பஞ்சாப் பேரவைத் தேர்தல் 2022: ஆம் ஆத்மி அலையடிக்குமா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

பஞ்சாப் பேரவைத் தேர்தல் 2022: ஆம் ஆத்மி அலையடிக்குமா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ஞ்சாப் மாநிலம் இந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்று. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிறியதாக தோற்றமளிக்கும் பஞ்சாப் இந்தியாவின் தானியக் களஞ்சியம். சென்றாண்டு கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களால் பஞ்சாப் கொதிநிலையில்தான் இருக்கிறது. இச்சூழலில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் யார் ஆட்சியமைப்பார்கள் எனும் கேள்வி ஏற்கனவே பேசப்பட்டு வரும் ஒன்றாகும். வட இந்திய ஊடகங்கள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை முன் வைத்து பஞ்சாப் தேர்தலை எடைபோட்டு வருகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டில் டெல்லியில் மூன்றாவது முறையாக பதவியேற்ற கெஜ்ரிவால் முதலில் பாஜகவுடன் மோதல் போக்கைத்தான் கடைபிடித்தார். இப்போது கொண்டுவரப்பட்டுள்ள துணைநிலை ஆளுநருக்கான முழுமையான அதிகாரங்கள் அளிக்கும் சட்டம் டெல்லி அரசை முக்கியத்துவம் அற்றதாக்கியுள்ளது. மக்கள் மனதில் பாஜகவின் மீது மீண்டும் வெறுப்பேற்றும் விதமாக இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே கிரண்பேடிக்கு புதுவையின் நாராயணசாமிக்கும் இடையிலான மோதலில் கடைசியில் சென்னை உயர்நீதிமன்றம் துணை நிலை ஆளுநருக்கே அதிக அதிகாரமுள்ளது என தீர்ப்பளித்தால் கோபத்தில் மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்து விட்டனர். பாஜகவைப் பொறுத்தவரை மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் நன்கு காலூன்ற வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் தங்களது அதிகார வெறி போக்கினால் பஞ்சாபையும், டெல்லியையும் இழந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.

கடந்த 2017 ஆம் ஆண்டுத் தேர்தலில் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த அகாலி-பாஜக கூட்டணி ஆட்சியை நீக்கி விட்டு முன்னாள் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அமரிந்தர் சிங்கை முதல்வராக்கினர். பெரும் வியப்பூட்டும் வகையில் 112 இடங்களில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களை பெற்று முதன்மை எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. ஆகையால் இப்போதுள்ள சூழலில் எந்தக் கட்சி 2022 ஆம் ஆண்டில் ஆட்சியமைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆளுகின்ற காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் முதன்மை எதிர்க்கட்சி தகுதி சில காரணங்களால் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், கேரளம் இவற்றில் வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் ஆளும் கூட்டணியினால் 18 இடங்கள். மராட்டியத்தில் ஆளுங் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் பஞ்சாபில் அமரிந்திர் சிங் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. சென்றமுறை அகாலிகளின் மீது இருந்த வெறுப்பினால் காங்கிரஸ்சிற்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால் எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி கட்சி நிலைபெறும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை. இப்போது அகாலிகளும் பாஜகவுடனான கூட்டணையை முறித்துக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்துள்ளனர். இது முழுமையாக சாதியவாத கூட்டணி என்றே சொல்லலாம். பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவுனர் கன்ஷிராம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனால் அக்கட்சி உத்திரபிரதேசத்தில்தான் ஆட்சியைப் பிடித்தது. சமீபகாலமாக அங்கும் செல்வாக்கு இல்லை. அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது கொக்கு தலையில் வெண்ணெய்யை வைத்து அதைப் பிடிப்பது போன்றது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியினர் முழு பலத்துடன் அடுத்த ஓராண்டு பணியாற்றினால் ஆட்சியில் அவர்கள் அமரும் வாய்ப்பிருப்பதாகவே முன்னணி நாளேடுகள் எழுதி வருகின்றன.

