தமிz மேலும் 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செவ்வாய்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

“சென்னையில் மேலும் 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 45 பேர் தில்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள். தமிழகத்தில் இருந்து 1,500 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதில், 1,131 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். மற்றவர்கள் அங்கேயே இருந்துள்ளனர். இந்த 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 45 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களே தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பாதித்தவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராகவே உள்ளது.” என்றார்.

இதன்மூலம் தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை மாநகராட்சி, கொரோனா பாதிக்கக்கூடும் எனத் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க, `Gcc corona quarantine’ புதிய செயலி ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த செயலியைக்கொண்டு, தனிமைப்படுத்தப்பட்டவர்களின் லொகேஷனை டிராக் செய்ய முடியும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது கொரோனா அறிகுறி தங்களுக்கு இருப்பதாகத் தோன்றுபவர்களும் இந்தச் செயலியில் தங்கள் லொகேஷனையும் வீட்டின் புகைப்படத்தையும் அனுப்பலாம். இப்படி அனுப்பும்போது, குறுகிய ஒரே வட்டத்தை சுற்றி பலரும் அறிகுறிகளுடன் இருப்பதாக இருந்தால், அது உடனே மாநகராட்சி நிர்வாகத்துக்குத் தெரியவந்துவிடும்.

இது மட்டுமல்லாமல், ஓர் இடத்தில் மக்கள் கூட்டமாகக் கூடி சமூக இடைவெளியை (Social Distancing) கடைப்பிடிக்கத் தவறினால், அதையும் புகைப்படம் எடுத்து, அந்த செயலியில் பதிவிடலாம். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கத்தக்க ஆட்களை சென்னை மாநகராட்சி அனுப்பிவைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு செயலியான இது, இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், இப்போது தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்கச் செல்லும் பணியாளர்கள், அவர்களின் மொபைல்களில் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்யச் சொல்லிவருகின்றனர். ஐபோனுக்கு இந்தச் செயலி கூடிய விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை, சென்னையில் மட்டும் சுமார் 21,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது, பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!