மாரடோனா மறைவு ; கால்பந்து ரசிகர்கள் இறுதி அஞ்சலி – வீடியோ

மாரடோனா மறைவு ; கால்பந்து ரசிகர்கள் இறுதி அஞ்சலி – வீடியோ

கால்பந்து அரங்கில் தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் தனி முத்திரை பதித்தவர், டிகோ மாரடோனா. அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த இவர், தனது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்தவர். 60 வயதான மரடோனா நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவு செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அர்ஜெண்டினாவின் அடையாளமாக அறியப்பட்ட மரடோனாவின் மறைவையொட்டி அந்நாட்டில் 3 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அறிவித்திருந்தார்.தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள அதிபர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். சவப்பெட்டியை சுற்றி அர்ஜென்டினா தேசிய கொடியும், அவர் அணிந்த எண்10 பொறிக்கப்பட்ட சீருடையும் போர்த்தப்பட்டிருந்தது.

60 வயதான மரடோனாவுக்கு அர்ஜென்டினா மட்டும் இன்றி உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. தனது நளினமான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்த மரடோனா 1986-ம் ஆண்டு உலக கோப்பையை அர்ஜென்டினாவுக்கு வென்றுத் தந்தார். அந்த உலக கோப்பை தொடரில் 5 கோல்கள் அடித்தும், 5 கோல்கள் அடிக்க உதவி புரிந்தும் அந்த உலக கோப்பையின் சிறந்த வீரருக்குரிய தங்கப்பந்து விருதை பெற்றார்.

இந்த உலக கோப்பை போட்டியின் கால்இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த இரண்டு கோல்களில் ஒன்று சர்ச்சைக்குள்ளானது. தலையால் முட்டி துள்ளி அடிக்க முயன்ற போது பந்தை கையால் வலைக்குள் தள்ளிவிட்டார்.

இதை கவனிக்காத நடுவர் கோல் என்று அறிவித்தார். ஆட்டம் முடிந்ததும் இது பற்றி பேசிய மரடோனா, ‘அந்த நேரத்தில் எனக்கு எதுவும் தெரியவில்லை. பந்தை அடித்தது கடவுளின் கையாக இருக்கும்’ என்று கூறினார். அது முதல் அந்த கோல் ‘கடவுளின் கை கோல்’ என்று வர்ணிக்கப்பட்டது. நூற்றாண்டின் சிறந்த கோலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஓய்வுக்கு பிறகு அர்ஜென்டினா அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட போதிலும் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் விலகினார். நிறைய கிளப்புகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் உண்டு.

இந்நிலையில், மாரடோனா தலைமையில், 1986-ம் ஆண்டு உலக்கோப்பை வென்ற அர்ஜெண்டினா அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப் பட்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து மரடோனாவின் உடலுக்கு கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Posts