எங்கெங்கு காணினும் டெபிட் + கிரெடிட் கார்ட் மயமாக்க மத்திய அரசின் லேட்டஸ்ட் சலுகைகள்

எங்கெங்கு காணினும் டெபிட் + கிரெடிட் கார்ட் மயமாக்க மத்திய அரசின் லேட்டஸ்ட் சலுகைகள்

கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும்வகையில், பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து நாடு முழுவதும் உருவான பண தட்டுப்பாடு, ஒரு மாதமாகியும் இன்னும் சீரடையவில்லை. ரொக்கப்பணத்தை கையாள்வதற்கு பதிலாக, அனைவரும் டிஜிட்டல் பண பரிமாற்ற முறைக்கு மாறுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். பண தட்டுப்பாடு காரணமாக, கணிசமானோர் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

moneyless dec 9

இந்நிலையில், ரொக்கம் இல்லாத, டிஜிட்டல் பண பரிமாற்றத்தை மேலும் ஊக்குவிக்கும்வகையில், அத்தகைய பரிமாற்றத்துக்கு 11 சலுகைகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் இதை அறிவித்தார்.

இதுபற்றி அவர் நிருபர்களிடம், “ரூபாய் நோட்டு ஒழிப்பின் நோக்கமே கூடுமானவரை ரொக்க பரிமாற்றத்தை குறைக்க வேண்டும் என்பதுதான். அதற்கு பதிலாக, வேறு வழியில் பணம் செலுத்துவதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. அதாவது, கிரெடிட், டெபிட் கார்டுகள், மொபைல் செயலிகள் மற்றும் நெட் பேங்கிங் எனப்படும் இணையதள வங்கி சேவை ஆகிய வழிமுறைகளை ஊக்குவித்து அமல் படுத்த விரும்புகிறோம்.

அளவுக்கு அதிகமான ரொக்க புழக்கம்தான், முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது. எனவே, ரொக்கம் இல்லா பொருளாதாரத்துக்கு மாற வேண்டும்.

அந்த அடிப்படையில், டிஜிட்டல் பண பரிமாற்றத்தை பயன்படுத்தினால் சலுகைகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோலுக்கு 0.75 சதவீத தள்ளுபடி

கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் போட்டால், விலையில் 0.75 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். (இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.49 காசும், டீசலுக்கு ரூ.41 காசும் தள்ளுபடி கிடைக்கும்)

தற்போது, 4 கோடியே 50 லட்சம்பேர் நாள் ஒன்றுக்கு பெட்ரோல், டீசல் வாங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இந்த சலுகை பலன் அளிக்கும்.

புறநகர் ரயில்களில் ஜனவரி 1-ந் தேதி முதல் டிஜிட்டல் பண பரிமாற்றம் மூலம் வாங்கப்படும் சீசன் டிக்கெட்டுகளுக்கு 0.5 சதவீதம்வரை தள்ளுபடி அளிக்கப்படும்.

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் பெறும் அனைத்து பயணிகளுக்கும் ரூ.10 லட்சம் இலவச விபத்து காப்பீடு வசதி அளிக்கப்படும்.

தற்போது, நாள்தோறும் சுமார் 14 லட்சம் பயணிகள் ரயில் டிக்கெட் வாங்கி வரும் நிலையில், இந்த சலுகை மூலம், பெரும்பாலான பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் பெறும் முறைக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, தங்குமிடம், ஓய்வு அறை ஆகியவற்றை ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 5 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும். அனைத்து ரயில் பயணிகளுக்கும் இந்த சலுகை பொருந்தும்.

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், தங்களின் பொது காப்பீட்டு பாலிசிக்கு ஆன்லைன் மூலம் பிரீமிய தொகை செலுத்தினால், 10 சதவீதம்வரை தள்ளுபடி அளிக் கும். அதுபோல், புதிய ஆயுள் காப்பீட்டு பாலிசி வாங்கினால், 8 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும்.

மத்திய அரசு துறைகளும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களும் டிஜிட்டல் பண பரிமாற்றத்துக்கான கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்காது. அந்த கட்டணத்தை தாங்களே ஏற்றுக்கொள்ளும். அதுபோல், மாநில அரசுகளும் இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்தாமல், தாங்களே ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் வாடிக்கையாளர்களிடம் பணம் பெறுவதற்காக, வர்த்தகர்களுக்கு பொதுத்துறை வங்கிகள் சார்பில் 6 லட்சத்து 50 ஆயிரம் ‘ஸ்வைப்பிங்’ எந்திரங்கள் (பாயிண்ட் ஆப் சேல் கருவி) வழங்கப்பட்டுள்ளன.

இந்த எந்திரங்களுக்கு மாதாந் திர வாடகையாக ரூ.100-க்கு மேல் பெறக்கூடாது என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், இன்னும் நிறைய வர்த்தகர்கள் ‘ஸ்வைப்பிங்’ எந்திரங்களை பொருத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

ரூ.2 ஆயிரம் வரையிலான பண பரிமாற்றத்துக்கு சேவை வரி கிடையாது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு நடப்பு நிதியாண்டில் 10 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும்.

மேற்கண்ட சலுகைகள் மூலம் ஏற்படும் இழப்பை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளும்.

டிஜிட்டல் பண பரிமாற்றத்தை கிராமப்புறங்களிலும் பரப்பும் வகையில், சுமார் 10 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட ஒரு லட்சம் கிராமங்களில் தலா 2 ‘ஸ்வைப்பிங்’ எந்திரங்கள் பொருத்தப்படும். இதற்கு தேவையான நிதி உதவி, ‘நபார்டு’ நிறுவனம் மூலம் வங்கிகளுக்கு வழங்கப்படும்.

கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை சங்கங் கள், பால் சங்கங்கள், வேளாண் இடுபொருள் நிலையங்கள் ஆகியவற்றில் இந்த எந்திரங்கள் நிறுவப்படும். இதன்மூலம், அந்த கிராமங்களில் உள்ள மொத்தம் சுமார் 75 கோடி பேர், தங்கள் விவசாய தேவைகளுக்கு ரொக்கம் இல்லா பரிவர்த்தனை வசதியை பெறலாம்.

‘கிசான் கார்டு’ வைத்துள்ள 4 கோடியே 32 லட்சம் விவசாயிகளுக்கு ‘ரூபே கிசான் கார்டு’ வழங்குமாறு கிராமப்புற வங்கிகளையும், கூட்டுறவு வங்கிகளையும் மத்திய அரசு ஊக்குவிக்கும். இதன்மூலம், அவர்களும் ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் மற்றும் ஏ.டி.எம்.களை பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்று அருண் ஜெட்லி தெரிவித்தார்.

Related Posts