சர்ச்சைக்குரிய தீவில் சினிமா தியேட்டர்! – சீனா அடாவடி
தென் சீனக் கடல்பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவளம் அதிக அளவில் இருப்பதால் அண்மைய காலமாக சீனா அப்பகுதியில் இராணுவ ரீதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு பல செயற்கைத் தீவுகளை தொடர்ந்து அமைத்து வருகிறது. ஆனால், தென்சீனக் கடலில் பல தீவுகள் தங்களுக்குப் பாரம்பரிய உரிமை உள்ளவை என்பதால் பிலிப்பைஸ், வியட்னாம், புருணை, தைவான், மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் உரிமை கோருகின்றன. இது தொடர்பாக அனைத்துலக தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்றை பிலிப்பைன்ஸ் தாக்கல் செய்திருந்தது. வழக்கின் அடிப்படையிலான விசாரணைக்குப் பின்னர், தென்சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் வரலாற்று ரீதியில் உரிமை கொண்டாடுவதற்கு சட்டரீதியிலான முகாந்திரம் எதுவும் சீனாவுக்கு இல்லை என்று தீர்ப்பளித்தது.

எனினும்,அந்தத் தீர்ப்பை நிராகரித்துவிட்ட சீனா தற்போது கூட சன்ஷா யின்லாங் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள ஒரு தியேட்டரில் ‘தி எட்டர்னிட்டி ஆஃப் ஜியோ யுலு’ (The Eternity of Jiao Yulu) எனும் திரைப்படத்தை 200-க்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளித்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இன்றளவும் தென்சீனக் கடல் பகுதிகளை முழுவதும் சொந்தம் கொண்டாடி சன்ஷா என்று அந்த தீவுக்குப் பெயரிட்டு புதிய நகராட்சியை நிறுவியுள்ள சீனா, அந்தப் பகுதியில் சமீபத்தில் நூலகம் ஒன்றைத் திறந்தது. இவைதவிர, பல்வேறு நகரக் கட்டமைப்புகளையும் அந்த தீவில் சீனா உருவாக்கி வருகிறது. ஆனால், அந்தப் பகுதியில் தங்களுக்கும் உரிமை உள்ளதாக வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் தொடர்ந்து கூறிவருகின்றன. தென்சீனக் கடல் பகுதி விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்கா, அப்பகுதியில் போர்க்கப்பல்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.


