‘ஹர்காரா’ திரைப்பட விமர்சனம்!

‘ஹர்காரா’ திரைப்பட விமர்சனம்!

பால்துறை என்பது மற்ற எல்லாத் துறைகளையும் விட சிறப்பான தொன்றாகும். இது மனித வாழ்வின் அங்கமாக தற்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறது. அறிவியல் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன் செய்திக் கருவியாய் விளங்கியது நம் தபால் துறை தான். ஆரம்ப காலத்தில் ஒருவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளை அனுப்பப் பயன்பட்டது கடிதங்கள். அவை வெறும் காகிதங்கள் மட்டும் அல்ல. சில கடிதங்கள் காவியமாகவும், வரலாறாகவும் ஆகியுள்ளன! ஆம்.. இந்த தபால் எனப்படும் அஞ்சல் சேவை நாடு, இனம், மதம், மொழி என்று எண்ணற்ற வேறுபாடுகளை களைந்து, இதயங்களை இணைக்கும் ஒப்பற்ற சேவையாக உள்ளது. அத்துடன் அந்த தபால்களை எடுத்து செல்லும் தபால்காரர்களின் பணி ஒரு கடிதத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பது மட்டும் அல்ல, ஒரு காலத்தில் உயிரையும் பணிய வைத்து அந்த பணியை செய்தார்கள், என்பதை உணர்த்தும் விதமாக உருவாகி இருக்கும் படமே ஹர்காரா. எடுத்துக் கொண்ட சப்ஜெக்டுக்கு போதிய ஹோம் ஒர்க் செய்யாமல் அரங்கேறி விட்டதால் கொஞ்சம் சுமார் ரகத்தில் இணைந்து விட்டான் ‘ஹர்காரா’. ஹர்காரா என்றால் தபால்காரர் என்று பொருள்.

அதாவது தேனி டிஸ்ட்ரிக்கில் மலை கிராமமான கீழ் மலையில் தபால்காரர் காளி (காளி வெங்கட்). சிறு சேமிப்பு பணத்தை அடிக்கடி கடன் கேட்கும் ஊர் மக்கள், துணி எடுக்கக் கூட டவுனுக்கு செல்ல வேண்டிய சிரமம், இதைவிட முக்கியமாக மலை காட்டில் வசிப்பதால், திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்ற கோபம் எல்லாம் காளியிடம் சேர்ந்து கொண்டே இருக்கிறது. அதை அடுத்து எப்படியாவது இந்த ஊரில் இருக்கும் தபால் நிலையத்தை மூட வைத்து, ட்ரான்ஸ்ஃபர் வாங்கிச் செல்ல திட்டமிடுகிறார். அதே சமயம் மலை உச்சியில் வசிக்கும் மாரியம்மாளுக்கு (விஜயலக்ஷ்மி) ஒரு கடிதத்தைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு வந்து சேர்கிறது. அதை நிறைவேற்றும் பயணத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் இருந்த `ஹர்காரா’ (ஆங்கிலேயர்களின் அரசாங்க தபால்காரர்) மாதேஷ்வரன் பற்றி தெரிந்து கொள்கிறார். அவரின் கதை என்ன? அந்தக் கதை கேட்ட பின் காளியின் மனநிலையில் வரும் மாற்றம் என்ன என்பதே இப்படத்தின் கதை.

தபால்காரராக நடித்திருக்கும் காளி வெங்கட் கேஷூவலான நடிப்பு மூலம் தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். 30 வயதை தாண்டியும் திருமணம் ஆகாத தனது குமுறலை வெளிப்படுத்துவதிலும் சரி, கிராம மக்களின் அன்புத்தொல்லையில் சிக்கி அவதிப்படுவதிலும் சரி, தனது நடிப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார். மாதேஸ்வரன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ, கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். 150 வருடங்களுக்கு முன்பு தபால்காரர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களுடைய பணி எத்தகைய சிரமம் வாய்ந்தவையாக இருக்கும், என்பதை தனது ஒவ்வொரு அசைவுகளிலும் வெளிப்படுத்தியிருப்பவர், சிலம்பம் சுற்றுவதிலும் அசத்தியிருக்கிறார். கங்காணி கதாப்பாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடிப்பு ஒரு டெம்ப்ளேட்டான வில்லன் ரோலில் சொன்னதை கச்சிதமாக செய்திருக்கிறார்.

தொழில்நுட்ப ரீதியாக பிலிப் சுந்தர் மற்றும் லோகேஷ் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகும், மலையின் பிரம்மாண்டமும் கலந்து ஒரு மேஜிக் அரங்கேறியிருக்கிறது. Shade 69 Studiosன் கிராஃபிக்ஸ் காட்சிகள் சற்று துருத்திக் கொண்டிருந்தாலும், பெரிய அளவில் சொதப்பவில்லை.

இன்று வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இ-மெயில் என்று எத்தனையோ நவீனங்கள், நொடிப்பொழுதில் நமது எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்புவரை, அன்பொழுக வார்த்தைகளை பயன்படுத்தி நட்புகளும், உறவுகளும் முத்து முத்தாய் நமக்கு எழுதிய கடிதங்கள் 3 நாட்கள் கழித்தே கைக்கு வந்து சேர்ந்தது. அதை பிரித்து, படித்து, ரசித்தபோது ஏற்பட்ட பரவசமும், புத்துணர்வும் இப்போது இல்லை என்பதும் உண்மை என்பதை உணர வைத்தாலும் திரைக்கதை மோசமாக பின்னப்பட்டிருப்பதால் சுவாரஸ்யம் குறைகிறது. அத்துடன் ஒவ்வொரு காட்சியையும் வடிவமைத்திருக்கும் விதத்திலும், நடிகர்கள் கொடுத்திருக்கும் நடிப்பிலும் நாடகத்தனம் அதிகமாக தொணிப்பதால் நெருடி விட்டது..

மொத்தத்தில் இந்த ஹர்காரா – சேதமில்லா கடிதம்

மார்க் 2.75/5

Related Posts

error: Content is protected !!