செஸ் உலகக்கோப்பை: பிரக்ஞானந்தாவை வீழ்த்தி மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.
‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா – நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் ஆகியோர் மோதினர், இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது. இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் இருந்தார்கள்.
இதைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய இன்று டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் டைபிரேக்கர் சுற்று இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி பரபரப்பாக நடைபெற்றது.
அதாவது நேர கட்டுப்பாட்டுடன் ரேபிட் வடிவில் நடைபெற்ற டைபிரேக்கரில் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டு ஆட்டம் நடைபெற்றது. இதில் முதல் ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா சவால் கொடுத்தார். இருந்தும் போராடிய அவரால் வெற்றி பெற முடியவில்லை. 2-வது சுற்றிலும் கார்ல்சன் வெற்றி பெற, உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இந்தத் தொடரில் ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா 2-ம் இடம் பிடித்தார். 3-வது இடத்தை ஃபேபியானோ கருனா பிடித்தார்.
இதன் மூலம் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டதை வெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது!