தவறான புள்ளிவிவரங்களை வழங்கும் கதாநாயகர்கள்!
இந்தியாவை அச்சுறுத்திய கோவிட் -19 பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வரும் வேளையில், குறைந்த அளவிலான தொற்று கண்டறியப்படுகிறது, ஜூன் ஏழாம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, அதிக அளவில் இந்தியர்களுக்குத் தடுப்பூசி போடுவதை எளிமையாக்கும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தடுப்பூசி வாங்குவதற்கான உலகளாவிய கொள்முதலில் மாநிலங்களை அறிவுறுத்துவதற்கு மாறாக, மத்திய அரசு இப்போது தடுப்பூசிகளை வாங்கி, 75 % இலவசத் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்குவதே அந்தத் திட்டம்.
அதிகரித்த இறப்புகள்…
பெருந்தொற்றின் பாதிப்பில் பெரும்பாலான இந்தியர்கள் துயருற்ற நிகழ்வுகள் முகத்தில் அறைய, உலகையே பெருந்தொற்றின் பிடியிலிருந்து காக்கும் தடுப்பூசித் திட்டத்தை முரசறைந்த அவரது ஆரம்ப கால முழக்கங்கள் மெல்லத் தேய்ந்து, இந்த மாற்றங்களில் வந்து நிற்கிறது, குறைந்தபட்சம் இந்த மாற்றங்கள் மூலம் ஓரளவு நிர்வாகத்தை மீட்டெடுக்க முடியும். ஆனால், இந்தியர்கள் முழு அடைப்பிலிருந்து வெளிப்படும்போது, சூழ்ந்திருக்கும் இருளை உதறித் தள்ளுவது அவ்வளவு எளிதானதல்ல. அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை சென்ற மாதத்தை விட சீரான அளவில் குறைந்துள்ளது; ஒரு நாளில் 4000 என்கிற உச்சக்கட்டத்தில் இருந்து இது வீழ்ச்சி அடைந்திருக்கிறது; ஆனால், ஒன்றிய அரசின் இறப்பு எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் உண்மையான எண்ணிக்கையை மூடி மறைப்பதில் தீவிரமாக இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து கிடைக்கின்றன.
இந்த வேறுபாடு ஒரு குறைந்த அளவிலான விகிதத்தில் குழப்பங்கள் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்கிற வாதத்தைத் தாண்டி, இந்திய அரசு நிர்வாகத்தின் மெத்தனத்தால் பூசி மெழுகப்பட்ட பல உண்மைகளின் விகிதமாக இருக்கிறது. ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுக்கான தேவையின் அளவைக் குறைத்து மதிப்பிடுவதற்கு அதிகாரிகள் அழுத்தப் பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் பேரழிவு மோசம் அடைந்திருக்கிறது. ‘தி எக்கனாமிஸ்ட்’ ஊடகத்துடன் இன்னும் சில தகவல் சேகரிக்கும் அமைப்புகளும், நடுநிலையான தொற்றுநோய் நிபுணர்களும் இணைந்து செயல்பட்ட ஒரு தகவல் சேகரிப்பில், இந்தியா, அதிகாரப் பூர்வமான இறப்பு எண்ணிக்கையை விட ஐந்து முதல் ஏழு மடங்கு ‘கூடுதல் இறப்புகளை’ சந்தித்துள்ளது என்று கணக்கிட்டுள்ளன. இந்தியாவின் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை தற்போது மூன்றரை லட்சத்துக்கும் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா காமன்வெல்த் கல்லூரியின் கிறிஸ்டோபர் லெஃப்லரின் சமீபத்திய ஆய்வறிக்கை, தொற்று நோயின் தொடக்கம் காரணமாக 18 லட்சம் முதல் 40 லட்சம் இறப்புகள் வரை இருக்கலாம் என்கிற கடுமையான மதிப்பீட்டோடு வெளியாகி இருக்கிறது. தனது அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையில் இருக்கும் முரண்பாடுகளை இந்தியா இப்போது தீவிரமாக மறு பரிசீலனை செய்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்ட ஊடகம் ஒன்றின் ஆய்வறிக்கை, காப்பீட்டு உரிமை கோரல்களை மையமாகக் கொண்டு இந்த இறப்பு எண்ணிக்கையானது அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை விட ஆறு மடங்கு அதிகம் என்கிறது. இத்தகைய மதிப்பீடுகள், உறுதியற்ற தரவுகளில் இருந்தோ, நிறுவனங்களின் பணியாளர் மரணக் குறிப்புகளில் இருந்தோ, தவறான மற்றும் சில நேரங்களில் நம்ப முடியாத உள்ளூர் நிர்வாகத் தரப்புகள் வழங்கிய தகவல்களிலிருந்து மதிப்பிடப்பட்டிருக்கலாம்.
