உண்மை இது.. பொய் எது? எல்லாம் புரியுது! நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியுது! – டாக்டர். ருத்ரன்

உண்மை இது.. பொய் எது? எல்லாம் புரியுது!  நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியுது! – டாக்டர். ருத்ரன்

கடந்த மூன்று வாரங்களாக மனம் முழுக்க ஓர் உளைச்சல்.. இதன் முடிவு சோகமாகவில்லை, வெறுப்பாய் அருவெறுப்பாய் ஆனாலும் ஒரு நிம்மதிப் பெருமூச்சாகவே முடிந்திருக்கிறது. ஒர் இருபதுகளின் ஆரம்பங்களில் இருந்த இளைஞன்..இவ்வருட ஆரம்பத்தில் என்னிடம் கொண்டு வரப்பட்டான். இரண்டு மாதங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பினான், படிப்படியாய் மருந்து குறைக்கையிலும் சரியாகவே தெரிந்தான். திடிரென்று, நவம்பரில் மோடி எல்லாரையும் திகைப்பிலும் துயரிலும் ஆழ்த்திய இரண்டு நாள் கழித்து, கிட்ட்த்தட்ட நடைபிணமாய் கைத்தாங்கலாய் கொண்டு வரப்பட்டான். இது தரப்பட்ட மருந்துகளால் சாத்தியமில்லை என்பதால் ஒரு பொதுமருத்துவமனைக்குச் செல்லச் சொன்னேன். அடுத்த நாள் காய்ச்சல் வந்த்து..அதை சரிசெய்தும் நினைவு திரும்பவில்லை. பொது மருத்துவர், நரம்பியல் நிபுணர் பார்த்தார்கள், எல்லாரும் இது உன் கேஸ் என்றார்கள். அவசியமில்லை என நான் சொன்னாலும் ‘செஞ்சு பாக்கலாமே’ என்ற பெற்றோருக்காக CT, MRI எடுக்கப்பட்ட்து ( என்னிடம் ஃபீஸ் இல்லை என சொல்வோரும் ஸ்கேன் பாக்கலாமா என கேட்குமளவு அது தான் ஜோஸ்யத்துக்கு அடுத்த விடைதரும் விஷயமாய் மக்களிடம் பரவியுள்ளது).

edit dec 9

பன்னிரண்டாவது நாள் எல்லா மருந்தும் கொடுத்தும் பயனில்லை இனி ECT ஒன்றுதான் பாக்கி என்றேன். ஐயோ வேணாம் என்றார் அன்னை, வேணாம் சார் மருந்திலேயே சரிபண்ணப்பாருங்க இல்லைனா இப்படியே வீட்டுல வச்சுக்கிறேன் என்றார் முன்னறியும் தெய்வங்களில் அடுத்தவர். இன்னும் தீவிரமாய் மருந்துகள் தரப்பட்டும் அவன் விழி திறக்கவில்லை, வாய் பேசவில்லை. என்னை விட மிகவும் இளைய வயதினர் என நினைக்காமல் முகநூலில் பிரபலமான நரம்பியல் நிபுணரையும் வரவழைத்துக் காட்டினேன். ஒருவேளை ஏதேனும் விட்டிருக்கலாமோ என ஒரு மனநலமருத்துவரையும் அழைத்துக்காட்டினேன். அவர் ‘ என்ன இது.. நாம ரெண்டு பேருமே Ect அப்போ எல்லாம் (அந்த.. அப்போ எல்லாம் என்பது 1995க்கு முன்) எவ்வளோ போட்டிருக்கோம்.. போட்டுடு ; என்றார், பெற்றோர் எதிரில்.
மறுநாள் தந்தை என்னிடம் அதுதான் ட்ரீட்மெண்ட்டுனா செய்யுங்க டாக்டர் என்றார். என்னிடம் அந்தக் கருவி இல்லை, அதை என் சிஷ்யனுக்கு இருபதாண்டுக்கு முன் கொடுத்து விட்டேன்.

எங்கெல்லாம் இது சாத்தியம் என பார்த்து இரண்டு இடங்களைத் தேர்ந்து அவர்களிடம் சொன்னேன். அதில் கொஞ்சம் வசதியான இடத்தை 4ம் தேதி தேர்ந்தெடுத்தார்கள். அப்போலோ தயவால் இரு நாட்கள் தாமதம். ஜெ ராஜாஜி ஹாலில் இருந்த நாள், சென்னை அமைதியாய் இருக்க முதல் சிகிச்சை தரப்பட்டது. அடுத்த நாள் சிகிச்சைக்குப் பின் நான் போகும் போது அன்னை தயிர்சாதம் பிசைய, தந்தை பத்திரிகை படித்துக்கொண்டிருக்க, அவன் நடந்து வந்து என்னைப்பார்த்து சிரித்தான். திருப்தி, மகிழ்ச்சி,

ஆயாசம் மிகுந்து படியிறங்கும்போது தோன்றியது.. ‘அவன் சலனமின்றிக் கிடக்கும்போது, நான் காலையும் மாலையும் போய்ப்பார்க்க்கும்போதெல்லாம், அவன் சிரிச்சான், ஒரு பாட்டு முணுமுணுத்தான், கைதூக்கி வச்சுகிட்டான், என்னை சோகமா பாத்தான்; என்றெல்லாம் தன் விருப்பங்களை கற்பனயாக்கி என்னிடம் சொன்னவர் அந்த தந்தை. செவிலியர் மட்டும் என்னிடம் இல்ல சார் சும்மா சொல்றார், என்பார்கள். அதே நபர் அவன் நிஜமாய் பேச, நடக்க சாப்பிட ஆரம்பித்ததை என்னிடம் சொல்லவில்லை நானாய் போய் பார்த்து தான் தெரிந்தது…இதே தந்தையும் தாயும் அவன் கடைசி இரண்டு மாதங்கள் மருந்து சாப்பிடவில்லை என்பதை என்னிடம் எட்டாவது நாள் மருத்துவமனையில் சொன்னார்கள்.

ஆனால் ஜெ சீரியஸ் என நாடே தகித்த ஞாயிறு முன்னிரவு என்னிடம் வந்து சார் ஹாஸ்பிடல்ல காசு கட்டினாதான் டிஸ்சார்ஜ் செய்வாங்களாம்..ஏதாவது ஹெல்ப்.. என்றார். அது என் மருத்துவமனையில்லை என்பதால் சரி நான் காசோலை தருகிறேன் கொடுத்துவிட்டு அவனை ECT கொடுக்க கூட்டிச்செல்லுங்கள் என்றேன். அதே நபர் அந்த ECT கொடுத்த டாக்டரிடம் நான் சிகிச்சையை தாமதப்படுத்தினேனா என்றும் ஒருவேளை தவறான சிகிச்சை தந்ததை சமாளிக்கத்தான் காசு தந்தேனோ என்று பேசியிருக்கிறார்.அடுத்து இன்னொருவருக்கும் இதையே செய்வேன், இதைவிட கேவலமானவராயினும் இழிவாய் பேசினும்.

PS: எங்கள் வாழ்வில் முதல் முறையாக நானும் உமாவும் எங்களிடம் பணம் வாங்கியவரை உடனே திருப்பித்தரச்சொன்னது இவரிடம்தான். தந்துவிட்டார்.

டாக்டர் ருத்ரன்

error: Content is protected !!