கனிமொழி கருணாநிதிக்கு ஹேப்பி பர்த் டே💐

கனிமொழி கருணாநிதிக்கு ஹேப்பி பர்த் டே💐

🦉திமுக துணைப் பொதுச் செயலாளரும், நம் ஆந்தை குழு நண்பரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான மக்கள் தலைவி கனிமொழி கருணாநிதிக்கு ஹேப்பி பர்த் டே💐

திராவிடப் புதல்வி என அழைக்கப்படும் கனிமொழி கருணாநிதி .திராவிட இயக்கத்தின் பின்புலத்தில் இருந்து வந்த கனிமொழி தன் தந்தை கருணாநிதியைப் போல, எழுதுவதிலும் வாசிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.இலக்கியம் மற்றும் பத்திரிகை துறையிலும் ஆர்வம் கொண்டு பிறகு தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பாக இந்தியாவில் ‘தி இந்து’ஆங்கில பத்திரிக்கையிலும் , சிங்கப்பூரில் ‘தமிழ் முரசு’இதழிலும் பணியாற்றியுள்ளார்.அவரது ‘கருவறை வாசனை’ என்னும் கவிதைத் தொகுப்பு கனிமொழியை மிகச் சிறந்த நவீனக் கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காட்டியது என்றெல்லாம் சொல்லும் முன் சின்ன ரிமைண்டர்.

ஆண்டு மற்றும் ஏனைய நினைவுகளைக் கிளற நேரமில்லை.. சென்னை மெரீனாவில் இன்னொரு முகமாக இருந்தது சீரணி அரங்கம்.. அந்த சீரணி அரங்கத்தின் வரலாறு சுவாரஸ்யமானது. சீரணி அரங்கம் அண்ணா ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அண்ணா உருவாக்கிய ‘சீரணிப் படை’ என்கிற அமைப்புதான் சீரணி அரங்கம் என்கிற கட்டடத்தைக் கட்டியது. பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்காக சென்னை மெரினா கடற்கரையில் அரங்கத்துடன் கூடிய மேடையை அமைத்தார்கள் சீரணிப் படையினர். இங்கேதான் அரசியல் பொதுக் கூட்டங்கள், விழாக்கள், மத நிகழ்ச்சிகள் என்று தொடர்ந்து நடந்துவந்தன. 30 ஆண்டு கால அரசியல் அதிரடிகளுக்கு அந்த மேடைதான் மௌன சாட்சியாக இருந்துவந்தது.சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் இதே கடற்கரையில் காந்தி, பாரதி, சுப்ரமணிய சிவா போன்ற தேசியத் தலைவர்கள் முழங்கிய இடத்துக்கு திலகர் கட்டம் என்று பெயர் வைத்து அழைத்தார்கள். இதன் அருகேதான் சீரணி அரங்கத்தை அந்நாளில் அமைத்து இருந்தனர். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்ற சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசியல் தலைவர்களும் இந்த சீரணி அரங்கில் பேசி இருக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் கூடி பேச்சைக் கேட்பதற்கு வசதியாக இருந்தது அந்த அரங்கம் என்பதால் அரசியல்வாதிகளுக்கு சீரணி அரங்கத்தின் மேல் எப்போதும் கூடுதல் விருப்பம் இருந்தது. அப்பேர்பட்ட ஸ்ரீரணி அரங்கத்தில் நடந்த ஒரு கூட்ட நிகழ்வுக்கு வந்திருந்த கனிமொழியை நான்தான் என் யாஷிகா டி 20 கேமராவில் க்ளிக் செய்தேன்.

அப்புகைப்படத்துடன் கனிமொழி குறித்து பாக்ஸ் செய்தியுடன் மேற்படி கூட்டம் குறித்து இப்போதைய அப்பள – அப்போதைய விகடன் ராவ் சாரிடம் கொடுத்த ஆர்டிக்கிள் உடனடியாக விகடனில் பிரசுரிக்க முடிவு செய்து லே அவுட், பேஜ் எல்லாம் செய்தாயிற்று.. அச்சேதியை கடைசி நிமிடம் கண்ணுற்ற என் வாழ்க்கையில் ரொம்ப அக்கறைக் காட்டி செதுக்கிய நல்லுள்ளம் ஒன்று பகீரத பிரயத்தனம் செய்து அதுவரை கனிமொழின் முகம் எவருக்கும் தெரியாது.. – அதனால் கனிமொழி எக்ஸ்குலூசிவ் பேட்டி எடுத்து கவர் ஸ்டோரிக்கு வழி செய்வோர் என்றெல்லாம் சொல்லி என் ரிப்போர்ட்டிங்கை அப்படியே அப்போது வந்துக் கொண்டிருந்த ஜூனியர் போஸ்ட்=டுக்கு திசை மாற்றி விட்டார்(கள்)..பின்னர் நடந்ததெல்லாம் இப்போது வேண்டாம்..! ஆக, கனிமொழி ஊடக வெளிச்சம் என் ஃப்ளாஷ் மூலம் நிகழ்ந்தது என்பது மட்டும் இப்போது நினைவுக்கு வருகிறது,

பிறிதொரு சமயம் ஏதோ ஒரு புத்தாண்டு பிறக்கும் நாள் அன்று நள்ளிரவு 12 மணிக்கு சில பல விஐபிகளை போனில் (அப்போது லேண்ட் லைன் மட்டுமே) அழைத்து கடந்து போன ஆண்டில் கற்றதென்ன? வரும் ஆண்டின் லட்சியமென்ன? என்று வினாவுடன் காண்டாக்ட் செய்தவர்களில் கனிமொழியும் ஒருவர்.. அந்த இரவில் என் அழைப்பை எடுத்தது கலைஞர் என்பதும் , அவரிடம் என்னை அரிமுகபடுத்திக் கொண்டு கனிமொழியிடம் பேச வேண்டும் என்று சொன்னதும் தன் மகளை அழைத்து பேச வைத்தார் என்பதையும் இப்போது நினைத்தால் .. கண்கள் பனிக்கின்றன.. இதயம் கனக்கின்றது! (ஆந்தை ரிப்போர்ட்டர்)

எனி வே முழுசாக கவிஞர்,ஜர்னலிஸ்ட் ஆன கனிமொழி ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் எழுதி வெளி வந்து கொண்டிருந்த எழுத்துக்கள் பின், ‘கறுக்கும் மருதாணி’என்ற தொகுப்பாகவும் வெளி வந்தது.அவரது முற்போக்கான,சமூக, அரசியல் பெண்ணியக் கருத்துக்கள் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகவும் அதே சமயம் நவீனத்துவ சிந்தனைகளின் நீட்சியாகவும் அவரை இனம் காட்டியது.2001 ஆம் ஆண்டு நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டார்.அப்போது சென்னை சென்ட்ரல் அருகே இருந்த மத்திய சிறைச்சாலை வாசலில் தர்ணா போராட்டத்தில் கருணாநிதி ஈடுபட்டபோது அவருக்கு பக்கபலமாக நின்ற கனிமொழியின் புகைப்படங்கள் அவ்வளவு எளிதில் தமிழ் மக்களால் மறக்க முடியாது.

நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக விளங்குகிறது திமுக. டெல்லி தேசிய அரசியலில் தமிழக முகமாய் பார்க்கப்படுகிறார் கனிமொழி.அப்படி பார்க்கப்படும் கனிமொழி தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்பது கருணாநிதியின் நீண்ட நாள் ஆசையாகவே இருந்து இருக்கிறது.அதை கனிமொழியிடம் பேசி சம்மதிக்க வைத்தவர் துரை முருகன் ஆவார்.அதுவரை கருணாநிதியின் இலக்கிய வாரிசாக இருந்து வந்த கனிமொழி ,2007 ஆம் ஆண்டு முதன் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அப்போது இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மையப்படுத்தி தனது முதல் உரையை நிகழ்த்தினார் கனிமொழி‌.மொத்தமாக பத்து நிமிடம் நீடித்த அந்த உரையில் அனைவரையும் அசர வைத்தார் கனிமொழி.அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்,உங்களுடைய அறிவார்ந்த பேச்சுக்கு வாழ்த்துக்கள் என ஒரு சீட்டில் எழுதி கனிமொழியிடம் கொடுக்கச் செய்துள்ளார்.

கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடுகள் வழங்கும் மசோதாவின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி,’நான் பெரியார் மண்ணில் இருந்து வந்துள்ளேன்’ எனத் தொடங்கி அவரது கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார்.அப்போது கனிமொழி பேசி கொண்டிருந்தபோது துணை சபாநாயகர் உங்கள் நேரம் முடிந்து விட்டது என ஹிந்தியில் சொல்லவே ,அதற்கு கனிமொழி ‘எனக்கு புரியக்கூடிய மொழியில் பேசவும்’ என பதிலடி கொடுத்தார்.அவரது அந்த பேச்சு பரவலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கூட சாதாரண மக்களுக்கு புரியும்படி,பேச வேண்டும் என நாடாளுமன்றத்தில் கனிமொழி சிரித்து கொண்டே பேசியது அனைவரையும் ஈர்த்து ரசிக்க வைத்தது.அன்றைய தினத்தில் இது பலரது வாட்ஸ்அப் ஸ்டோரியாக இருந்தது.நாடாளுமன்றத்தில் மகத்தான பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள் கொள்கைகளுக்கு வலு சேர்த்ததற்காகவும் கூறி கனிமொழிக்கு ‘சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது’ கடந்த 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

