சந்திரயான் விண்கலச் செலவு எவ்வளவு தெரியுமா?

சந்திரயான் விண்கலச் செலவு எவ்வளவு தெரியுமா?

ன்று மாலை வரை நமக்கு எட்டாத உயரத்தில் இருந்த நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா இதுவரை மூன்று விண்கலன்களை விண்ணில் செலுத்தியுள்ள நிலையில், அதற்கான திட்ட செலவுகள் எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்வோமா? .

நிலவு குறித்து ஆராய்ச்சி செய்யும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முதல் திட்டமான சந்திரயான்-1 கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான்-1 செயற்கைக் கோள் தயாரிப்புக்கு 470 கோடி ரூபாய் செலவு செய்யபட்டது.

அதன் வெற்றிக்குப் பிறகு, இஸ்ரோ ஜிஎஸ்எல்வி எம்கே 3 என்ற ராக்கெட்டின் உதவியுடன் 2019ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதிக எதிர்பார்ப்புடன் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் முயற்சியில் கடைசி கட்டத்தில் இத்திட்டம் தோல்வியடைந்தது.

விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திராயன்- 2 திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக 978 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. சந்திரயான் -2 தோல்வி அடைந்த நிலையில் அதில் ஏற்பட்ட தவறுகளையும், தொழில்நுட்ப கோளாறுகளையும் திருத்திக்கொண்டு இஸ்ரோ கடந்த ஜூலை -14 ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலத்தை விண்ணில் ஏவியது.

தற்போது அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 திட்டத்திற்காக மொத்தம் 615 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. சந்திராயன் 2 திட்டத்தில், செயற்கைகோளை வடிவமைக்க 375 கோடி ரூபாயும், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர், நேவிகேசன் உள்ளிட்டவைகளுக்காக 603 கோடி ரூபாயும் செலவானது.

சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி எம்கே 3 ராக்கெட்டை வடிவமைக்க 365 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஆனால், நிலவுக்கு சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உதவும் லேண்டர், ரோவர் மற்றும் உந்துவிசை கருவிகளுக்காக வெறும் 250 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது.

சந்திரயான் -2 இல் ஏவப்பட்ட ஆர்பிட்டர் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவை சுற்றி வருகிறது. தற்போது சந்திரயான் 3 இல் ஏவப்பட்டுள்ள லேண்டர் மற்றும் ரோவர் தொகுதிகள், ஏற்கனவே நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கும் ஆர்பிட்டரின் உதவியுடன் கட்டுப்படுத்தப்பட உள்ளன. இதன் காரணமாக சந்திரயான் 3 திட்டத்தில் ஆர்பிட்டர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், சந்திரயான்-3 விண்கலம் செலவு குறைந்தது என்று கருதப்படுகிறது. மேலும், விண்கலத்தின் அமைப்பை எளிமைப்படுத்துவது, கடினமான பெரிய அமைப்புகளை குறுக்குவது, எந்த பொருளில் இருந்தும் அதிகபட்ச பயனை பெற முயல்வது ஆகியவற்றைப் பின்பற்றுவதால் மற்ற நாடுகளை விட குறைந்த செலவில் நிலவு குறித்த ஆய்வு திட்டத்தை செயல்படுத்த முடிவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!