கூகுள் முதல் இன்ஸ்டாகிராம்: ஊடக உலகின் சிம்மாசனத்தைக் கைப்பற்றிய சமூக வலைதளங்கள்!

கூகுள் முதல் இன்ஸ்டாகிராம்: ஊடக உலகின் சிம்மாசனத்தைக் கைப்பற்றிய சமூக வலைதளங்கள்!

பாரம்பரிய ஊடகங்களின் கோட்டைகள் தகர்ந்து வரும் நிலையில், ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் (Reuters Institute) வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை ஊடக உலகின் எதிர்காலம் குறித்த அதிரடி உண்மைகளைச் சுமந்து வந்துள்ளது. 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இன்றைய இளைய தலைமுறையினர் செய்திகளை அணுகும் முறையில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றங்களை இந்த ஆய்வு தரவுகளுடன் நிரூபிக்கிறது.

2015 vs 2025: ஒரு தசாப்த காலத் தலைகீழ் மாற்றம்

கடந்த 2015-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தரவுகளின்படி, 36 சதவீத இளைஞர்கள் செய்தி இணையதளங்கள் மற்றும் செயலிகளை (News websites and apps) முதன்மை ஆதாரமாகக் கருதினர். அப்போது சமூக வலைதளங்களின் பங்களிப்பு 21 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால், சரியாகப் பத்தாண்டுகள் கழித்து 2025-ல் எடுக்கப்பட்ட ஆய்வில் நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது.

இன்றைய இளைஞர்கள் செய்திகளைத் தெரிந்துகொள்ள கூகுளில் தேடுவதோ அல்லது குறிப்பிட்ட செய்தி நிறுவனத்தின் இணையதளத்திற்குச் செல்வதோ இல்லை. மாறாக, அவர்கள் இன்ஸ்டாகிராம் (Instagram), டிக்டாக் (TikTok), யூடியூப் (YouTube) மற்றும் பிற சமூக வலைதளங்களில் உலாவும்போது, செய்திகளே அவர்களைத் தேடி வருகின்றன. அல்காரிதம்கள் (Algorithms) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் அவர்கள் விரும்பும் அல்லது அவர்களுக்குத் தேவையான செய்திகள் அவர்களின் ‘ஃபீட்’ (Feed)-ல் காண்பிக்கப்படுகின்றன.

ஆம்.. இப்போது 39 சதவீத இளைஞர்கள் தங்களின் செய்திகளுக்காகச் சமூக வலைதளங்களையே (Social Media) முழுமையாகச் சார்ந்துள்ளனர். செய்தி இணையதளங்களின் பயன்பாடு 24 சதவீதமாகச் சரிந்துள்ளது. அதாவது, செய்திகளைத் தேடிச் சென்று வாசிக்கும் பழக்கம் மறைந்து, சமூக வலைதளங்களில் உலாவும்போது தானாகவே முன்னால் வந்து நிற்கும் செய்திகளை நுகரும் “செய்திகள் தேடி வரும்” (News finds me) கலாச்சாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நிறுவனங்களை விட தனிநபர்களுக்கே முதலிடம்!

பெரிய செய்தி நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை விட, தனிப்பட்ட படைப்பாளர்கள் (Creators) மற்றும் இன்ஃப்ளூயன்சர்கள் (Influencers) வழங்கும் தகவல்களுக்கே இளைஞர்களிடம் அதிக மவுசு உள்ளது. ஏஐ (AI) மற்றும் அல்காரிதம்கள் மூலம் இயங்கும் வீடியோ தளங்கள், இளைஞர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப செய்திகளைத் தரம் பிரித்து வழங்குகின்றன.

புதிய ஊடக இலக்கணம்: செல்வாக்கா? கட்டுப்பாடா?

ஒரு காலத்தில் செய்திகளை எடிட் செய்து ‘கட்டுப்படுத்துவதே’ (Control) ஊடகப் பணியாக இருந்தது. ஆனால் இன்று, ஒரு செய்தி எவ்வளவு ‘செல்வாக்கு’ (Influence) செலுத்துகிறது என்பதே வெற்றியைத் தீர்மானிக்கிறது. எளிமையான கதை சொல்லும் பாணி (Storytelling), மனிதத்தன்மை கொண்ட அணுகுமுறை மற்றும் எளிதில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய வீடியோ வடிவம் ஆகியவை இருந்தால் மட்டுமே ஒரு செய்தி இன்றைய டிஜிட்டல் உலகில் தப்பிப்பிழைக்கும்.

பாரம்பரியப் போக்கைக் கட்டிக்கொண்டு அழும் ஊடகங்கள், இந்தத் தொழில்நுட்ப மற்றும் உளவியல் மாற்றத்திற்கு ஈடுகொடுக்கத் தவறினால், அவை வருங்கால சந்ததியினரால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படும் என்பது இந்த ஆய்வின் எச்சரிக்கையாக உள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts