நலமான சமுதாயத்தின் முதுகெலும்பு: உலகக் குடும்ப மருத்துவர் தினம்!

நலமான சமுதாயத்தின் முதுகெலும்பு: உலகக் குடும்ப மருத்துவர் தினம்!

ண்டுதோறும் மே 19ஆம் தேதி உலகக் குடும்ப மருத்துவர் தினம் (World Family Doctor Day) உலகளவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ‘General Practitioners’ அல்லது ‘Primary Care Physicians’ என்று அழைக்கப்படும் குடும்ப மருத்துவர்கள், உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளின் முதுகெலும்பாக விளங்குகின்றனர்.

2026ஆம் ஆண்டுக்கான உலகக் குடும்ப மருத்துவர் தினத்தின் அதிகாரப்பூர்வ மையக்கருத்து (Theme):

“Compassionate Care in a Digital World” (கருணையான பராமரிப்பு – டிஜிட்டல் உலகில்) தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த டிஜிட்டல் யுகத்திலும், நோயாளிகளிடம் காட்டும் மனிதநேயமும் கருணையும்தான் மருத்துவத்தின் அடிப்படை என்பதை இந்த ஆண்டு WONCA (World Organization of Family Doctors) வலியுறுத்துகிறது.

குடும்ப மருத்துவர்களின் அளப்பரிய சேவை

சில பல ஆண்டுகளுக்கு முன்வரை ‘குடும்ப மருத்துவர்’ என்று ஒருவர் இருந்தது பலருக்கு நினைவிருக்கலாம். இன்றைய நாளில் சாதாரண தலைவலிக்குக்கூட சிறப்பு நரம்பு நரம்பியல் நிபுணரைப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இப்போது இதய நோய் நிபுணர், சிறுநீரக மருத்துவர், மூட்டு மருத்துவர், நீரிழிவு நோய் நிபுணர், இரைப்பை சிறுகுடல் நிபுணர், முதுமை நோய் மருத்துவர் இன்னபிற சிறப்பு மருத்துவர்கள் எனப் பெருகிவிட்ட நிலையில் குடும்ப மருத்துவர்கள் அருகிவரும் உயிரினங்களாக மாறிவருகிறார்கள்.

குடும்ப மருத்துவர்களின் பரந்த அளவிலான மருத்துவ அறிவுத்திறன், பல்வேறு நோய்கள் மற்றும் சிக்கலான சுகாதார நிலைமைகளைக் கண்டறிந்து ஆரம்பக்கட்ட சிகிச்சையளிக்க உதவுகிறது. சிறிய வியாதிகள் முதல் நாள்பட்ட நோய்கள் (சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவை) வரை அனைத்தையும் கையாள்வதில் இவர்கள் வல்லவர்கள். தங்களால் குணப்படுத்த முடியாத அல்லது தீவிரமான பாதிப்புகள் ஏற்படும் போது, நோயாளிகளைச் சரியாக மதிப்பீடு செய்து, குறிப்பிட்ட மருத்துவ நிபுணர்களிடம் (Specialists) பரிந்துரைக்கும் முக்கியப் பாலமாகவும் இவர்கள் செயல்படுகிறார்கள்.

மனநிறைவும் சமுதாயப் பங்களிப்பும்

குடும்ப மருத்துவராக இருக்கும் பல மருத்துவர்கள் தங்களின் சேவையில் அபரிமிதமான மனதிருப்தியைக் காண்கின்றனர். பிறரது நோயைக் குணப்படுத்தவும், அவர்களுக்கு ஆறுதல் கூறவும், உயிரைக் காப்பாற்றவும் தங்களுக்கு இருக்கும் ஆற்றலை நினைத்து அவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.

தொழிலதிபர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இவர்களைவிட அதிகமாகச் சம்பாதிக்கலாம். ஆனால், ஒரு நலிவுற்ற மனிதனை ஆரோக்கியமானவராக மாற்றுவதிலும், சாவின் விளிம்பில் இருப்பவரைக் காப்பாற்றுவதிலும் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடுஇணை ஏதுமில்லை. விரக்தியில் இருக்கும் எத்தனையோ குடும்பங்களுக்கு நம்பிக்கையின் அடையாளமாகத் திகழும் குடும்ப மருத்துவர்களை இந்நாளில் போற்றுவது நம் கடமையாகும்.

