மு.க.ஸ்டாலின் எனும் நான்…! – கடந்து வந்த பாதை முழு விபரம்!

மு.க.ஸ்டாலின் எனும் நான்…! – கடந்து வந்த பாதை முழு விபரம்!

ன்னை நாடி வந்தவர்களையும், சுற்றி இருப்போர்களையும் அதிகாரம் செய்வதும் அதட்டி உருட்டுவதும்தான் தலைமைப் பண்பு என்று சிலரால் தவறாக கருதப்படுகிறது. ஆனால் ஒரு நல்ல தலைவன் என்பவன் சகலரையும் அரவணைத்துச் செல்பவனாகவே இருப்பான். அவனுடைய ஆளுமையில் கடினமும் உறுதியும் இருக்குமே தவிர மனிதர்களிடம் பழகும் தன்மையில் அவை இருக்காது. சோம்பேறிகளையும், செயல் திறன் அற்றவர்களையும் அவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தான் சார்ந்த கூட்டத்துக்காக அல்லும் பகலும் அயராது உழைப்பதுடன், மேன்மேலும் தன்னைப் போல் தலைவர்களை உருவாக்கிச் செல்பவனே நல்ல தலைவன். இந்த உலகம் சங்கிலித் தொடராக அத்தகைய தலைவர்களின் வழி நடத்துதல்களால் இயங்குகிறது. மக்கள் விரும்பும் சில தலைவர்கள் மகாத்மா காந்தி, காமராஜ், நெல்சன் மண்டேலா, சேகுவாரா, லீ குவான் யூ உள்ளிட்ட பலரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஒரு விஷயம் தெரியுமா? இந்த புவியில் பிறந்த ஒவ்வொருக்கும் தலைவனாக விளங்க ஆசை நிச்சயம் இருக்கும். பள்ளியில் வகுப்பு லீடரில் தொடங்கி அலுவலகத்தில் மேலாளர் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையிலும் நமக்கு மேலே சிலர் நம்மை வழிநடத்திச் செல்வார்கள். ஏன் நாம் மந்தையில் உள்ள ஆடுகளாக இருக்க வேண்டும்? மேய்ப்பனாக மாறுவது அத்தனை கடினமா என்ன என்று யோசித்திருக்கிறோமா? யோசித்தாலும் நடைமுறை சாத்தியங்களை கணித்திருக்கிறோமா? எந்த ஆசையும் நிறைவேறும், ஆனால் அதற்கு நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் மிகச் சிலருக்கு இயல்பிலேயே தலைமைப் பண்புகள் இருக்கும். அதனைக் கண்டுணர்ந்து அதற்கேற்ப பயிற்சி செய்தால் நிச்சயம் தலைவனாக உருவாகலாம். தலைவனாக இருக்க விரும்புபவர்களுக்கு human relations என்று சொல்லப்படும் மனிதத் தொடர்பு அறிவுத் திறன் இருக்க வேண்டும். சக மனிதர்களுடன் சுமுகமான நட்புறவு கொள்ளத் தெரிய வேண்டும். அறம் சார்ந்து இயங்கத் தெரிய வேண்டும். பரந்த அறிவும், சுருங்கிப் போகாத மனதும் அவசியம். மேலும் தன்னைப் போல பிறரை எண்ணும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். மேலே சொன்னவைகளில் பல தகுதிகள் படைத்தவர்களில் ஒருவர்தான் இன்றைய திராவிட முன்னேற்ற கழகம் என்னும் பேரியகத்தின் தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலின்..

