சென்னை ஐகோர்ட் அட்வகேட் அசோசியேசன் தேர்தல்.. மீண்டும் மோகன கிருஷ்ணன் தேர்வு!

சென்னை ஐகோர்ட் அட்வகேட் அசோசியேசன்  தேர்தல்.. மீண்டும் மோகன கிருஷ்ணன் தேர்வு!

சென்னை ஐகோர்ட்டில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த 2016 நவம்பர் 23 தேதி தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2018 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்நிலையில், சங்க தேர்தல் தொடர்பாக அறிவிப்புக்கும், தேர்தல் புதிய விதிகளுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் காரணமாக தேர்தல் தள்ளிப்போனது.

அதன் பின்னர், கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கபட்டது. வாக்குப்பதிவு தொடங்கியவுடன் வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் மீண்டும் ரத்து செய்யபட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. எம்எச்ஏஏ வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்களில் வாக்களிக்க தகுதியான 4,752 வழக்கறிஞர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளநிலை செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 16 பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தலைவர் பதவிக்கு 9 பேரும், துணைத் தலைவர் பதவிக்கு 8 பேரும், செயலாளர் பதவிக்கு 10 பேரும், பொருளாளர் பதவிக்கு 9 பேரும், நூலகர் பதவிக்கு 11 பேரும், மூத்த செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 42 பேரும், இளைய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 35 பேரும் போட்டியிட்டனர்.

ஐகோர்ட் ஆவின் நுழைவாயில் வழியாக வழக்கறிஞர் வாக்களிக்க அனுமதிக்கபட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வீரர்கள் பாதுகாப்புடன் வாக்கு பதிவு செய்ய வழக்கறிஞர் அனுமதிக்கப்பட்டனர். வாக்கு பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும் எனவும், முதலில் தலைவர் பதவிக்கும், பின்னர் துணைத்தலைவர் பதவிக்கும், செயலாளர் பதவிக்கும் வாக்கு எண்ணப்பட்டது.

நேற்றிரவு தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 1,301 வாக்குகள் பெற்று சங்கத்தின் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட பால் கனகராஜ் 1134 வாக்குகளும், வேல்முருகன் 734 வாக்குகளும் பெற்றனர்.தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி.மோகனகிருஷ்ணன், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று, சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மீண்டும் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றியை அவரது ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

error: Content is protected !!