ஆனால், ஒரு புத்தம் புதிய புள்ளிவிவரக் குழுவானது ‘பிரஷ்னம்’ என்கிற பெயரில், வட இந்தியாவின் இந்தி பேசும் மாநிலங்களில், குறிப்பாக கிராமப்புறத்தில் 15,000 நபர்களிடம் ஒரு தகவல் சேகரிப்பில் ஈடுபட்டது; இதில் “தங்கள் வீடு அல்லது அக்கம்பக்கத்தில் உள்ள எவரும் கோவிட்-19 பெருந்தொற்றால் இறந்திருக்கிறார்களா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. பதிலளித்த ஒவ்வொரு ஆறு பேரில் ஒருவர் “ஆம்” என்று குறித்திருக்கிறார்கள். 15,000 எண்ணிக்கையில் இது 17 % ஆகும். ‘ப்ரஷ்னம்’ நிறுவனர் ராஜேஷ் ஜெயின் இது குறித்துக் கூறுகையில், “இதே போல ஒரு ஆய்வு சிக்காகோ கல்லூரியால் அமெரிக்காவில் நடத்தப்பட்டது; அதன் முடிவுகளில்19 சதவீதம் பேர் தங்கள் நெருங்கிய உறவினரையோ, அக்கம் பக்கத்தினரையோ பெருந்தொற்றால் இழந்திருக்கிறார்கள் என்று உறுதி செய்திருக்கிறது.
இது ஒவ்வொரு பத்து லட்சத்துக்கும் 1800 என்கிற எண்ணிக்கையில் வருகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அமெரிக்காவின் இறப்பு எண்ணிக்கையானது பத்து லட்சத்துக்கு 230 என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் இந்த முரண்பட்ட இறப்பு விகிதம் ஒருவேளை உண்மையாக இருக்குமேயானால், இந்தியாவின் இறப்பு எண்ணிக்கை குறைந்தபட்சம் 25 லட்சம் ஆக இருக்கும் என்று அதிர்ச்சி அளிக்கிறார். ‘சி ஓட்டர்’ என்ற அனுபவம் வாய்ந்த கருத்துக் கணிப்புக் குழு, கடந்த 12 மாதங்களாக ஜூன் 12, 2021 வரை தொடர்ந்து பெருந்தொற்று இறப்பு எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களைச் சேகரித்திருக்கிறது. இந்தியா முழுவதும் பத்து மொழி பேசுபவர்களின் பரந்த தொகுப்பில் இருந்து பெருந்தொற்று இறப்புகள் பற்றிய தகவல்களை ஒவ்வொரு நாளும் சேகரித்து வருகிறது.
அந்தக் குழுவினர் ப்ரஷ்னத்தின் கேள்விகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கேள்வியை முன் வைத்தார்கள். அதில் “குடும்பத்தின் நேரடி உறுப்பினர்கள் யாராவது பெருந்தொற்றால் இறந்தார்களா?” என்ற கேள்வி அவர்களிடம் கேட்கப்பட்டது. இந்தியாவின் முதல் அலையைத் தொடர்ந்து செப்டம்பரில் 1 % ஆக இருந்த “ஆம்” என்கிற பதில் விகிதம் ஏப்ரலில் 7.4 % ஆக அதிகரித்திருக்கிறது. ஏறத்தாழ 2.5 கோடி குடும்பங்களில் சேகரிக்கப்பட்ட இந்தத் தகவல்களின் அடிப்படையில் பெருந்தொற்று காலத்தின் மையத்தில் 18,30,000 இந்தியர்கள் வரை இறந்திருக்கலாம் என்கிறார் சி ஓட்டரின் தலைவர் யஷ்வந்த் தேஷ்முக். கணக்கெடுப்பின் மாதிரி வடிவமானது இந்தியாவின் அதிகாரப்பூர்வக் கணக்கெடுப்பு மாதிரியோடு பொருந்துவதால் இந்தப் புள்ளி விவரங்கள் சரியானவையே என்கிறது சி ஓட்டர்.
இந்திய அரசும், அதிகாரிகளும், கூடுதலாக ஊடகங்களும், ஏன் இப்படி ஏமாற்றும் ஒரு புள்ளிவிவரத்தை வழங்குகிறார்கள்? என்ற கேள்விக்கு விடை அளிக்கையில், தனது தனிப்பட்ட புள்ளிவிவரங்கள் குறித்துத் தான் மிக உறுதியாக இருப்பதாகக் கூறும் தேஷ்முக், இந்தப் பொய்யான தகவலுக்கு இந்திய ஊடகங்களின் ‘எண்ணியல் அறியாமை’ ஒரு காரணம் என்கிறார். “இந்தியாவின் பல அடுக்கு அதிகார மையங்களுக்கு வலுவான புள்ளிவிவரங்களை உருவாக்கும் திறன் இல்லை” என்ற காரணியை அவர் முற்றிலுமாக நிராகரிக்கிறார். “இது திறனைப் பற்றியது அல்ல, இதுவே அவர்களின் விருப்பமாக இருக்கிறது. காரணத்தோடு தான் அவர்கள் தவறான புள்ளி விவரங்களை வழங்குகிறார்கள்” என்றும் அவர் கூறுகிறார்.
இது அரசின் பக்கத்தில் இருந்தோ, குறிப்பிட்ட சமூக அரசியல் பிரிவில் இருந்தோ நிகழும் தவறல்ல. சமூகத்தின் எல்லாக் கோணங்களிலும் நிகழும், “நமக்கென்ன?” என்கிற மெத்தனமான தகவல் பிழையின் துயரம். ‘ஏதுமற்ற, கேட்பாரற்றவர்களின் இறப்பு’ என்பது உலகம் முழுவதும் இப்படித்தானே நிகழ்கிறது; புள்ளி விவரங்களின் கதாநாயகர்கள் ஏழைகள் மட்டுமல்ல, அவர்களின் பிணங்களும் கூடத்தான்.
நன்றி : தி எகனாமிஸ்ட்
தமிழில் : கை.அறிவழகன்