நாய் பாஷையை புரிந்து கொள்ள உதவும் நவீன கருவி! – அமேசான் முயற்சி
நம் வீட்டு நாய்கள் நம் மீது பிரியத்தைக் காட்ட வாலாட்டும் என்று கூறுவார்கள். இது பெரும்பாலும் வளர்ப்பு நாய்களுக்கு பொருந்தும். அதேசமயம் தெருவில் திரியும் நாய்கள் மனிதரைப் பார்த்து வாலை ஆட்டுவது உணர்வு களை வெளிப்படுத்துவதற்குத்தான் என்றும் அது வாலை எப்படி ஆட்டுகிறது என்பதைப் பொறுத்தும் அதன் உணர்வு கள் வேறுபடும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்து கொண்டே வரும் நிலையில் நம் வீட்டிலுள்ள நாய் என்ன பேசுகிறது என்பதை நம் போன்ற மனிதர்கள் மொழிக்கு மாற்றக்கூடிய கருவியை தயாரிப்பதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சிக்கு பக்க பலமாக திகழும் வகையில் அமேசான் நிறுவனம் நிதி அளித்து வருகிறது.

அமெரிக்காவின் வடக்கு அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்லோபோட்சிக்காப் தலைமையிலான குழு இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆம்.. வளர்ப்பு விலங்குகளான் நாய், பூனை உள்ளிட்ட வீட்டு விலங்குகளின் மொழிகளை புரிந்துக் கொண்டு அதனை மனிதமொழியில் மாற்றி வழங்குவதற்கான செயற்கை அறிவு கொண்ட கருவியை உருவாக்கி வருகின்றனர்.
இதற்காக வட அமெரிக்காவில் காணப்படும் நிலத்தில் குழி பறித்து வாழும் அணில் வகையை சேர்ந்ததான “priarie dogs”-களை கொண்டு செய்யப்பட்ட ஆராய்ச்சி முக்கிய முடிவுகளை தந்துள்ளதுடன், ஆராய்ச்சிக்கு புதிய பரிணாமத்தை அளித்துள்ளது. priarie dogs வண்ணங்களையும், தனித்தனி விலங்கினங்களை குறிக்கவும் பிரத்தியேகமான சொற்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. priarie dogs-களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் வீட்டு செல்லப்பிராணிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள ஸ்லோபோட்சிக்காப், பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகளின் பிரத்யேக மொழியையும் அதன் சொற்களையும் இனம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செல்லப் பிராணிகளுக்கான மார்க்கெட் உலக அளவில் மிகப்பெரியது என்பதால், இத்தகையதொரு கருவியை உருவாக்குவது உலகம் முழுவதும் பெரிய வரவேற்பை பெறும் என்பதை கருத்தில் கொண்டு இந்த ஆய்வை அமேசான் நிறுவனம் ஊக்குவித்து வருகிறது. இத்தகையதொரு கருவி அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்தைக்கு வரும் என அமேசான் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


