காவிரி விவகாரம் ; கால அவகாசம் கேட்ட மத்திய அரசு பல்டி!

காவிரி விவகாரம் ; கால அவகாசம் கேட்ட மத்திய அரசு பல்டி!

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான செயல் திட்டத்தின் வரைவை மே மாதம் 3ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு வார கால அவகாசம் கேட்டு நேற்று மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் மே 12 ஆம் தேதியும், அதன் வாக்கு எண்ணிக்கை வரும் மே 15 ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. மத்திய அரசு கோரிய 2 வார கால அவகாசம் வழங்கப் பட்டால் கர்நாடக தேர்தல் முடிவடைந்துவிடும் என்ற மத்திய அரசின் இந்த செய்கையினால் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்ட மனுவை வாபஸ் பெற்றுள்ளது மத்திய அரசு.

கடந்த மார்ச் 16ஆம் தேதி காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. பின்னர் தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்து தீர்ப்பு வழங்கியது. நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை நடை முறைப்படுத்தும் திட்டத்தை 6 வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டது. அதையடுத்து 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர்ந்தது.

தமிழக அரசு தாக்கல் செய்த சுப்ரீம் கோர்ட் அவமதிப்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, மேலும் 2 வார அவகாசம் கோரி மனுதாக்கல் செய்திருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதற்கிடையே, வாரியத்தை அமைக்காத மத்திய அரசு, காவிரிப்பாசன நிர்வாகம் தொடர்பான விவரங்கள தானே ஸ்கீம் என சுப்ரீம் கோர்ட் தீரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என மத்திய அரசு விளக்கம் கோரும் மனுவை தாக்கல் செய்தது. மத்திய அரசின திட்டத்தை நீதி மன்றத்தில் வெளியிட 3 மாத அவகாசம் கோரியது. ஸ்கீம் குறித்து விளக்கிய உச்சநீதிமன்றம், அதற்கான வரைவுத் திட்டத்தை வரும் மே 3 ஆம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

மே 3 ஆம் தேதிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது. காவிரி தொடர்பான செயல் திட்டத்தை சமர்ப்பிக்க மேலும் 2 வார கால அவகாசம் தேவை என கூறியுள்ளது. இந்த கோரிக்கை மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. ஆனால் முன்னர் நீதிமன்றம் கூறியபடி மே மாதம் 3ந்தேதி வரைவுத்திட்டத்தை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட். மே. 3 ஆம் தேதி காவிரி வழக்கு விசாரணைக்கு வரும்போது இன்றைய மனுவும் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர். ஆனால் நேற்று தாக்கல் செய்த அவகாசம் கோரும் மனுவை பின்னர் மத்திய அரசு வாபஸ் பெற்றதாகத் தெரிகிறது.