கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – கவர்னர் உரை!
தமிழகமெங்கும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வரும் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதற்காக, காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்திற்கு வந்த அவரை, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். சட்டசபைக்குள் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சபாநாயகர் இருக்கைக்கு வந்த அவர், சபாநாயகர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்களை பார்த்து வணக்கம் செலுத்தினார். அதன்பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
அதன்பிறகு, 10 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வணக்கம். ‘அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். அவரது உரையில் அரசின் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அவரது உரையில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நிலை நாட்ட தேவையான நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து எடுக்கும். பொருளாதார செழுமை, சமூகநீதிக்கான திட்டங்கள், கொள்கைகளை இயற்றி சிறந்த ஆட்சியை தொடர்ந்து வழங்கும்.
கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி தேசிய சாலையாக மேம்படுத்த திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் தொழில் முனைதல் மற்றும் ஊரக தொழிலை ஊக்குவிக்க உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனங்கள் அமைக்கப்படும்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும். மின்பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் மின்மிகை மாநிலமாகியுள்ளது.
கச்சத்தீவை மீட்பது மட்டுமே மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு. கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஓரளவு குறைந்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு நிதிஉதவி அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு இந்த அரசு முயற்சிக்கும்.
திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை 16 மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். நிலைத்த வளர்ச்சி இலக்குகளை 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு எய்த இயலும். பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்படும். நகர் புறங்களில் சுய உதவி குழுக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ”இவ்வாறு அவர் கூறினார்.
டெயில் பீஸ்:
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் முதன்முறையாக சட்டசபைக்குள் சென்றார். இதற்காக, இன்று சட்டசபைக்கு வந்த தினகரனுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கே.என்.நேரு ஆகியோர் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு தினகரன் சிரித்துக்கொண்டே நன்றி கூறினார். சட்டப்பேரவையில் தினகரனுக்கு இருக்கை எண் 148 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2006-ம் ஆண்டு ஒற்றை எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயகாந்த் அமர்ந்த இருக்கை என்பது குறிப்பிடத்தக்கது.