உணவளிக்கும் திட்டம்: ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார்!

உணவளிக்கும் திட்டம்: ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார்!

சென்னை: இந்தியா முன்னேறிய நாடு என்ற பெருமிதத்தை அடைந்த போதிலும், உணவில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை இன்னமும் அதிகமாக உள்ளது. உலகப் பட்டினிக் குறியீட்டில் (Global Hunger Index) இந்தியாவின் நிலை கவலையளிக்கும் வகையில் இருக்கும் சூழலில், இந்த நிலையை மாற்றும் முனைப்புடன் திரு. ஆலன் அவர்கள் துவங்கி நடத்தி வரும் தொண்டு நிறுவனம் தான் ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேஷன்’ (Help On Hunger Foundation).

கடந்த ஐந்து ஆண்டுகளாக, உணவில்லாமல் தவிப்பவர்களின் இடங்களைத் தேடிச் சென்று உணவளிக்கும் அற்புதமான திட்டத்தை இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

வருடாந்திர நிகழ்வு: 5000 பேருக்கு பிரியாணி விருந்து!

உலக உணவு தினத்தை முன்னிட்டு ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேஷன் சார்பில் வருடாந்திர சிறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த வருட நிகழ்வின் சிறப்பம்சமாக, 5000 பேருக்கு பிரியாணி உணவு சமைக்கப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனச் செயல்பாட்டாளர்கள் வாகனங்கள் மூலம் நேரில் சென்று உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு இந்த உணவை வழங்கினர்.

இந்த ஆண்டு நிகழ்வை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார். அவருடன் நடிகர்கள் ஆதி, சந்தோஷ் பிரதாப், மஹத், மைம் கோபி, கண்ணா ரவி, முத்துக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிய ‘ஹோப்’ இணையதளம் துவக்கம்

இந்த நிகழ்வில், ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேஷன் சார்பில், ‘ஹோப்’ (Hope) எனும் புதிய இணையதளம் (Website) துவக்கப்பட்டது. இதன்மூலம், ஏழை எளியோருக்கு மாதம் மாதம் மளிகைச் சாமான்கள் வழங்கப்பட உள்ளது. இந்த இணையதளம் மூலம், மாதம் வெறும் ₹35க்கு சந்தா (Subscription) செலுத்திப் பலரது பசியைத் தணிக்க உதவலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

நிகழ்வில் பிரபலங்கள் பேச்சு:

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்:

“ஆலன் இந்த நல்ல காரியத்தை ஆறு வருடங்களாகச் செய்து வருகிறார். நாம் நன்றாக இருக்கும்போது பலர் நம்மைத் தேடி வருவார்கள். ஆனால் கஷ்டத்தில் இருக்கும்போது யார் வருவார்கள் என்பது கேள்விக்குறி. 5000 பேருக்கு பிரியாணி போட எவ்வளவு செலவாகும் எனத் தெரியும். ஆனால், பெரிய ஆட்களிடம் உதவி கேட்டுப் போனபோது யாரும் உதவ முன்வரவில்லை. இதற்காக உண்மையாக ஸ்பான்ஸர் தந்த நல்ல உள்ளங்களுக்குப் பெரிய நன்றி. நான் இந்த பவுண்டேஷனில் ஒரு உறுப்பினர் என்பதில் எப்போதும் பெருமை கொள்கிறேன். ஹோப் எனும் இந்த ஆப் மூலம் மாதம் ₹35 சந்தா செலுத்தி பலர் பசியாற நீங்கள் ஆதரவு தர வேண்டும். நான் என்றும் ஆலனுக்குத் துணையாக இருப்பேன்.”

நடிகர் சந்தோஷ் பிரதாப்:

“உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் ஆலனின் இந்த முயற்சி மிகச்சிறப்பானது. நம்மில் பலர் உதவி செய்ய நினைத்தாலும் அதைச் சரியாக முன்னெடுத்துச் செல்ல வழிகாட்டும் இயக்கம் இல்லை. அந்த வகையில் இந்த பவுண்டேஷன் தொடர்ந்து பல வருடங்களாக, பலருக்குப் பயனளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. நானும் இந்தத் திட்டத்தில் சிறு துரும்பாக இருப்பது பெரு மகிழ்ச்சி. இந்தத் திட்டம் இன்னும் பெரிய அளவில் வளர நாம் அனைவரும் உதவ வேண்டும்.”

நடிகர் மஹத்:

“ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேஷன் பற்றி என் நண்பர் மூலம் தான் தெரியும். அவர் கேட்டவுடன் உதவி செய்தேன். நகரம் முழுக்க என்னை அழைத்துப் போய் எவ்வளவு பேர் உணவில்லாமல் தவிக்கிறார்கள் என்று காட்டியபோது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நம்மால் முடிந்த ₹35, ஒருவருக்கு உணவளிக்கும். இந்த முயற்சிக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் எப்போதும் செய்வேன்.”

பவுண்டேஷன் நிறுவனர் ஆலன்:

“இந்த முயற்சி தொடர்ந்து நடப்பதற்கு என் நண்பர்களான இந்த பிரபலங்கள் தான் காரணம். ஐஸ்வர்யா ராஜேஷ் இதை முதன் முதலில் நடத்தியபோது, என் முகத்தை அம்பாஸிடராகப் போட்டுப் பெரிய அளவில் எடுத்துச் செல்லலாமே என்று கேட்டார். அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மஹத் அவர் வீட்டுக்கருகிலேயே பசியால் தவிப்பவர்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக உதவ முன்வந்தார். ஹோப் எனும் புது இணையதளத்தைத் துவங்கியுள்ளோம். மாதம் ஒருமுறை நீங்கள் ₹35 தந்தால் போதும், பலரது பசியைத் தீர்க்க உதவுவீர்கள். அனைவரும் ஆதரவு தர வேண்டும்.”

நடிகர் ஆதி:

“சகோதரி ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்னை அழைத்தார். அவர் எப்போதும் பிறருக்கு உதவவே அழைப்பார். இந்த நிகழ்வு ஒரு ‘மொய் விருந்து’ போல ஆறு வருடங்களாக நடக்கிறது. நம் நாட்டில் இன்றும் 18 மில்லியன் மக்கள் பசியால் வாடுகிறார்கள் என்பது சோகம். எளியோருக்கு உணவளிக்கும் இவர்களின் முயற்சி பெரும் பாராட்டுக்குரியது.”

நடிகர் மைம் கோபி:

“உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவும் இந்த முயற்சி மிகப்பெரியது. இதை முன்னெடுக்கும் ஆலன் மற்றும் தோழி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை மனதார வாழ்த்துகிறேன். இம்முயற்சிக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம்.”

Related Posts