரே. அவர்தான் பஞ்சாமி அய்யர். சொட்டு தண்ணீர் கூட சேர்க்கமால் காய்ச்சிய பாலில் அப்போதைக்கப்போது வறுத்து அரைத்த காஃபி பவுடரில் ஒரேயொரு முறை மட்டுமே டிகாக்ஷன் எடுத்து மணக்க மணக்க காஃபி கலந்து தருவது பஞ்சாமி அய்யரின் ட்ரேட் சீக்ரெட் . கும்பகோணத்தில் இவரின் விசிறிகள் பெரிய மிராசுதாரர்களாம். சங்கீத வித்வான்கள் கும்பகோணம் வந்தால் இங்கு காஃபி குடிக்காமல் போனதில்லையாம். வேறு இடங்களில் கச்சேரிக்கு போனபோது ‘கும்பகோணம் காஃபி மாதிரி வராது’ என்று சிலாகிக்க அதுவே சிறந்த ஃபில்டர் காஃபியின் அடையாளமாகப் போய்விட்டது.

இன்றைய கால கட்டத்தில் பணி சுமையையும் பொருளாதார நெருக்கடிகளையும் தன் தோளில் வைத்து சுமந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு தங்கள் கைப்பிடி இதயத்திற்குள் கடலென பொங்கி வழியும், துயரங்களை வடிக்க வடிகால்கள் இல்லாமல் போனது. அந்த வடிக்காத துயரங்களை வடித்த காபியை பருகிக்கொண்டே தன் பாசத்திற்குரியவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது மனம் லேசாகிறது. அப்போது காபி வெறும் பானமாக மட்டுமில்லாமல் நமது மனச்சுமையை இறக்கி வைக்க சில மணித்துளிகளை ஒதுக்கிக் கொடுத்த கருணை தேவனாகவும் காட்சியளிக்கிறது.

அலுவலகங்கள், பார்ட்டிகள், மால்கள் என காபி கலக்காத இடமே கிடையாது. காபிக் கடைகள் எல்லாம் மாறி இன்று காபி ஷாப்கள் வந்து விட்டது. அதிகமாக பொழுதைக் களிக்க சிறந்த இடங்களில் ஒன்று காபி ஷாப். இப்போது சூடு பிடிக்கும் பிஸ்னஸுகளில் முக்கியமானதாகவும் மாறிவிட்டது. இன்றைய இளைய தலைமுறையினரின் நட்பும், காதலும் பெரும்பாலும், காபி சாப்பிடலாமா? என்ற வார்த்தையிலேயே துவங்குகிறது. நண்பர்களுடன் அமர்ந்து காபியைக் குடித்துக் கொண்டே அரட்டை அடிக்கும் போது, அந்த அர்த்தமற்ற கேலிப் பேச்சுகள் கூட அளவு கடந்த இன்ப வெள்ளத்தில் நம்மை தள்ளி விடுகிறது.

இப்படியாக காபியை குடித்துக் கொண்டே தங்கள் மனங்களைப் பறிமாறிக் கொள்ளும் சில நண்பர்கள் கூட, காபி துகள்கள் சல்லடைக்குள் சிக்கிக் கொள்வதைப் போன்று, காதல் வலையில் சிக்கிக் கொள்கின்றனர். பிறகு என்ன? தன் மனதுக்கு பிடித்தவருடன் காபியை கொஞ்சம் கொஞ்சமாக பருகிக்கொண்டே பாலுடன் கரைந்த காபியின் துகள்களாய் காதலில் கரைந்து வாழ்க்கையில் இனிமையை சேர்ப்பதும் இளமையின் வரம் தான்.

இப்படி காபி நமக்களித்த அனுபவங்கள் எண்ணிலடங்காதவை. சிலர் காபி உடலுக்கு நலம், நலமில்லை என விவாதித்துக் கொண்டிருக்க, கிடப்பது எல்லாம் கிடக்கட்டும் என்று, அந்த விவாதங்களை எல்லாம் காபியை சுவைத்துக் கொண்டே சுவைக்கும் காபி பிரியர்களுக்கு காபியின் மீதான காதல் சற்றும் குறைந்ததாக தெரியவில்லை.

சில பேரு அச்சச்சோ இண்டர்நேஷனல் காபி டே அக்டோபர் 1 ம் தேதி-ன்னு குரல் கொடுத்தா? அன்னிக்கும் எக்ஸ்ட்ரா ஒரு காபி குடிப்போம்.. என்ன நான் சொல்றது!

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!