June 4, 2023

தடுப்பூசிகள் இலவசம் : மருத்துவ உபகரண கலால் வரி ரத்து!

டுப்பூசிகள் ரூ.150க்கு கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான கலால் வரி அடுத்த மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்டக் குழு ஆலோசனை நடத்தியது. ஆலோசனை முடிவில், ஆக்சிஜன் தயாரிப்பு, சேமிப்பு தொடர்பான உபகரணங்கள் இறக்குமதிக்கான கலால் வரி, சுகாதார செஸ் வரி உள்ளிட்டவை 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான கலால் வரியையும் ரத்து செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆக்சிஜன் மற்றும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, உற்பத்தியை பெருக்குவதற்கான செயல்பாடுகள் தொடங்கியுள்ள சூழலில், வெளிநாடுகளின் உதவியை இந்தியா எதிர்நோக்கியுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவில் 2வது அலை தீவிரமாகி பரவி வருகிறது. இதனால், மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு என 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந் நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் உயர்த்தியது. ரூ.250க்கு விற்கப்பட்டு வந்த தடுப்பூசி, மாநில அரசுகளுக்கு ரூ.400க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவித்தது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்த இக்கட்டான சூழலில், தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன.

இப்படி மாநில அரசுகளின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசிகள் ரூ.150க்கு கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.