பின்னர் 2019 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் தேர்தலில் நின்று,தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை விட மூன்றரை லட்சம் அதிக வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.இப்படியான கனிமொழிக்கும் துயர் பக்கங்கள் சில உள்ளன.2G அலைகற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக , கனிமொழி மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு ஆறு மாதம் பீகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒருநாள் கனிமொழியிடம் ‘நீங்கள் மிகப்பெரிய அரசியல்வாதி சமைப்பிங்களா ? என கேள்வி எழுப்பியுள்ளனர்.அதற்கு கனிமொழி , ‘என் அப்பா முதலமைச்சராக இருந்திருக்கிறார்.ஆண் அரசியல்வாதிகளிடம் இப்படியான கேள்விகள் எழுப்புவதில்லையே! ’என்று ஆண் பெண் சமத்துவத்தை பற்றி ஒற்றை கேள்வியால் பதில் அளித்தார்‌.இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மேடைகள் தனது கவிதைகள் என எல்லாவற்றிலும் பெண்களுக்கான உரிமைகளை பாலின சமத்துவத்தை பேசி வருகிறார்.

கருணாநிதி உயிரிழந்தபோது,அவரது உடல் அண்ணா சமாதியில் அடக்கம் செய்யப்படுமா ? என சந்தேகம் இருந்தது.அது தொடர்பாக நீதிமன்றம் படி ஏறிய திமுகவிற்கு , சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யலாம் என்ற தீர்ப்பைக் கேட்டு ஸ்டாலின் அவர்கள் கைக்கூப்பி அழுதபோது ,கண் முழுக்க கண்ணீருடன் தன் அண்ணனைத் தாங்கி பிடித்த கனிமொழியின்‌ அன்பை எளிதாக யாரும் கடந்து விட முடியாது.

நாட்டுப்புறக் கலைகளை வளர்க்கவும்,நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவிக்கவும் ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் கனிமொழியால் வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது. அதாவது இன்று பரபரப்பான வாழ்க்கையில் சுழன்று கொண்டிருக்கும் இக்கால இளைய தலைமுறைக்கு, அக்கால அமைதியான கிராமத்து வாழ்க்கையின் அருமையும், பெருமையும் தெரிய வாய்ப்பு இல்லை. எனவே, கிராமிய கலைகளுக்கு புது ரத்தம் பாய்ச்சும் விதமாக 2007-ம் ஆண்டு மறைந்த கலைஞர் கருணாநிதி முதல் – அமைச்சராக இருந்தபோது, கனிமொழி எம்.பி., ‘சென்னை சங்கமம்’ விழாவை தொடங்கினார்.அதனை தொடர்ந்து ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் தமிழர்களின் பண்பாட்டு பெருமைகளை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.பொங்கல் பண்டிகையை ஒட்டி பல இடங்களில் நடக்கும் இந்த விழாவை பலர் குடும்பம் குடும்பமாக சென்று, பார்த்து, ரசித்து பழைய நினைவுகளை பசுமையாய் அசைபோட்டு, தங்கள் குழந்தைகளுக்கு விளக்கி கூறி மகிழ்கின்றனர். இந்த விழா 2011-ல் ஆட்சி மாறியவுடன் நிறுத்தப்பட்டு மீண்டும் 2021-ல் தி.மு.க. ஆட்சி மலர்ந்ததில் இருந்து உயிர் பெற்று, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அரசியல் களத்தை ஒரு பெண்ணாக பல்வேறு இன்னல்களை சந்தித்தாலும், அவற்றை எல்லாம் சாதனைகளாக மாற்றியவர் கனிமொழி என்பதை யாரும் நிராகரிக்க முடியாத ஒன்றாகும்.இன்றைய முதல் அமைச்சர் முக ஸ்டாலின், பாசத்தைப் பொழியும்போது கனிமொழியாகவும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் பேசும்போது கர்ஜனை மொழியாகவும் இருக்கிறார் கனிமொழி என்று புகழ்ந்தார். இப்படி கருணாநிதி மகள் மற்றும் ஸ்டாலினின் தங்கை என்ற அடையாளத்தை தாண்டி கவிஞர் ,தேர்ந்த அரசியல்வாதி, ஆங்கில புலமை , பெண்ணியவாதி, பண்பாட்டை போற்றும் பக்குவவாதி என அரசியல்வாதி என்பதைத் தாண்டி கனிமொழியை தனியாக ரசிக்க வைத்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமான நடப்பு. இப்போது நாடெங்கிலும் திராவிட மாதாவாக, மக்கள் தலைவியாக கனிமொழி பார்க்கப்படுகிறார் இன்னும் பல பெண்களுக்கு அரசியலில் ரோல் மாடலாக திகழும் கனிமொழி கருணாநிதிக்கு ஆந்தை ரிப்போர்ட்டர் சார்பில் மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள் பல, பல!🌹🤝🙏

Related Posts