June 4, 2023

கள்ளச்சாராய இழப்புகளும், பூரண மதுவிலக்கும் – கொஞ்சம் அலசல்!

துப்பழக்கம், மதுவுக்கு அடிமையாதல், குடி நோய், கள்ளச் சாராய இறப்புகள் என்பவை மிகவும் ஆழமான, சிக்கலான அரசியல், சமூகப் பொருளாதார, பண்பாட்டு, மருத்துவத் துறைகள் சார்ந்த இவைகளுடன் பின்னிப் பிணைந்த பிரச்சனையாகும். இப்பிரச்சனைக்கு எளிய தீர்வு என எதுவும் இல்லை. பரந்துபட்ட ஒருங்கிணைந்த பல்துறை நடவடிக்கைகள் அவசியம். அவரவர், அகவயப்பட்ட கருத்துகளையும், தீர்வுகளையும் முன் வைக்கின்றனர். அக்கருத்துகள் முக்கியமானவை என்றாலும், அவை பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையாது.

ஏறத்தாழ எட்டாயிரம் ஆண்டுகளாக மனித குலம் சந்தித்து வரும் இப்பிரச்சனைக்கு, எந்த எளிய தீர்வும் இதுவரை பயனளித்து விடவில்லை என்ற கசப்பான வரலாற்று உண்மையை உணர வேண்டும். மது மக்களின் வாழ்க்கை முறைகளில் பெரும் தாக்கத்தை வரலாற்று நெடுகிலும் உருவாக்கி உள்ளது. அதற்கு முக்கிய காரணம், மதுவில் உள்ள ஆல்கஹாலில் உள்ள sedative, hypnotic, tranquilliser, anaesthetic போன்ற முக்கிய பண்புகளாகும்.

சமூகப் பொருளாதார நெருக்கடிகள் உருவாக்கும் வாழ்க்கை முறைகளும், மதுப் பழக்கத்தின் மீது தாக்கம் செலுத்தியுள்ளது. அதாவது மதுப் பழக்கம் கூடுதல், குறைதல் போன்றவற்றை உருவாக்கியுள்ளது. சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய லாப வெறி, முதலாளிய வளர்ச்சி உருவாக்கியுள்ள கடும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, அதீத சுரண்டல், பண்பாட்டுச் சீரழிவு மதுப் பழக்கத்தை அதிகரித்துள்ளது. இந்தக் கள்ளச் சாராய மரண நிகழ்வின் மூலம் தெரிய வரும் உண்மை, இன்றைய வாழ்வியல் நெருக்கடி, அடித்தட்டு மக்களை ஆண் பெண் பாகுபாடின்றிக் குடும்பமாக மது அருந்தும், மோசமான பண்பாட்டு நிலைக்கு ஆளாக்கியுள்ளதைக் காட்டுகிறது.

டாஸ்மாக் இருக்கும்பொழுது பாமர, ஏழை எளிய மக்கள் ஏன் கள்ளச் சாராயத்தை நாடுகிறார்கள்?என்ன காரணம்? கள்ளச் சாராயச் சாவுகளில் ஏன் வசதி படைத்தோர் எவரும் சிக்குவதில்லை? இது ஒரு முக்கியப் பிரச்சனையாகும்.பொருளாதாரக் காரணிகளும், வாங்கும் சக்தியும், மதுவின் விலையும் இவற்றிற்கு முக்கியக் காரணங்கள் என்பதை எளிதாக அறிய முடியும். கள்ளச் சாராயப் பிரச்சனையை சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக மட்டுமே சுருக்கிப் பார்த்து விடக் கூடாது.

மதுப் பழக்கத்திற்கான சமூகப் பொருளாதாரக் காரணங்களைக் களைதல், குடிநோயருக்கு இலவச மறுவாழ்வு சிகிச்சைகளை வழங்கல், மனநல ஆலோசனைகளை, சிகிச்சைகளை வழங்கல், மது விற்பனையை மேலும் முறைப்படுத்துதல், லைசென்ஸ் முறையைக் கொண்டு வருதல், மது விற்பனையை வருவாய் ஈட்டும் முறையாகக் கருதிச் செயல்படும் போக்கை அரசு கைவிடல், மதுப் பழக்கம் உள்ள ஏழைகளுக்கு எம்.ஜி.ஆர் ஆட்சியில் வழங்கியது போல் மலிவு விலை மது வழங்குதல் ,

அதற்கான லைசன்ஸ் முறையைக் கொண்டு வருதல், அதே சமயம் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்தல், திரைப்படங்களில் மது குடிக்கும் அவசியமற்ற காட்சிகளுக்குத் தடை விதித்தல் மது அருந்துதல் கூடாது என்ற மனநிலையை ஒவ்வொருவருக்குள்ளும் உருவாக்க பண்பாட்டு முன்னெடுப்புகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய, மக்களை மதுப் பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான ஒருங்கிணைந்த திட்டம் அடங்கிய மதுக் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும்.

மது விற்பனை என்பதைப் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் தரும் ஒன்றாகக் கருதும் அரசுகளின் போக்கும், மதுபான உற்பத்தி, விற்பனையால் கோடி கோடியாய் லாபம் பார்க்கும் முதலாளிகளும், மதுப் பழக்கம் என்ற பண்பாட்டை ஊக்குவித்து, தனக்கு எதிரான மக்களின் கோபத்தை மழுங்கடிக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பும், அதன் அரசு எந்திரமும், காவல் துறையுமே இன்றைய சீரழிவுகளுக்கும், கள்ளச் சாராய சாவுகளுக்கும் காரணம்.

மது அருந்தலாமா? கூடாதா என்பது தனி நபர் விருப்பம் சார்ந்தது. அதே சமயம், மது அருந்தக் கூடாது என்ற மனநிலையை ஒவ்வொருவருக்கும் உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கும், சமூகத்திற்கும் உள்ளது. அதை முனைப்போடு உறுதியாக அரசும், சமூகமும், நிறைவேற்றிட வேண்டும். கள்ளச் சாரயத்திற்குத் தீர்வாக, பூரண மதுவிலக்கு இருந்து விட முடியாது. குஜராத், பீஹார் மாநில கள்ளச்சாரய இறப்புகளே அதற்குச் சான்று.

பூரண மதுவிலக்கு வரலாற்று ரீதியில் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டிலும் வெற்றி பெறவில்லை என்பதும் கசப்பான உண்மை. மதுவுக்கும், மக்களுக்குமான உறவை உடைப்பது என்பது, கடினமான பல்முனைப் பணி. அதை மனித குலம் கடினமான அறிவியல் ரீதியான தொடர் முயற்சியின் மூலம் தான் சாதிக்க வேண்டும்.

ரவீந்தரநாத் ஜி.ஆர்