வங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்?
வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி பிப்ரவரி, 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கூட வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன என்றும் கோரிக்கை நிறைவேற இல்லை என்றால் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடக்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது..
கடந்த நவம்பர் 1, 2017 முதல் அமல் செய்யப்படவேண்டிய ஊதிய திருத்தக் கோரிக்கையை நடை முறைப்படுத்த வலியுறுத்தி ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 01 ஆகிய இரு நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் வேலை நிறுத்த நாள்கள் 3 ஆக உயர்த்தப்படும். மார்ச் 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறும். அப்போதும் கோரிக்கை நிறை வேற்றப்படவில்லை என்றால் ஏப்ரல் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் எனவும் வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கத்துடன் (Indian banks association) பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல், ஓய்வூதியத்தைப் புதுப்பித்தல், குடும்ப ஓய்வூதிய முறையை மேம்படுத்துதல், லாபத்தின் அடிப்படையில் பணியாளர் நல நிதியை ஒதுக்குதல், ஓய்வூதியர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு, ஒப்பந்த ஊழியருக்கு வேலைக்கு ஏற்ற ஊதியம், 20 சதவீத ஊதிய உயர்வு மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அகற்றுவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சய் தாஸ் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 8ம் தேதி 10 வர்த்தக சங்கங்கள் மற்றும் வங்கிகள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பல மாநிலங்களில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டது . மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள நிலையில் வங்கி ஊழியர்கள் சங்கம் அன்று வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ..