பக்கவாத நோய் பற்றி பக்கா ரிப்போர்ட்!

பக்கவாத நோய் பற்றி பக்கா ரிப்போர்ட்!

ர்வதேச அளவில் மிக அதிக அளவு மக்களை ஊனமாக்குவது..! வருடத்திற்கு ஆறு கோடி மக்களை உலகம் முழுக்க படுக்கையில் தள்ளி, முடக்கிப் போடுவது..! வருடத்திற்கு ஒன்றரை கோடி மக்களை உலகம் முழுக்க பலிவாங்கிக் கொண்டிருப்பது..! எந்த நோய் தெரியுமா? ப்ரெயின் அட்டாக் எனப்படும் பக்கவாத நோய்!!

உலகம் முழுக்க 6 வினாடிக்கு ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால், இதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் மிக மிக அவசியம். நடை பயிலும் குழந்தை முதல், நடக்க தள்ளாடும் தாத்தா வரை யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இந்த நோய் தாக்கலாம்.

மின்னல்போல் திடீரென்று இந்த நோய் மனித மூளையை தாக்குவதால் ப்ரெயின் அட்டாக் என்கிறோம். பக்கவாதம் நரம்பியல் சார்ந்த நோய். நரம்புகள் மூளையிலும், தண்டுவடத்திலும் ஆரம்பித்து தசைகளை இயக்குகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்தாலோ, அந்த ரத்தக் குழாய்கள் வெடித்தாலோ ப்ரெயின் அட்டாக் ஏற்படும்.

அப்போது மூளையின் எந்த பகுதிக்கு ரத்த ஓட்டம் குறையுமோ அந்தப் பகுதி பாதிக்கப்படும். உடனடியாக கவனிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி செயலிழந்துபோகும். பக்கவாதத்தால் உடல் செயலிழந்துபோவதை தடுக்க முடியுமா? – முடியும்.

வாய்கோணுதல், வார்த்தைகள் குளறுதல், நடையில் தள்ளாட்டம், தடுமாற்றம், கை-கால் தூக்கமுடியாத நிலை, கை-கால்கள் உணர்ச்சியற்று மரத்துபோதல் போன்ற அறிகுறிகள் தென்பட்ட நாலரை மணி நேரத்திற்குள் நோயாளியை அதற்குரிய மருத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றால் பக்கவாத செயலிழப்பை தடுத்திட முடியும்.

மேற்கண்ட அறிகுறிகளை கொண்ட நோயாளிக்கு மூளையில் என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிய உடனடியாக அவருக்கு சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ.ஸ்கேன் செய்யப்படும்.

கண்டறிந்து மூளைக்கு செல்லும் குழாயில் ரத்தம் உறைந்திருந்தால் அதை சரிசெய்வதற்கான ஊசியும், ரத்தக் குழாய் வெடித்திருந்தால் அதை ஒட்டி சரிசெய்யும் தன்மை கொண்ட ஊசி மருந்தையும் செலுத்தவேண்டும். அறிகுறிகள் தென்பட்ட நாலரை மணி நேரத்திற்குள் பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை செய்யாவிட்டால், பக்கவாத பாதிப்பு உடலின் ஒரு பகுதி இயக்கத்தையே முடக்கிவிடும்.

பாதிக்கப்பட்ட மூளைப்பகுதியை மீண்டும் சரி செய்ய இயலாது என்பதால், முடங்கிப் போகும் உடல் பகுதியை மீண்டும் சீராக்கும் வாய்ப்பு குறைவு. இந்தியாவில் பெரும்பாலான நோயாளிகள் பக்கவாதத்திற்கான அறிகுறி தென்பட்ட பின்பு, ஒரு மணி நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம், நமது டாக்டர் மாலையில்தான் வருவார். அதுவரை காத்திருக்கலாம் என்று நினைத்து அமைதியாகி, நாலரை மணி நேரத்திற்குள் சிகிச்சையை பெறாமல் தவிர்த்து விடுகிறார்கள். அதனால் பாதிப்பு அதிகமாகிவிடுகிறது.

பக்கவாதம் ஏற்பட என்ன காரணம்?

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மது அருந்துதல், புகைபிடித்தல், உடல் குண்டாக இருத்தல், தேவையற்ற கொழுப்பு அதிகமாக இருத்தல் போன்றவை முக்கிய காரணங்களாகும். பாரம்பரியமும் ஓரளவுக்கு காரணமாக இருக்கிறது. உடற்பயிற்சியின்மை, மனஅழுத்தம், ஓய்வின்மை போன்றவைகளும் இதற்கு காரணமாகும்.

அதனால் பக்கவாதத்தை லைப் ஸ்டைல் நோய் என்று கூறுகிறோம். இந்த நோய் அதிகமாக ஆண்களைத்தான் தாக்கும் என்ற பொது வான கருத்து உள்ளது. ஆனால், பெண்கள்தான் அதிக தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். மாதவிலக்கு நின்றுபோகும் மெனோ பாஸ் காலம் வரை பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு நன்றாக இருக்கும். அந்த காலகட்டத்திற்கு பிறகு பெருவாரியான பெண்களை பக்கவாதம் தாக்குகிறது.

அதனால் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். உலகம் முழுக்க இந்த நிலைதான் நீடிக்கிறது. முன்பெல்லாம் பக்கவாதம் போன்ற நோய்கள் 40 வயதிற்கு மேல்தான் வரும் என்ற நிலை இருந்தது. இப்போது இளைஞர்களும் இந்த நோயால் தாக்கப்படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம், உணவுப் பழக்கம்.

எண்ணெய்யில் வறுத்த, பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். ஜங்க் புட்ஸ், பாஸ்ட் புட்ஸ் போன்றவைகளை விரும்பி சாப்பிட்டு, உடற் பயிற்சியும் உடல் உழைப்பும் இல்லாமல் இருப்பதால் உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகமாகிறது. குண்டாகிறார்கள். பக்கவாதத்தை தடுக்க விரும்புகிறவர்கள் உணவு பழக்கத்தை சரிசெய்யவேண்டும்.

நிறைய தண்ணீர் பருக வேண்டும். தண்ணீர் அதிகம் பருகினால் மூளைக்கு அதிக ரத்தம் செல்லும். ரத்த அழுத்தம் அதிகரிப்பதும் ஆபத்து. ரத்த அழுத்தம் அதிகரித்தால் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் வெடிக்கும் சூழ்நிலை உருவாகும். சர்க்கரை நோயையும் எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.

பக்கவாத தாக்குதல் ஏற்படக்கூடாது என்று கருதும் பெற்றோர் முறையான உணவு, உடற்பயிற்சி, நோய்க்கட்டுப்பாடு போன்றவைக ளை கடைப்பிடிக்கும் அதே நேரத்தில், தங்களது வாரிசுகளை சிறுவயதில் இருந்தே முறையான உணவுப் பழக்கம், நன்றாக வியர்க்கும் அளவுக்கு விளையாடுதல் போன்றவைகளில் ஈடுபடுத்தவேண்டும்.

சிறுவயதில் இருந்தே வாழ்வியல் முறைகளை செம்மையாக கடைபிடித்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்க முடியும். மது பழக்கமும் பக்கவாதத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது. குடிப்பவர்களால் பெரும்பாலும் மது அளவை கட்டுப்படுத்த முடிவதில்லை.

வாரத்திற்கு ஒருமுறை, மாத்திற்கு ஒருமுறை என்பது போன்ற கட்டுப்பாடுகளை அவர்கள் மீறிவிடுவது, இந்த நோய்க்கு காரணமாக அமைகிறது. பள்ளிப்பருவம், கல்லூரிப் பருவத்திலே குடிப்பழக்கம் வந்துவிட்டால் எதிர்காலத்தில் அனேகமாக அவர்கள் பக்கவாத தாக்குதலுக்கு உள்ளாகிவிடுவார்கள். மது அருந்தும் பழக்கம் இருந்தால் இப்போதே கைவிட்டுவிடுங்கள்.

