பத்துப் பேரில் ஒருவர் அசுத்தமான உணவால் நோய்வாய்-உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

பத்துப் பேரில் ஒருவர் அசுத்தமான உணவால் நோய்வாய்-உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

ற்பத்தி நிலையிலிருந்து சந்தைப்படுத்தும் வரையிலும் பல நிலைகளைக் கடந்து வரும் பல்வேறு உணவுகள் ஏதாவது ஒரு நிலையில், சீர்கேடு அடைந்தாலும் அது நுகர்வோரை வெகுவாகப் பாதிக்கும். உழவுத் தொழிலில் ஏற்பட்ட மாற்றங்களாலும், வேதி உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றாலும், உற்பத்தியாகும் பொருளின் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகவே இருக்கிறது. இது போதாது என்று கலப்படம் என்கிற பெயரில் உணவில் நுழையும் உடலுக்குக் கேடு தரக்கூடிய பொருட்கள் நம்மை நிரந்தர நோயாளியாக ஆக்கிக்கொண்டு இருக்கின்றன.பாதுகாப்பற்ற உணவால் பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் உலகம் முழுவதும் சுகாதாரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற உணவுகளால் ஆண்டிற்கு 60 கோடி மக்கள் நோய்வாய்ப்படுவதாகவும், அதில் 4,20,000 பேர் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு நாள்

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 7-ம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு நாள் கொண்டாடப்படுகிறது. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படும் ஆபத்து குறித்து மக்களுக்குக் கற்பிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் இந்த நாள் உருவாக்கப்பட்டது. சுகாதாரமற்ற உணவால் நோய்வாய்ப்படுவதைத் தடுப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் குறிக்கோள்.

உணவுப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதே உயிர்களைக் காப்பாற்ற உதவும் என்பதுதான் இந்த ஆண்டிற்கான கருப்பொருள். ஐ.நா. சபையும் பிற அமைப்புகளும் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெங்கிலும் உள்ள மக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் கடந்த 5 ஆண்டுகளாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

60 கோடி பேர் பாதிப்பு

உலகில் பத்துப் பேரில் ஒருவர் அசுத்தமான உணவால் நோய்வாய்ப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதாவது ஆண்டுதோறும் 60 கோடி மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 40 சதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 4,20,000 பேர் இதனால் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சியான தகவலையும் தெரிவித்துள்ளது. கிருமிகள், ரசாயனங்கள் கலந்த மோசமான உணவை உண்பதால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படக்கூடும். இவை புற்றுநோயைக்கூட உண்டாக்கும்.

பெரும்பாலானோர் வீட்டின் சமையலறையில் சமையலுக்கான பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. சமையலுக்காக, அவசரத்தில் உடைத்த பாக்கெட்டைப் பயன்படுத்திய பிறகு, பாக்கெட்டில் உள்ள மீதிப்பொருளை – அது சேமியாவாகட்டும், கோதுமையாகட்டும், டப்பாவில் போட்டு மூடி வைக்கத் தவறிவிடுகிறோம். அடுத்த முறை சமையலின்போது அதில் உள்ள வண்டு, புழுக்களுடன் சேர்த்தே சமைக்கப்படுகிறது.சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள ரொட்டிப் பாக்கெட்டை வீடுகளில் அப்படியே மேஜை மீது போட்டிருப்பார்கள். மறுநாளோ அதற்கு அடுத்த நாளோ, பசியோடு பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் பிள்ளைகள், அதன் சுத்தம் பற்றித் தெரியாமலேயே எடுத்துச் சாப்பிடுவார்கள். இதேபோல் சிலவீடுகளில் ரொட்டியைக் குளிர்சாதனப்பெட்டியில் நாட்கணக்கில் வைத்திருப்பார்கள். அதுவும் தவறு. ஓரிரு நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.

சிலர் சமைத்து மீதமாகிப் போன சாதம், குழம்பு வகைகளைக் கிண்ணம், கிண்ணமாக வைத்து – ‘குளிர்சாதனப்பெட்டியில்தான் வைத்திருக்கிறோமே- கெடாது’, என்கிற நினைப்பில் நான்கைந்து நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவார்கள். சிலர் குடும்பச் சூழல், பணிச்சுமை காரணமாக நான்கு நாட்களுக்கு மேல் தேவையான சமையலைச் செய்து, உள்ளே வைத்துத் தேவையானபோது எடுத்துச் சூடுபடுத்திச் சாப்பிடுவார்கள். சமைத்த உணவுகளை ஒருநாளுக்கு மேல் வைத்துச் சாப்பிடும்போது அதில் உள்ள தேவையான சத்துக்கள் இழந்து போவதோடு அல்லாமல் கெட்டுப்போனதைத்தான் சாப்பிடுகிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அது சில பொழுது விஷமாகக்கூட மாறி இருக்கலாம்.

ருசியாக இருந்தால்போதும் என்பதை மறந்து, தரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பாக உட்கொள்ளப்படும் உணவுகளால் சமூகம் ஆரோக்கியமானதாகவும், சுகாதாரச் செலவுகள் குறைவாகவும் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவினால் ஏற்படும் அபாயங்களை கண்டறியவும், அவற்றை நிர்வகிக்கவும், நடவடிக்கை எடுப்பதும் உலக உணவுப் பாதுகாப்பு நாள் நோக்கமாக உள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!