இந்நாள் உருவான பின்னணி மற்றும் நோக்கம்

உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்குக் குடும்ப மருத்துவர்கள் வழங்கி வரும் பங்கையும் சேவையையும் முதன்மைப்படுத்த, தேசிய கல்லூரிகள் கழகங்களின் உலக அமைப்பு (WONCA) கடந்த 2010ஆம் ஆண்டு முதன்முதலாக இந்நாளை அறிவித்தது. அனைத்து நோயாளிகளுக்கும் தனிப்பட்ட, விரிவான மற்றும் தொடர் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் மருத்துவர்களுக்கு இருக்கும் திறனை அங்கீகரிக்க இந்நாள் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இந்நாளைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கங்கள்:

  • உலக அளவில் குடும்ப மருத்துவர்களின் இன்றியமையாத பணியை பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவது.

  • சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றும் சேவையைப் பாராட்டி அங்கீகரிப்பது.

  • சவாலான சூழல்களிலும் பணியாற்றும் குடும்ப மருத்துவர்களின் மனத்திண்மையை வலிமைப்படுத்துவது.

  • குடும்ப மருத்துவர்களோடு தொடர்புடைய முக்கியப் பிரச்சினைகளையும், அவர்களின் உரிமைகளையும் உலக அரங்கில் முன்னிறுத்துவது.

ஒரு நல்ல குடும்ப மருத்துவரை எப்படித் தேர்ந்தெடுப்பது?

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல்நலம் பாதிக்கப்படும்போது, உடனே அணுகுவதற்கு ஒரு தகுதியான குடும்ப மருத்துவர் இருப்பது அவசியம். ஒரே பகுதியில் இரண்டு, மூன்று மருத்துவர்கள் இருக்கும்போது, நமக்குச் சரியான மருத்துவரைத் தேர்ந்தெடுக்கப் பின்வரும் தகுதிகளைக் கவனிக்கலாம்:

1. அணுகுமுறை மற்றும் உரையாடல்

மருத்துவர்களின் அணுகுமுறை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலர் நோயாளிகளிடம் கனிவாக நிறையப் பேசுவார்கள்; சிலர் சுருக்கமாகப் பேசுவார்கள். இதில் உங்களுக்கு எந்த மாதிரியான மருத்துவரிடம் பேசுவது பிடிக்கும், உங்களை அவர் எப்படி நடத்துகிறார், நோய் குறித்து எவ்வளவு தெளிவாக விளக்குகிறார் என்பதைப் பொறுத்து உங்கள் தனிப்பட்ட தேர்வை முடிவு செய்யலாம்.

2. சிகிச்சையின் தரம் மற்றும் மருந்துகள்

நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவர் தேவையின்றி விலை அதிகமான மருந்துகளைப் பரிந்துரைக்கிறாரா அல்லது தரமான, விலை மலிவான மருந்துகளைக் கொடுக்கிறாரா என்பதைக் கவனிக்க வேண்டும். அதேபோல், ஊசி தேவையில்லை எனும் பட்சத்தில் அதைத் தவிர்ப்பவரே நல்ல மருத்துவர் ஆவார். அவரது சிகிச்சையில் உங்களுக்கு எந்த அளவுக்குத் திருப்தியும், விரைவான குணமடைதலும் கிடைக்கிறது என்பது முக்கியம்.

3. நியாயமான கட்டணம்

மருத்துவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை மருத்துவக் கட்டணம்தான். எனவே, உங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்களில் யார் தரமான சிகிச்சையை நியாயமான கட்டணத்தில் வழங்குகிறார்கள் என்று பார்த்துத் தேர்ந்தெடுக்கலாம்.

4. வழிகாட்டும் திறன் (Referral)

ஒரு சிறந்த குடும்பநல மருத்துவர் என்பவர், நல்ல சிகிச்சையைக் கொடுப்பவர் மட்டுமல்ல; ஒரு நோயின் தீவிரம் அதிகமாகும்போது, “இந்தப் பிரச்சினைக்கு இந்த மருத்துவரைப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும்” என சரியான நிபுணரைப் பரிந்துரைப்பவராகவும் இருக்க வேண்டும். அப்படி அவர் பரிந்துரைக்கும் மருத்துவரும் கனிவாகப் பேசக்கூடியவராகவும், குறைவான கட்டணம் வாங்குபவராகவும் இருப்பார்.

Related Posts