இன்றைக்கும் வெளியில் இருந்து பார்க்கும் பலர் வாரிசு அரசியல் என்று இதனை கூறினாலும் ஸ்டாலின் இந்த தலைவர் பதவியை அடைந்திட கடந்து வந்த பாதையைக் கேட்டால் அதன் வலிமையும், பெருமையும் புரியும். ஆம்.. அண்ணாவிடம் இருந்து கருணாநிதிக்கு எளிதாக கிடைத்த தலைமைப் பொறுப்பு கலைஞரிடம் இருந்து ஸ்டாலினுக்கு கொடுக்கும் முன்பு கருணாநிதி மு க ஸ்டாலினை புடம் போட்ட தங்கமாக மாற்ற கடும் பயிற்சிகளை வைத்தார் என்பதெல்லாம் எத்தனை பேருக்கு தெரியும்? சாதாரண உறுப்பினராக சேர்ந்து நிஜமாகவே களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று தொடர்ந்து பணியாற்றியதன காரணமாக கட்சியின் பொறுப்பு என்னும் படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், பொருளாளர், செயல்தலைவர், தலைவர் என்று உயர்ந்தவராக்கும் மு.க ஸ்டாலின். அது மட்டுமின்றி இப்போதும் கட்டுகோப்புடன் இருக்கு திமுக என்னும் இயக்கத்தை நடத்தும் ஸ்டாலின் – இன்றைய பர்த் டே ஹீரோ சந்தித்த சோதனைகள் மற்றும் சாதனைகளை கொஞ்சம் அறிந்து கொள்வோமா?

1953 மார்ச் 1ம் நாள் மு.கருணாநிதி – தயாளு அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக ஸ்டாலின் பிறந்தபோது அவரது தந்தை தமிழகத்தின் முதல்வராக இருக்கவில்லை. அண்ணாவின் தம்பியாக மட்டுமே இருந்தார் கலைஞர் கருணாநிதி. பொதுவாக கருணாநிதியின் குடும்பத்தில் எல்லா நபர்களின் பெயருமே தூய தமிழ் பெயராக தான் இருக்கும். மூத்த மகனுக்கு அவருடைய தந்தை முத்துவேலரின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக முத்து என்று பெயர் இட்டதாகவும், திராவிட இயக்கத்தின் கொள்கை வீரரான புதுக்கோட்டை அழகிரிசாமியின் நினைவாக இரண்டாவது மகனுக்கு அழகிரி எனப் பெயர் வைத்தாகவும் கூறினார். ஆனால் ஸ்டாலினின் பெயர் மட்டும் அப்படி இருக்காது. முதலில் ஸ்டாலினுக்கு கலைஞர் சூட்ட இருந்த பெயர் அய்யா துரை என்பது தான். இந்த பெயரை சூட்ட கலைஞர் விரும்பியதற்கும் ஒரு காரணம் இருந்திருக்கிறது. …தந்தை பெரியாருக்கு அய்யா என செல்ல பெயர் உண்டு அந்த பெயரையும், அண்ணாதுரையில் இருந்து துரை என்பதையும் எடுத்து அய்யாதுரை என்று பெயரிட நினைத்திருக்கிறார் கலைஞர்.

ஆனால் ஒரு சமயம் ரஷ்ய புரட்சியாளர் ஸ்டாலினின் மரணத்தை அடுத்து நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் அவரை பற்றி சிலாகித்து கலைஞர் பேசி கொண்டிருந்திருந்தார்…அப்போது தான் அவருக்கு மகன் பிறந்ததாக செய்தி வந்திருக்கிறது. உடனே அவர் அந்த இடத்தில் வைத்தே தன் மகனுக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டி இருக்கிறார். இவ்வாறு பிறந்த தினத்தன்றே அவரின் வாழ்க்கை பயணத்தை புரட்சியாளர் ஸ்டாலினின் வழியில் துவங்கி இருக்கிறார் ஸ்டாலின். அதனால்தானோ என்னவோ புரட்சியாளரும் போராளியுமான ஜோசஃப் ஸ்டாலினை போலவே தான் ஸ்டாலினின் வாழ்க்கை பயணமும் இருந்திருக்கிறது. …

இப்படி பேர் சுட்டி வளர்ந்த ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்த பொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டதாம்.. புரட்சியாளரின் பெயரை வைத்திருக்கிறீர்கள். இந்த பெயரை வேண்டுமானால் மாற்றி விட்டு வாருங்கள் இங்கே சேர்த்து கொள்கிறோம் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். …அப்படி பேரை மாற்ற மறுத்து விட்ட கருணாநிதி சென்னை சேத்துப்பட்டு கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க வைத்து மேல்நிலை வரை கல்வி வரை அங்கு தொடர வைத்தார். இந்த பள்ளியில் கூட முதலில் சீட் கிடைக்காமல் போன சம்பவத்தை ஸ்டாலினே ஒரு முறை ல் ஓப்பனாக பகிர்ந்து இருந்தார்.

