நிலம், வீடு வாங்க இ.பி.எப். சேமிப்பிலிருந்து 90% தொகையை எடுத்துக்கலாம் ; மத்திய அரசு அனுமதி

நிலம், வீடு வாங்க இ.பி.எப். சேமிப்பிலிருந்து 90% தொகையை எடுத்துக்கலாம் ;  மத்திய அரசு அனுமதி
பிரதமர் மோடியின் 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், பிஎப் சந்தாதாரர்கள் தங்கள் பிஎப் பணத்தில் 90 சதவீதத்தைப் பயன்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி, வருங்கால வைப்பு நிதியில் 90 சதவீதத்தை ஒரே தடவையாகவோ, தவணை முறையிலேயோ வீடு அல்லது நிலம் வாங்க பயன்படுத்திக் கொள்ள முடியும். 3 ஆண்டுகளுக்கு மேல் பிஎப் சந்தாதாரர்களாக இருப்பவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த முடியும். வீடு அல்லது நிலம் வாங்க கடன் பெறுபவர்கள் தங்கள் கடன் தவணையை சேமநலநிதியில் இருந்து செலுத்தவும் இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.
epf apr 23
இது குறித்த மத்திய அரசின் புதிய விதிமுறைகள் குறித்த அறிவிக்கையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்கள் இ.பி.எப். சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து ஃபிளாட் வாங்குவதற்காகவோ அல்லது நிலத்தில் வீடு கட்டவோ தவணைத் தொகை செலுத்தப் பயன்படுத்தலாம்.
இருப்பினும் நீங்கள் வீட்டுமனை அல்லது வீடு வாங்கும் திட்டத்தில் ஒரு கூட்டுறவு சங்கம் மூலம் வாங்க முடிவு செய்வதோடு அதே கூட்டுறவு சங்கத்தில் உங்களுடன் இபிஎப் கணக்கு வைத்திருக்கும் குறைந்தது 9 பேர் உடன் இணைய வேண்டும். எந்த ஒரு சட்டத்தின் கீழும் இந்த கூட்டுறவு சங்கம் பதிவு செய்யப்பட்டிருப்பது அவசியம் என்று ஏப்ரல் 12-ம் தேதி மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்கள் தங்களது 36 மாத சம்பளத்துக்கு (பேசிக் மற்றும் டிஏ சேர்ந்த தொகை) இணையாக பி.எப். சேமிப்பிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதும்  இதற்காக கொடுக்கப்பட்ட பணத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக இபிஎப் உறுப்பினர்களுக்கு வீடுகட்டி முடிக்கப்படவில்லையென்றாலோ, குறிப்பிட்ட மனை ஒதுக்கப்படாவிட்டாலோ இபிஎப் சேமிப்பிலிருந்து இதற்காக எடுக்கப்பட்ட தொகை மீண்டும் கணக்கில் 15 நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்படுவதை உறுப்பினர்கள் உறுதி செய்ய உரிமை பெற்றவர்களாகின்றனர் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது .

Related Posts