கொரோனா பீதி குறைந்தவுடன் உலக மக்களை மிரட்ட தயாராகி வரும் வறுமை!

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. மின்னல் வேகத்தில் மக்களிடையே பரவத் தொடங்கிய இந்த தொற்றுக்கு நாளுக்கு நாள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதன்படி, உலகம் முழுவதும் இதுவரை 33,980 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். 7,22,347 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அதேசமயம் 1,51,766 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். சீனாவை விட அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,175 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 2,484 ஆக உள்ளது. இந்தியாவில் 1,024 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். தீவிரம் அடைந்து வரும் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கிழக்கு ஆசியாவில் மேலும் 1.10 கோடி(11 மில்லியன்) மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆம்.. சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய வைரஸ் இன்று உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது. இந்த கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியினால் கிழக்கு ஆசியாவில் மேலும் 1.10 கோடி(11 மில்லியன்) மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
மேலும், இதுகுறித்து கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆதித்யா மேட்டூ கூறுகையில், ‘கரோனா உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதோடு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும், சீனா கடும் வீழ்ச்சியை சந்திக்கும்.
உலக மக்கள் தொகையில் 5ல் 2 பங்கினர் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில் வணிகம் முடங்கி உள்ளதால் கொரோனா பாதிக்கப்டட நாடுகள் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளும். மேலும் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில், சீனாவைத் தவிர்த்து, மற்ற நாடுகளின் அடிப்படை வளர்ச்சி 1.3% ஆக குறையும். எனினும் உலக நாடுகளின் பொருளாதாரம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும்’ என்று தெரிவித்தார்.