பிரேசிலில் அவசர நிலை: போலீசார் ஸ்ட்ரைக் எதிரொலி!

பிரேஸில்—“கதம்ப தேசம்” என அழைக்கப்படுகிறது. என்னே பொருத்தமான பெயர்! இதன் சீதோஷணமே ஒரு கதம்பம். தெற்கே இதமான வெப்பம் கதகதப்பூட்டுகிறது. வடக்கே அமேசான் பகுதியிலோ சுட்டு பொசுக்குகிறது. இதன் கதம்ப வரலாறு திடீர் திருப்பங்கள் நிறைந்தது. இந்நாட்டின் 85,11,999 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பிற்கு, பார்டர் வைத்தாற்போல் 7,400 கிலோமீட்டர் நீ(ல)ள கடற்கரை. இங்கே பன்னாட்டு மக்கள் பல்வேறு கலாச்சாரங்களுடன் வாழ்கிறார்கள். இந்நிலையில் அந்த பிரேசிலில் போலீசார் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பிரேசில் ரியோ கிராண்டே டு நோர்ட்டி மாநிலத்தில் பணியாற்றும் போலீசார் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளத்தை முழுமையாக மாதந்தோறும் வழங்க வேண்டும். பணி சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் 16ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் போராட்டங்கள், கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன. இதனை கட்டுப்படுத்த முடியாத அதிகாரிகள் மாநிலத்தில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளனர்.
மாநிலத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவங்களில் ரியோ கிராண்டே டு நோர்ட்டி மாநிலத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.