அது ஸ்டாலின் சொன்னது இதுதான் ;

“இந்த கிறிஸ்துவ பள்ளியில் தான் என்னுடைய சகோதரர்கள் மு.க.முத்து, மு.க.அழகிரி படித்தார்கள். அந்தவகையில் என்னையும் இதே பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று மறைந்த முரசொலி மாறன் அதற்கான முயற்சியை எடுத்தார். இந்த பள்ளியில் சேர வேண்டும் என்றால் நுழைவுத்தேர்வில் வெற்றிபெற வேண்டும். ஆனால் நான் அந்த தேர்வில் தோல்வி அடைந்துவிட்டேன். ஆகவே என்னை சேர்க்கமுடியாது என்று பள்ளி நிர்வாகம் சொல்லிவிட்டது.

அந்த நேரத்தில் மேயர் பதவி மிகப்பெரிய பதவி ஆகும். அப்போது மேயராக இருந்தவர் குசேலன். அவருடைய காரில் முரசொலி மாறன் மற்றும் நானும் பள்ளிக்கு வந்தோம். அப்படி மேயரின் பரிந்துரையால், அப்போதைய தலைமை ஆசிரியர் சவரிராயர் என்னை இந்த பள்ளியில் சேர்த்தார். நான் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து பள்ளிக்கு 29 ‘சி’ மாநகர பஸ்சில் ஏறி வருவேன். நாங்கள் படிக்கும்போது இருபாலர் படிக்கும் வசதி இந்த பள்ளியில் இல்லாமல் போய்விட்டதே என்று இப்போது கூட என்னுடைய துணைவியாரிடம் சொல்லி கொண்டு இருக்கிறேன்.

நான் படிக்கும் போது ஆசிரியர்களிடம் அடி நிறைய வாங்கி இருக்கிறேன். அதிலும் ஜெயராமன் ஆசிரியரிடம் வாங்காத அடியே இல்லை. இப்போது அவரை பார்த்தால் கூட பயமாக தான் இருக்கும். இவர்களுக்கு பயந்து கொண்டே பாதி நாள் வகுப்புக்கு செல்லாமல் ‘கட்’ அடித்துவிடுவேன்.

என்னுடன் படித்த மவுலானா அப்துல் ரகீமுடன் சேர்ந்து தினமும் மதியம் வெளியே சென்று ‘டீ’ குடிப்பேன். எனக்கு சிகரெட் பிடிப்பதில் விருப்பம் கிடையாது. ஆனால் ஸ்டைலுக்கு கையில் சிகரெட் வைத்துக்கொண்டு, அங்கே வருபவர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டு இருப்பேன். அதுவெல்லாம் பசுமையான நினைவுகள்” என்று சொல்லி இருந்தார்.

தந்தையைப் போலவே ஸ்டாலினுக்கும் ஆரம்ப காலத்தில் நாடகங்களின் மீது ஈடுபாடு பிறந்தது. இதனால் நாடகத்திலும் நடித்தார். ஸ்டாலின் நடித்த முதல் நாடகம் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய “முரசே முழங்கு” என்ற நாடகமாகும். இந்நாடகம் கலைஞர் முன்னிலையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது. இந்நாடகம் பல இடங்களிலும் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து அதன் வெற்றிவிழா திருவல்லிக்கேணியில் அதே மேடையில் நடத்தப்பட்டது.

இதேபோல, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என பல நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்டாலின். அத்தனையும் திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்க நாடங்கள் ஆகும்.இந்த அனுபவமே பின்னாளில் குறிஞ்சி மலர், சூர்யா என டிவி நாடங்களிலும், ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் என இரு திரைப்படங்களிலும் நடிக்க தூண்டியது ஸ்டாலினை.

