சிப் உலகில் எலான் மஸ்கின் விஸ்வரூபம்: ‘டெராஃபேப்’ மூலம் உலகை ஆளத் துடிக்கும் டெஸ்லா!

சிப் உலகில் எலான் மஸ்கின் விஸ்வரூபம்: ‘டெராஃபேப்’ மூலம் உலகை ஆளத் துடிக்கும் டெஸ்லா!

தொழில்நுட்ப உலகில் எலான் மஸ்க் எதைச் செய்தாலும் அது ஒரு பெரும் அதிர்வலையை உண்டாக்கும். அந்த வகையில், மார்ச் 14-ஆம் தேதியான இன்று, தனது ‘X’ தளத்தில் மஸ்க் வெளியிட்ட அந்த ஒற்றை வரிப் பதிவு, ஒட்டுமொத்த செமிகண்டக்டர் (Semiconductor) உலகையுமே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

“Terafab Project launches in 7 days” இந்த அறிவிப்பு வெறும் வார்த்தையல்ல; உலக சிப் சந்தையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், பிற நாடுகளின் தயவை முற்றிலுமாகத் தவிர்க்கவும் மஸ்க் விரித்துள்ள பிரம்மாண்ட வலை.

‘டெராஃபேப்’ பின்னணி: 2025 முதல் இன்று வரை

கடந்த 2025 நவம்பர் மாதமே இது குறித்த முதல் பொறியை மஸ்க் தட்டிவிட்டார். அப்போது அவர் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அசுர வளர்ச்சியால், எதிர்காலத்தில் மின்சாரம் மற்றும் சிப்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று எச்சரித்தார். “அடுத்த சில ஆண்டுகளில் நாம் ஒரு பெரிய ‘சிப் சுவரை’ (Chip Wall) முட்டி நிற்போம்” என்பது அவரது கணிப்பு.

அந்தக் கணிப்பைச் சமாளிக்கத் தன் கைவசம் வைத்திருந்த ரகசியத் திட்டம்தான் இந்த ‘டெராஃபேப்’. தைவானின் டி.எஸ்.எம்.சி (TSMC) போன்ற நிறுவனங்கள் இன்று உலகின் சிப் தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்கின்றன. ஆனால், புவிசார் அரசியல் சூழல்கள் மற்றும் போர் அபாயங்களால் அந்தப் பகுதிகளில் இருந்து சிப் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதை உணர்ந்த மஸ்க், சொந்தமாகவே உற்பத்தியில் இறங்கத் தீர்மானித்தார்.

ஏன் இது ‘டெரா’ (Tera) எனப்படுகிறது?

இதுவரை நாம் ‘ஜிகா’ (Giga) தொழிற்சாலைகளைத் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் ‘டெரா’ என்பது அதற்கும் மேலானது.

  • ஒருங்கிணைந்த உற்பத்தி: பொதுவாக ஒரு சிப் ஓரிடத்தில் தயாரிக்கப்படும், இன்னோரிடத்தில் பேக்கேஜிங் செய்யப்படும். ஆனால் டெராஃபேப்பில் சிப் டிசைன், ஃபேப்ரிகேஷன், மெமரி மற்றும் லாஜிக் சிப் தயாரிப்பு என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் நடக்கும்.

  • AI-க்கான பிரத்யேகத் தயாரிப்பு: டெஸ்லாவின் ‘ஆப்டிமஸ்’ ரோபோக்கள் மனிதனைப் போலவே சிந்திக்கவும், ‘ரோபோடாக்ஸி’ தானாக இயங்கவும் தேவையான அதிநவீன AI சிப்கள் இங்குதான் உருவாகப் போகின்றன.

  • தற்சார்பு: இதன் மூலம் டெஸ்லா மற்றும் xAI நிறுவனங்கள் சாம்சங் அல்லது மைக்ரான் போன்ற நிறுவனங்களுக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

அடுத்த 7 நாட்களில் என்ன எதிர்பார்க்கலாம்?

மார்ச் 21, 2026 அன்று இந்தத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாக உள்ளன. இந்த ஆலை எங்கு அமையப் போகிறது? எவ்வளவு முதலீடு? எப்போது உற்பத்தி தொடங்கும்? போன்ற கேள்விகளுக்கு அன்று விடை கிடைக்கும். டெக்சாஸ் அல்லது நெவாடா மாகாணத்தில் இதற்கான கட்டுமானப் பணிகள் ஏற்கனவே ரகசியமாகத் தொடங்கப்பட்டிருக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

எலான் மஸ்கின் இந்த அதிரடி ஆட்டம், சிலிகான் வேலியில் உள்ள மற்ற ஜாம்பவான்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது. சிப் பற்றாக்குறை வரும்போது மற்றவர்கள் திணறிக் கொண்டிருக்க, மஸ்க் தனது ‘டெராஃபேப்’ மூலம் உலகிற்கு சிப் சப்ளை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஈஸ்வர் பிரசாத்

Related Posts