மற்ற நோய் பாதிப்புகளுக்கும்- பக்கவாத நோய் பாதிப்பிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மற்ற நோய்களின் தாக்குதலுக்கு உள்ளான நோயாளி, சிகிச்சை எடுத்துக்கொண்டே தனது அன்றாட வேலைகளை ஓரளவாவது பார்ப்பார். அதனால் அவருக்கு உடல் இயக்கம் இருக்கும். பக்கவாத நோயாளி படுத்தபடுக்கையாகிவிடுவார். அவரால் உடற்பயிற்சி செய்ய முடியாது.

கொழுப்பு குறையாது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவைகளையும் கட்டுக்குள் கொண்டுவருவது கடினம். ஓடி ஆடி வேலை பார்த்த அவர் படுக்கையில் முடங்கும்போது சாப்பிடுவது மட்டுமே அவரது பொழுதுபோக்குபோல் ஆகிவிடும். வீட்டிலும் நோயாளி என்று நிறைய உணவுகளை வழங்குவார்கள்.

அதனால் உடலில் இருக்கும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுவதற்கு பதில் அதிகரித்துவிடும். பக்கவாத தாக்குதல் ஏற்படுகிறவர்களில் 6 சதவீதம் பேருக்கு மாரடைப்பும் சேர்ந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு இருவிதமான சிகிச்சைகளையும் உடனே வழங்கவேண்டும். சிறுமூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது, பக்கவாத தாக்குதலில் அபாயகரமானதாகும்.

இந்த பாதிப்பிற்குள்ளாகிறவர்களில் 85 சதவீதம்பேர் கோமா அல்லது மூச்சு நின்று போய் இறந்து விடுவார்கள். பொதுவாக தூக்கத்திலே ஒருவர் இறந்துபோய்விட்டால் அவரது உயிர் பிரியக் காரணம், மாரடைப்பு என்பார்கள். சிறுமூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலும், தூக்கத்திலே உயிர் பிரிந்துவிடுவது உண்டு.

சிறுமூளை பாதிப்பை சரிசெய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும்போதுதான் அவரை மூளைச்சாவு அடைந்தவராக அறிவிக்கிறார்கள். இப்போது கருவில் இருக்கும் சிசுவை ஆராய்ந்து, எதிர்காலத்தில் அதற்கு ஏற்பட இருக்கும் ஒரு சில நோய்களை முத லிலே கண்டறிந்துவிடலாம். பக்கவாதம் மல்ட்டி பேக்டராக இருப்பதால், அதற்கு ஏராளமான ஜீன்கள் காரணமாக இருக்கின்றன.

அதனால் சிசுவிலே, எதிர்காலத்தில் பக்கவாதம் வருமா என்று கண்டறிய இயலாது. பிறந்த பின்பு, சிறுவயது பருவத்தில் இருந்தே குழந்தைகளின் உணவு, உடற்பயிற்சி போன்றவைகளில் அக்கறை கொண்டு வளர்த்தால் பக்கவாத பாதிப்பில் இருந்து குழந்தைகளை காக்கலாம். டீன் ஏஜ் மற்றும் நடுத்தர வயதினரும் சரியான வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்து, விழிப்புடன் இருந்தால் இந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். கவனமாக இருந்தும் பக்கவாத பாதிப்புகள் வந்துவிட்டால் அடுத்த நாலரை மணி நேரத்திற்குள் தீவிர சிகிச்சைக்கு உள்படுத்தி காப்பாற்றுவதே சிறந்த வழி.

கட்டுரை: பேராசிரியர் எம்.ஆர். சிவகுமார் M.D.,D.M.,FRCP,
(பக்கவாதநோய் சிறப்பு மருத்துவர்)
சென்னை-10.

error: Content is protected !!