32°C
விளம்பரம்
Advertisement

தவெக மாநாடு என்ற பெயரில் மதுரையில் கூடிய மூடர்கள்!

admin Published: August 24, 2025 3 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


வெக மாநாட்டுக்கான ஊடகப்பணிகளை முடித்துவிட்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினேன். எண்ணிலடங்கா மூடர்களைச் சந்தித்து உரையாடிய கணக்கை ஊர் பெயரில் எழுதுவதா அல்லது தொண்டர்களின் பெயரில் எழுதுவதா எனத் தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறேன். ஊரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சென்னை உட்படத் தமிழகமெங்கிலுமிருந்து மூடர்கள் வந்திருந்தார்கள்.

“விஜய்யின் அரசியல் வருகையை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“தளபதிதான் அடுத்தது. 2026 நாங்கதான். முதல்வர் பதவியெல்லாம் எங்களுக்குத் தேவையே இல்ல. நாங்க குறி வைக்கிறதெல்லாம் பிரதமர் பதவிதான்”

“விஜய்யிடமிருந்து என்ன மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்?”

“எல்லா மாற்றங்களையும் எதிர்பாக்குறோம். தளபதி வந்தாலே மாற்றந்தியான். மாற்றம் ஒன்றே மாறாதது. தளபதிதான் எங்க ஜனாதிபதி”

“விஜய் எத்தனை சதவீதம் வாக்குகளைப் பெறுவார் எனக் கணிக்கிறீர்கள்?”

“234 தொகுதியும் தளபதிக்குத்தான். மதுரை கிழக்கு விஜய், மதுரை மேற்கு விஜய், திருமங்கலம் விஜய், உசிலம்பட்டி விஜய்… எல்லாமே விஜய்தான்”

“விஜய் மீது வரும் அரசியல் விமர்சனங்கள் பற்றி?”

“கொறைக்குற நாய் கொறச்சிச்சிட்டுத்தான் இருக்கும். நாம அதெல்லாம் பார்க்காம மேல போய்க்கிட்டே இருக்கணும். நாய் கொறைக்க ஆரம்பிச்சிட்டாலே ஆட்சி நமக்குத்தான்னு அர்த்தம்”

“எந்த அண்மைக்காலப் பிரச்சினைகள் குறித்து விஜய் தனது மாநாட்டுப் பேச்சில் கவனப்படுத்த வேண்டும் என நினைக்கிறீர்கள்?”

“அதெல்லாம் நமக்குத் தெரியாது. எத பேசணும் எத பேசக்கூடாது தளபதிக்குத் தெரியும். நீயோ நானோ ஒன்னும் சொல்லிக்கொடுக்கத் தேவையில்ல. புர்தா பாஸே? வர்ட்டா…” =படிக்கும்போதே குமட்டுகிறதே, உரையாடிய எனக்கு எப்படி இருந்திருக்கும்? எண்ணியெண்ணிச் சிரிக்குமளவே இவர்கள் பேசியிருந்தாலும் முட்டாள்தனத்தைக் கண்டால் மூர்க்கத்தனம் அதிகமாகிறது. 103°F சுட்டெரிக்கும் வெயில்கூட அந்த மூர்க்கத்தனத்துக்குக் காரணமாய் இருந்திருக்கலாம். இயக்குநர் மிஷ்கினிடம் ஒரு நேர்காணலில் உதவி இயக்குநர்களைத் திட்டி மோசமாக நடத்துவது குறித்துக் கேள்வி எழுப்பியிருப்பார் சுதிர் ஸ்ரீனிவாசன். அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட மிஷ்கின், “Mediocrity makes me Angry” என்றிருப்பார். அப்படியான கோபம்தான் இது.

ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட பகுதிக்குப் பின்னே தொண்டர்கள் குவிந்திருந்தார்கள். கட்சியின் சார்பில் ட்ரோன் பறக்கவிட்டபோது பைத்தியக்காரக் கூட்டம் தண்ணீர் பாட்டில்களைத் தூக்கி ட்ரோன் மீது அடித்து விளையாடினர். அந்த பாட்டில்கள் அனைத்துமே ஊடகவியலாளர்கள் மீது பட்டு, அவர்களுக்கும் பைத்தியக்காரத் தொண்டர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அதுமட்டுமில்லாது, ஊடகத்தில் பணியாற்றும் ஓர் இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் வசைபாடியிருக்கின்றனர். அப்பெண் இவர்களின் அட்டூழியங்களைச் சகிக்காமல் அழுதுகொண்டிருந்தார். நான் முக்கியமான வேலையின் பொருட்டு மாநாடு தொடங்குவதற்கு முன்பே திடலிலிருந்து வெளியேறினேன். ஊடகப்பகுதியிலிருந்து வெளியேறும்போது கம்பிக்கு அப்பாலிருந்து முதல் இறுக்கைத் தொண்டர்கள் அனைவரையும் முகம் சுழித்துக் கேவலமாகப் பார்த்தேன். வாழ்வில் நான் பிறர் மீது செலுத்திய அதிகபட்ச வன்முறை அதுவே!

ரசிகர்களுடன் விஜய் பகிர்ந்திருந்த Selfie Video அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் 100M பார்வைகளைப் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மாபெரும் கூட்டத்தைத் திரட்டியதைச் சாதனை என்கிற அளவில் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். உருவ வழிபாட்டின் பேரில் பசி, தாகம் துறந்து வெயில் பாராமல் ஒருவனின் கால்களுக்கு அடியிலிருந்து அவனிடத்தில் கைகூப்பி, கூச்சல் போட்டு அவனைத் தொட முயன்று தூக்கியெறியப்படும் ஒருவரின் சுயமரியாதையைப் பற்றி எண்ணிப் பாருங்கள். மனிதனின் உச்சபட்ச வீழ்ச்சியல்லவா அது!

லட்சக்கணக்கில் குவிந்த மூடர்கள் மதுரையைவிட்டு வெளியேறிய மறுநாளே அந்த ஊர் மேகமூட்டமாகக் காணப்பட்டது. ஆனால் மாநாடு நடந்த அன்று வரலாறு காணாத வெயில். மதுரை மண் அவர்களுக்கு அளித்த சாபம் அது. அதிகாலை தாய்நகரம் திரும்பியதும் எனக்காகவே பெய்துகொண்டிருந்தது பெருமழை. செவிகள் செவ்வியல் இசையை நாடுகின்றன.

பாலு

உடனடி செய்திகள்