அதே சமயம் இந்த மு.க. ஸ்டாலின் தனது 14 வயதில் அரசியலை ருசிக்கத் தொடங்கினார். அதாவது ஸ்டாலின் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, அதாவது 1967-68ல் இளைஞர் திமுக என்ற அமைப்பை கோபாலபுரத்திலுள்ள ஒரு முடிதிருத்தும் கடையில் தெரு நண்பர்களுடன் தொடங்கினார். அதாவது அரட்டை அடிக்க கூடும் இடத்தில் பேசிக் கொண்டிருந்த போது தன் ஏரியாவில் உள்ள சிலரின் அங்க அடையாளங்களைச் சொல்லி அவர் குறித்து விசாரித்தார். யாருக்கும் தெரிய வில்லை. அதைச் சொல்லிக் காட்டி பள்ளிக்கூடத்திலிருக்கும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் அதே நண்பர்களுடன் கட்சி பணிகளில் ஈடுபட்டார். இதன் மூலம் நம் அக்கம் பக்கம் வசிப்போரை நன்கு அறிந்து கொள்ளலாம் என்பதுதான் அடிப்படை நோக்கம்.

கூடவே பெரியார், அண்ணா பிறந்தநாளின் போது கொடியேற்றுவது, இனிப்புகள் வழங்குவது, கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது, கட்சிக்கு நிதி திரட்டுவது போன்ற பணிகளையும் தொடக்க காலத்தில் செய்து வந்தார். 1973ல் திமுகவின் பொதுக்குழு உறுப்பினரானார். அப்போது நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலின்போது, கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற பெயரில் நண்பர்களுடன் தெருத்தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்குக் கீழ் குழந்தைகள் சீர்திருத்த சங்கம் உருவாயிற்று. சிறுவயது முதலே எம்.ஜி.ஆர். படங்கள் இவருக்குப் பிடிக்கும். படம் ரிலீஸானதும் போன் போட்டு, ‘படம் பார்த்தாயா, எந்த ஸீன் பிடித்திருந்தது?’ என்று இவரிடம் எம்.ஜி.ஆர். கேட்பாராம்.

1968-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு அண்ணாவையே அழைக்க முடிவு செய்தார் ஸ்டாலின். அப்போது, தமிழக முதல்வராக இருந்த அண்ணா, உடல்நலம் குன்றியிருந்தார். இருந்தாலும், விழாவுக்கு வர அண்ணா ஒப்புக் கொண்டார். இதுவே ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையின் ஆரம்பமாக இருந்தது. ஆனால், சிகிச்சைக்காக அண்ணா அமெரிக்கா சென்று விட்டதால் அந்த விழா அப்போது நடக்கவில்லை. அண்ணாவின் மறைவுக்குப் பிறகும் அவரது பிறந்தநாள் விழாவை இளைஞர் தி.மு.க தொடர்ந்து கொண்டாடியது.

*1969-ம் ஆண்டு அண்ணா மணிவிழாவை ஸ்டாலின் நடத்தி அரசியலில் அறிமுகமானார். 1971 சட்டமன்ற தேர்தலில் காமராஜரும், ராஜாஜியும் ஒரே அணியாக இருந்து, தி.மு.க-வை எதிர்த்தார்கள். அந்தத் தேர்தலில் சைதை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதிக்கு ஆதரவாக, வீதிவீதியாகச் சென்று பிரசாரம் செய்தார் ஸ்டாலின். அப்போதுதான் அவர் மக்கள் மத்தியில் முதல் முதலில் அறிமுகமானார்.

இதன்பின், படிப்படியாக இளைஞரணி அமைப்பு ரீதியாக 1980இல் மதுரையில் உள்ள ஜான்சிராணி பூங்காவில் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே மாநில கட்சிக்காக தொடங்கப்பட்ட முதல் இளைஞரணி இதுவாகும். 1980இல் திருச்சியில் இரண்டாம் ஆண்டு விழாவிலே ஏழுபேரைக் கொண்ட ஓர் அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புக் குழு சுற்றுப்பயணம் நடத்தி மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்றே ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியைக் கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்புத் தரப்பட்டது. வெண் சீருடை, கறுப்பு சிவப்பு கழுத்து பட்டை, சிவப்பு தொப்பி என இளைஞர் அணியின் தோற்றமே புதுமையாக இருந்தது. மாவட்டத்துக்கு ஒரு அமைப்பாளர், இரண்டு துணை அமைப்பாளர், 500 இளைஞர்கள் கொண்ட படை என கட்சிக்குள் புது ரத்தத்தை புகுத்தினார் ஸ்டாலின்.

சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கும்போதே துர்க்கா என்ற சாந்தாவுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான ஆறாவது மாதமே எமர்ஜென்சியில் கைதாகி ஓராண்டு சிறையில் இருந்தார் ஸ்டாலின். பி.ஏ.,தேர்வையும் சிறையில் இருந்துதான் எழுதினார்.

சிறையில் ஸ்டாலினால் மறக்க முடியாத என்பதைவிட, மறக்கக்கூடாத மனிதர் சிட்டிபாபு. அவர் குறித்துச் சொல்லும் ஸ்டாலின், என்மீது விழுந்த அடிகள் அனைத்தையும் தன்மீது தாங்கிய மனிதர். அன்று அவர் தோள் கொடுக்காமல் போயிருந்தால், இன்று நான் உங்களுடன் இருப்பேனா என்பதே சந்தேகம்தான்! அவசரநிலைப் பிரகடனம் இந்தியாவில் அமலான நேரத்தில் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர். சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு, நெருக்கடியான அந்தக் காலகட்டத்தில் நடந்த சிறைக்காட்சியை இப்போது நினைத்துப் பார்த்தாலும் அடிவயிற்றில் நெருப்பு பரவும்’ என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின். அந்த எமர்ஜென்சி காலத்தில் சிறையில் தனக்கு வந்த அத்தனை கடிதங்களையும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்.

இதனிடையே சென்னை அண்ணா சாலையில் 28.1.1964ல் திமுகவுக்கென ஒரு இடம் வாங்கப்பட்டது. 15.6.1964 அன்று அது திமுக தலைமையகமாக அன்பகம் என்ற பெயரில் திறக்கப்பட்டது. நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் அண்ணா அதனை திறந்து வைத்தார். அதே அன்பகம் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான அறிவாலயத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இளைஞர் அணியின் அலுவலகம் செயல்பட ஒரு இடம் தேவைப்பட்டது. அறிவகத்தை ஒதுக்கித் தரும்படி திமுக தலைமைக் கழகத்திடம் இளைஞரணி சார்பில் ஸ்டாலின் முறைப்படி கோரினார். இதுபோல திமுக தொழிலாளர் அணியும் தனது அலுவலகத்திற்காக அன்பகத்தைக் கோரியது. கட்சிக்கு நிதி ஒரு அலுவலகத்துக்கு இரண்டு அணிகளும் போட்டியிட்டதால் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், யார் முதலில் 10 லட்சம் ரூபாய் கட்சிக்கு நிதி தருகிறார்களோ அவர்களுக்குத்தான் அன்பகம் என ஒரு போட்டி வைத்தார். கட்சி அலுவலகம் திறப்பு இதையடுத்து திமுக இளைஞரணிச் செயலாளரான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணம் செய்து11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார். கட்சி மேலிடம் கேட்ட 10 லட்சத்திற்கும் மேலாக 1 லட்சத்தை வசூலித்து அதனை தலைமைக் கழகத்திடம் ஒப்படைத்து அன்பகத்தை இளைஞரணிக்கு பெற்றார். 02.6.1988 அன்று அன்பகத்தில் இளைஞரணியின் தலைமை அலுவலகத்தை பேராசிரியர் அன்பழகன் தலைமையில் கருணாநிதி திறந்து வைத்தார்.அப்படியாக கிட்டத்தட்ட 32 ஆண்டுகாலமாக இளைஞரணி செயலாளர் பதவியை தக்க வைத்து இருந்தார் தளபதி ஸ்டாலின்.

இதே காலக் கட்டத்தில் அதாவது 1990ல் நடந்த ஐம்பெரும்விழா பேரணியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் ஒரு ராணுவம் போல் நடைபோட்டு வந்ததைக் கண்ட அன்றைய பிரதமர் வி.பி.சிங், இந்த இளைஞரனியின் தலைமையில் இவ்வளவு பேர் கட்டுக்கோப்புடன் நடைபோட்டு வருகிறார்களே என அருகிலிருந்த கருணாநிதியிடம் கேட்க, திமுக இளைஞரணி செயலாளர்-என் மகன் ஸ்டாலின் என கருணாநிதி பதிலளித்தார்.

அது மட்டுமின்றி 1984-இல் முதன் முறையாக ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன் பின், அதே தொகுதியில் 1989-இல் போட்டியிட்டு வென்றார். 1991-இல் ராஜீவ் காந்தி மறைவின்போது நடைபெற்ற தேர்தலில் மூன்றாவது முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட போது தோல்வி அடைந்தார். கருணாநிதியைத் தவிர அனைத்து திமுக உறுப்பினர்களும் வெற்றி வாய்ப்பை இழந்தனர். பின்னர் 1996, 2001, 2006- தேர்தல்களில் ஆயிரம்விளக்கில் வெற்றி பெற்றார்.

1993-இல் “இளைய சூரியன்” என்ற தமிழ் வார இதழைத் தொடங்கி ஆசிரியராக பணியாற்றினார்.

1996-இல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்ததுடன் சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றிபெற்று, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயரானார். அதற்கு முன், மாமன்ற உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்வு செய்தனர். ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னையின் நெரிசலைக் குறைக்க பிரத்யேகமாக 10 மேம்பாலங்களைக் கட்டினார்.

2002-இலும் ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தார். அப்போது, அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தது. ஒருவரே இரு பதவிகளை வகிக்கக் கூடாது என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால், மேயர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, எம்.எல்.ஏ.வாக ஸ்டாலின் நீடித்தார்.

2003-இல் திமுக துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

2006-இல் முதல் முறையாக உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டார்.

2008-இல் திமுகவின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.

2009-2011 வரை துணை முதல்வராக பணியாற்றினார்.

2011, 2016-இல் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார்.

2015-இல் ‘நமக்கு நாமே’ சுற்றுப்பணத்தை தொடங்கி 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார்.

2016-இல் இருந்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வருகிறார்.

2017-ஜனவரி 4-இல் திமுக தலைவர் வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், திமுக செயல் தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார்.

2018 ஆகஸ்ட் 7-ஆம் தேதி கருணாநிதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவர் மறைவுக்குப் பிறகு திமுகவின் 2-ஆவது தலைவராக ஆகஸ்ட் 28 முதல் போட்டியின்றி ஒரு மனதாக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு தன் கட்சியினரை ஒரு இளஞ்சூரியன் போல் வழிகாட்டிக் கொண்டு போகிறார். இதையும் கொஞ்சம் விவரித்து சொல்வதானால் 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கீழ், தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கி, அதற்கு தலைமையேற்றார் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில், கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் இன்றி நடைபெற்ற தேர்தலில், திமுக கூட்டணி 39 இடங்களில் 38-ல் வாகை சூடியது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 21 இல் 12 இடங்களுடன், 52 சதவீத வாக்கு வங்கியையும் பெற்றது. திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலின் பெற்ற முதல் வெற்றியாக அது பதிவானது.

இதன் பின் நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.ஸ்டாலின் தான் வராரு. விடியல் தரப் போறாரு. என்ற முழக்கத்துடன் சூறாவளிபிரசாரம் மேற்கொண்டார். 2011 மற்றும் 2016-ஐ தொடர்ந்து, தற்போதும் கொளத்தூர் மக்களின் பேராதரவுடன் ஹாட்ரிக் வெற்றிபெற்று, முதலமைச்சரின் தொகுதி என்ற பெருமையை அத்தொகுதி மக்களுக்கு வழங்கியுள்ளார்.
அத்துடன், சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் அரியணையை பிடித்து பலரின் விழியை மலரச் செய்திருக்கிறார்

‘இப்பேர்பட்ட மு.க ஸ்டாலின் ஆகிய நான் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக, உண்மையாகவும், உளச்சான்றின் படியும், என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் இணங்க, அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பை விளக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும், நேர்மையானதை செய்வேன் என்றும், ஆணையிட்டு உறுதி மொழிகிறேன். என்று அறிவிக்கப் போகும் நன்னாளுக்கு முன்னரே அந்தை ரிப்போர்ட்டர் தன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

தகவல் உதவி : ஆதன் தமிழ்   &  நிலவளம் ரெங்கராஜன்

Related Posts