ச்சிச்சீ,, இந்த பழம் புளிக்கும் – முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பாஜக பட்னாவிஸ்!
மகாராஷ்டிராவில் மூன்று நாளைக்கு முன்னால் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பே முதல் வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் நாளை மாலைக்குள் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்னும் குதிரை பேரத்தை ஆரம்பிக்கக் கூட அவகாசம் இல்லாததால் முதல்வர் பட்னாவிஸ் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிராவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மூன்றும் சேர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் கோஷ்யாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. அதே சமயம், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.கவர்னர் கோஷ்யாரியின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீது இரு நாட்களாக விசாரணை நடந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று , ” நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நடத்தி முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது” என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் அஜித் பவார் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து முதல்வர் பட்னாவிஸும் பதவி விலகினார்.
இதுபற்றி தேவேந்திர பட்னாவிஸ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த போது, ‘‘மகாராஷ்டிர மக்கள் பாஜக – சிவசேனா கூட்டணிக்குத்தான் வாக்களித்தனர். போட்டியிட்ட தொகுதிகளில் பாஜக 70 இடங்களில் வெற்றி பெற்றது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி என சிவசேனாவுக்கு எந்த வாக்குறுதியும் நாங்கள் அளிக்கவில்லை. ஆனால் மக்களின் தீர்ப்புக்கு எதிராக சிவசேனா சென்றுள்ளது. தனியாக ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் இல்லை என்று தெரிந்தவுடன் மற்ற கட்சிகளுடன் பேரம் பேசியது.
மதோஸ்ரீ இல்லத்தை விட்டு வெளியே வராத சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்ற தலைவர் களின் வீடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று முதல்வர் பதவியைக் கேட்கும் சிவசேனா தேர்தலுக்கு முன்பே பதவி கொடுக்கா விட்டால் வேறு கட்சிகளுடன் சென்று விடுவோம் எனக் கூற வேண்டியதுதானே. எங்களுக்குப் போதிய பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன். ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்கவுள்ளேன்” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற தேவேந்திர பட்நவிஸ், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். இரண்டாவது முறையாக முறையாக முதலமைச்சராக பதவியேற்று நாட்கள் 8 மணி நேரத்தில் தேவேந்திர பட்நவிஸ் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.