பானிபூரி புற்றுநோய் நோயை உண்டாக்குமாமில்லே!
முன்னொரு காலத்தில் வடை, பஜ்ஜி, போண்டா, காராசேவு, பக்கோடா… என இருந்த நொறுக்குத்தீனிப் பழக்கம், சமீப காலங்களில் வேறு தளத்துக்குப் போய்விட்டது. அதிலும் இன்று கொடிகட்டிக் கோலோச்சும் நொறுக்குத்தீனி என்பது, நகரம் தொடங்கி சிற்றூர் வரை தெருவுக்குத் தெரு களைகட்டும் பானி பூரி வியாபாரம். சொல்லப்போனால் இது ஒரு தெருவோரக் கடை உணவுதான். ஆனால், இன்றைக்கு நகரங்களின் அத்தனை டிபார்ட்மென்ட் ஸ்டோர் வாசல்களிலும் இந்தக் கடையைப் பார்க்கலாம். பெரிய ஹோட்டல்களில், சிறு வண்டிகளில், தெருவோரக் கடைகளில்… என எங்கும் நிறைந்திருக்கிறது.
இந்த பானி பூரியை இந்தியாவின் பல பகுதிகளிலும் பல்வேறு பெயர்களில் வழங்குகின்றனர். வேகவைத்த சுண்டல், முளைகட்டிய தானியங்களுடன் கூடிய பூரிக்குள் இனிப்பு புளிப்பு சுவை நீர் ஊற்றி பானி பூரி என்ற பெயரில் மகாராஷ்டிராவில் வழங்குகின்றனர்.பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர் மற்றும் புதுடெல்லியில் உருளைக்கிழங்கு, சுண்டலுடன் கூடிய பூரியை ஜல்ஜீராவில் முக்கி எடுத்துக் கொடுக்கின்றனர். இதற்கு கோல் கப்பே அல்லது கோல் கப்பா என்று பெயர் வழங்குகின்றனர். மேற்கு வங்கத்தில் இதனை புச்காஸ் அல்லது ஃபுச்காஸ் எனக் கூறுகின்றனர். பிஹார், ஜார்க்கண்டில் இதை ஃபுச்காஸ் என்றே கூறுகின்றனர். புளி கரைசல் தான் ஃபுச்காஸின் பிரதான சுவையூட்டியாக இருக்கிறது.பானிபூரி பெயர் பல என்றாலும், சுவை வெவ்வேறு என்றாலும் பானிபூரி சாப்பிட ஒரே ஒரு முறைதான் இருக்கின்றது. அதிக நேரம் ஊறவைத்தால் ஒவ்வாது என்பதுதான் அதை சாப்பிடுவதற்கான ஒரே ரூல்.
கையில் ஒரு சின்னத் தட்டு கொடுக்கப்படும். பூரியின் மேல் ஒரு ஓட்டையைப் போட்டு, அதற்குள் சிறிது மசாலாக் கலவையைத் திணித்து, அதற்கான ரசத்தில் (பானி) தோய்த்து வைக்க, நொறுங்கும் சப்தத்துடன், காரமும் லேசான புளிப்புச் சுவையுமாக நாக்கு ஒவ்வொன்றாக உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கும். இன்றைக்கு குழந்தைகளையும் வெகுவாக ஈர்க்கும் முக்கிய நொறுக்குத்தீனியாகிப் போனது பானி பூரி. எலுமிச்சை, உப்பு, பச்சைமிளகாய் கலந்த எந்த உணவாக இருந்தாலும் அதன் சுவை நம்மை ஈர்த்துவிடும். அந்த வகையில் இன்றைக்குத் தமிழக நொறுக்குத்தீனிகளில் பானி பூரிக்கே முதல் இடம்.
இத்தனைக்கும் கடைகளில் கிடைக்கும் பானிகளுக்கான பூரிகளை ஒவ்வொரு கடைக்காரரும் தனித்தனியே செய்வதில்லை. பானி பூரி கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து தொங்கவிடப்பட்டிருக்கும் சின்னஞ்சிறு பூரிகள் மொத்தமாக வாங்கப்படுபவை. அவை தயாரிக்கப்படும் இடம் வேறு. ஆக, பானி பூரி ஆரோக்கியமாகத்தான் தயாரிக்கப்படுகிறதா என்பது நம் முன்னே நிற்கும் மிகப் பெரிய கேள்வி. இந்நிலையில் மக்கள் அதிக விரும்பி சாப்பிடும் பானி பூரிக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருள்களில் புற்றுநோய் உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பானி பூரி சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பானிபூரி என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் கடைகளில் சாப்பிடும் இந்த பானிபூரிகள் உடல்நலத்திற்கு நல்லதா? என்று கேட்டால் அது தயாரிக்கும் விதத்தில் தான் இருக்கிறது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகா பகுதிகளில் உணவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பானி பூரி கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது பானி பூரி தயாரிப்பதற்கு பயன்படுத்தி வரும் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் கூறுகள் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பானி பூரி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சாஸ் மற்றும் மீட்டா பவுடர் போன்றவற்றில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் அதிக அளவில் இருப்பதாகவும், இது மனித உடலின் ஆரோக்கியத்தை மோசமாக்கும் எனக் கூறுகிறார்கள்.அது மட்டும் இல்லாமல் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்களுக்கு விரைவில் தடை விதிக்க உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் கூறியதாவது பானி பூரியில் பயன்படுத்தப்படும் காரம் மற்றும் மீட்டா பொருட்களில் ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிக காரம் சாப்பிடுவதாலும், இதுபோல ரசாயன பொருட்களை பயன்படுத்துவதாலும் வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றது.
பானி பூரி தொடர்ந்து 5 முதல் 7 வருடங்கள் சாப்பிட்டு வந்தால் அல்சர் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கின்றது. இது தொடர்பாக அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளரிடம் பேசி முடிவெடுக்கப்படும். 4 முதல் 5 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. வந்த பிறகு கூட்டம் நடத்தி பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு இருக்கின்றது என்று அவர் தெரிவித்திருந்தார். ஏற்கனவே கோபி மஞ்சூரியன் மற்றும் கபாபில் புற்றுநோயை உண்டாக்கும் அதிக தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த உணவுகள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிலவளம் ரெங்கராஜன்