தமிழ் குரல் / AI Voice
நோலன் திரைப்படங்களுக்கு என உலகம் முழுக்க தனியான ரசிகர் பட்டாளம் உண்டு. மொத்தமே 10 படங்களுக்குள் தான் ஆனால் ஒவ்வொன்றிலும் சயின்ஸ், டிவிஸ்ட், அதிரடியான விஷுவல், யூகிக்கவே முடியாத திரைக்கதை, நான் லீனியர் எடிட்டிங் என மிரட்டுவது அவரது வழக்கம். இன்ஷெப்சன் படத்தின் க்ளைமாக்ஸ் என்ன ? என இன்று வரை விவாதங்கள் முடியவில்லை. ஒவ்வொரு படத்திலும் ஏதாவது விவாதத்தை கிளப்பும் நோலன் இந்த முறை கையிலெடுத்திருப்பது அணுகுண்டின் தந்தை ஓப்பன் ஹைமரின் வாழ்க்கை கதை.

கை பேர்ட் மற்றும் மார்டின் J. ஷெர்வினும் இணைந்து எழுதிய American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer எனும் நூலினைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திரைக்கதையை தன் பாணியில் வழக்கம் போல் கொஞ்சம் குழப்பி எழுதியிருக்கிறார் நோலன். இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்த ஓப்பன் ஹைமரின் அணுகுண்டை அவரது குழு எப்படி கண்டுபிடித்தது. அமெரிக்காவே கொண்டாடிய ஹீரோ பின்னர் அதே அரசாங்கத்தால் எப்படி புறக்கணிக்கபடுகிறார். லட்சத்திற்கும் மேல் மக்களை கொன்ற வெடிகுண்டை கண்டுபிடித்ததற்கு பிறகு, ஏன் அதற்கெதிராக ழுழங்க ஆரம்பித்தார் ஓப்பன் ஹைமர். இது தான் படம்.
வழக்கமாக நோலன் படங்கள் மிக மிக வித்தியாசமான கதைகளத்தில் மனித உணர்வுகளை பேசுவதுடன், விஷுவலிலும், டிவிஸ்ட்களிலும் நம்மை அசரடிக்கும். ஒவ்வொரு ஃப்ரேமிலும் மாறும் திரைக்கதையால் 3, 4 முறை பார்க்க வேண்டி வரும் ஆனால் இது அந்த வகை படமல்ல. இப்படம் நோலனின் “டன்கிரிக்” பட வகை. எந்த டிவிஸ்ட்டும் இல்லாத ஒரு பயோகிராஃபி. படம் முழுக்க முழுக்க கோர்ட் டிராமாவாகத்தான் நகர்கிறது. படம் முழுக்க எல்லோரும் க்ளோசப் ஷாட்டில் பேசிக்கொண்டே இருப்பார்கள். மிக அதிகமாக டாக்குமெண்ட்ரி வாசம் வீசும். அதனால் நார்மல் ஆடியன்ஸுக்கு இந்தப்படம் பிடிக்காமல் போகலாம். ஆனால் சினிமாவை நேசிக்கும் கலைஞர்களுக்கு படம் முழுக்க பல மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறார்.
இப்படம் நோலனின் பொலிடிகல் ஸ்டேட்மெண்ட் என்றே சொல்லாம். படம் முழுக்க அது தான் வருகிறது. ஓப்பன் ஹைமருக்கு இழைக்கப்பட்ட அநீதி, அந்த அநீதியை இழைத்த அரசாங்கத்தை சேர்ந்த ஸ்ட்ராஸ்க்கு அதே போல் நிகழ ஆரம்பிப்பதை மிக மிக நெருக்கமாக நமக்கு காட்டுகிறது இந்தப்படம்.
அரசாங்கங்கள் எப்படி செயல்படும் ? அதன் முகம் எப்படி இருக்கும்? அதற்கு எத்தனை முகங்கள் அறிவியலாளனின் மனம் எப்படி செயல்படும் இதுவெல்லாம் தான் இந்தப்படம்.
நோலனின் மொத்த படத்தின் வசனங்களையும் இணைத்து வைத்தாலும் இந்தப்படத்தில் கொஞ்சம் அதிகம் தான். படம் முழுக்கவே வசனங்களால் நகர்த்தியிருகிறார். கூடவே நடிகர்களுக்கு நடிக்க நிறைய இடம் கொடுத்திருக்கிறார்.
படத்தில் நோலன் மேஜிக் நிறைய இடங்களில் உண்டு ஆனால் அது அவரது கமர்ஷியல் படங்கள் போன்றதல்ல,
ஓப்பன்ஹைமரும் எயின்ஸ்டீனும் சந்திக்கும் காட்சிகள், க்ளைமாக்ஸுக்கு முந்தைய ஸ்ட்ராஸ் விசாரணை டிவிஸ்ட்கள், எல்லாமே அசல் நோலன் முத்திரை. அணுகுண்டு சோதனைக்கு முன்பான காட்சிகள், அந்த வெடிப்பை, அவர் காட்சிப்படுத்திய விதம், அட்டகாசம். ஒரு பரபரப்பை நமக்குள் விதைத்து விடுகிறார்.
படத்தில் மியூசிக்கும் கேமராவும் செய்திருக்கும் ஜாலத்தை நல்ல ஐமேக்ஸ் தியேட்டரில் பார்த்து அனுபவியுங்கள். ஆனால் நோலனின் இன்செப்சன் டார்க் நைட் வகையறா படம் இல்லை அதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