அத்தோடு இல்லாமல் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றமுறை ஐ பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். அதனால் பிரசாந்த் கிஷோர் அவருக்கு வேலை செய்தார். அதே போல மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் பிரசாந்த் கிஷோர் ஆளுங்கட்சிகளை ஏற்படுத்தினார் என்று சுட்டிக்காட்டப்படுவதால் பஞ்சாப் தேர்தலில் அவர் மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உதவலாம். மேலும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதையும் முடிவு செய்ய வேண்டும். இப்போது மாநில தலைவராக இருக்கும் பகவந்த் மானையே முதல்வர் வேட்பாளராக நிறுத்துவார்களா என்பது தெரியவில்லை. தவிர மான் கட்சியின் ஒரே மக்களவை உறுப்பினரும் ஆவார். ஆம் ஆத்மி கட்சியின் பெரும் சொத்து அதன் டெல்லி நிர்வாகம். டெல்லியை ஒப்பிடும்போது பஞ்சாப் பணக்கார மாநிலம்தான். ஆனாலும் சமூக ஏற்றத்தாழ்வுகள் கூர்மையாகவுள்ள மாநிலம். டெல்லியில் கெஜ்ரிவால் அரசு ஊழலற்ற அரசாக இருந்து பல இலவசங்களையும், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் மிக அதிகமான சாதனைகளை படைத்துள்ளதும் பஞ்சாப் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. அத்துடன் மாநிலத்தில் கட்சியை கவனித்துக் கொள்ள டெல்லி பேரவை உறுப்பினரான ஜர்னெய்ல் சிங்கை அரவிந்த் நியமித்துள்ளார். அவரும் அடிக்கடி பஞ்சாப்பிற்கு வருகை புரிந்து கட்சிக்கு வலு சேர்க்கிறார். தொண்டர்பலமே கட்சியின் வெற்றிக்கு அடிப்படை என்பதை ஆம் ஆத்மி கட்சி உணர்ந்துள்ளதால் எப்படியேனும் பஞ்சாபில் ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் என்று கருதுகிறது. அத்தகைய வெற்றியே 2024 ஆம் ஆண்டில் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமராக முன்னிறுத்த உதவும் என்றும் நம்புகிறது.

ஐந்தாண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலை இன்று இல்லைதான். கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரேயொரு இடத்தில் வென்றுள்ளதால் 2022 ஆம் ஆண்டிலும் இதே எதிரொலிக்கும் என்றும் சிலர் கூறுகிறார்கள். அது மட்டுமின்றி பிரசாந்த் கிஷோர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வேலை பார்த்தால் அது ஆம் ஆத்மி கட்சிக்கு பாதகமாகலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும் பஞ்சாப் ஆம் ஆத்மியில் உட்கட்சி சண்டை எப்போதும் இருக்கிறது என்றும் அது கூட தோல்விக்கு காரணமாகலாம் என்றும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். இப்போது கூட்டணிகளை மாற்றிப்போட்டிருக்கும் வேளாண் சட்டங்களை ஆம் ஆத்மி கட்சியும் எதிர்க்கிறது. ஆயினும் உச்ச நீதிமன்றம் சட்டத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தால் அது நிலைமையை எதிர்பாராத விதமாக பாஜகவிற்கு ஆதரவாகவும் மாற்றலாம். பாஜகவும் இந்து ஓட்டுக்களை மட்டும் குறி வைக்காமல் தங்களுடைய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி போன்றவர்கள் மூலம் தங்களை ஒரு மாற்று சக்தியாக முன் நிறுத்தலாம்.

வாக்குகள் அடிப்படையில் கண்டால் காங்கிரஸ்சும், அகாலிகளுமே முதல் இரண்டு இடங்களில் இருப்பார்கள். ஆகையால் ஆம் ஆத்மி கட்சி பேரளவில் தொண்டர்களை ஈர்த்தால் மட்டுமே இரண்டு வலிமையான கட்சிகளை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க முடியும்.

ரமேஷ்கிருஷ்ணன்பாபு

Related Posts

error: Content is protected !!