வெறிபிடித்த தெருநாய்களைக் ‘கருணைக்கொலை’ செய்க ; உச்ச நீதிமன்றம் அதிரடி!

வெறிபிடித்த தெருநாய்களைக் ‘கருணைக்கொலை’ செய்க ; உச்ச நீதிமன்றம் அதிரடி!

ந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் பெருக்கமும், அதனால் பொதுமக்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்களும் நீண்டகால விவாதப் பொருளாக இருந்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீதான நாய் கடி சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

வெறிபிடித்த, ஆக்ரோஷமான நாய்களுக்குக் கருணைக்கொலை!

தெருநாய்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவற்றை அடியோடு தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மனிதர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் நாய்கள் குறித்து நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பின்படி, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட, வெறிபிடித்த (Rabid) அல்லது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் ஆக்ரோஷமாக (Demonstrably dangerous/aggressive) நடந்துகொள்ளும் தெருநாய்களை, சட்டப்பூர்வ வழிமுறைகளின்படி ‘கருணைக்கொலை’ (Euthanasia) செய்ய அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கை விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு (Animal Birth Control – ABC) விதிகள் மற்றும் இதர சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

“நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” – நீதிபதிகள் கவலை

நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. பொது இடங்களில் தெருநாய்களின் நடமாட்டம் மற்றும் பெருக்கம் தற்போது “அளவிற்கதிகமாக” (Alarming) உள்ளதாக நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தெருநாய்கள் மனிதர்களை, குறிப்பாகக் குழந்தைகளைக் கடித்துக் குதறும் சம்பவங்களை நீதிமன்றத்தால் சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறினர். நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்த அறிக்கைகளைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், பொது இடங்களிலிருந்து தெருநாய்களை அகற்ற அரசு அதிகாரிகளுக்கு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது என மறுத்துவிட்டது.

முந்தைய உத்தரவைச் செயல்படுத்தாத மாநில அரசுகளுக்குக் கண்டனம்

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மருத்துவமனைகள், பூங்காக்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களிலிருந்து தெருநாய்களை அப்புறப்படுத்தி, காப்பகங்களுக்கு (Shelters) கொண்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் நாய்களுக்குக் கருத்தடை செய்யப்பட்ட பிறகு, அவற்றை மீண்டும் அதே பொது இடங்களில் கொண்டு வந்து விடக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியிருந்தது.

ஆனால், இந்த உத்தரவுகளைச் சரிவரப் பின்பற்றாத மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு தங்களின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. நீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவதில் மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளதாக நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.

விலங்கு நல ஆர்வலர்களின் மனுக்கள் தள்ளுபடி

பொது இடங்களிலிருந்து நாய்களை அப்புறப்படுத்தக் கூடாது என்றும், முந்தைய உத்தரவில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் கோரி பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் (NGOs) நாய் வளர்ப்போர் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.

மனித உயிர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திய நீதிமன்றம், விலங்கு நல அமைப்புகளின் கோரிக்கைகளை நிராகரித்து, அவர்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு, நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் தெருநாய் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வழிவகுத்துள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts