செவ்வாயில் பிராணவாயு தயாரித்து சாதனைப் படைத்தது நாசா! – வீடியோ

செவ்வாயில் பிராணவாயு தயாரித்து சாதனைப் படைத்தது நாசா! – வீடியோ

ரண்டு நாட்களுக்கு முன்னால் செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாஃப்டரை பறக்க விட்டு உலகத்தை வியக்க வைத்த நாசா தனது அடுத்த ஆட்டத்தையும் நடத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் அதன் ஆய்வுகள் தற்போது உச்சம் தொட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்திற்கு சென்ற பெர்சவரன்ஸ் எனும் விண்கலம் தற்போது பல ஆய்வுகளைச் செய்து வருகிறது. இந்த விண்கலம் முதன் முறையாக வரையறுக்கப்பட்ட அளவில் எரிபொருளை தன்னுள் வைத்துக்கொண்டு செவ்வாய் கிரகம் சென்றுள்ளது. இதன் மூலம் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த இயலும் என்பதை நிரூபிக்கப் போகிறது.

கடந்த செவ்வாய் அன்று மற்றொரு ஆய்வில் அங்குள்ள காற்றில் இருந்து அதுவும் மெல்லியதாக நிலவும் காற்றிலிருந்து 5 மில்லி கிராம் தூயப் பிராண வாயு (ஆக்சிஜன்) உருவாக்கி சாதனைப் படைத்துள்ளது. இந்தளவிற்கான காற்று ஒரு விண்வெளி வீரர் 10 நிமிடங்கள் சுவாசிக்கப் போதுமானது என்று கணிக்கப்பட்டுள்ளது. எதற்காக அங்கு போய் பிராண வாயுவைத் தயாரிக்க வேண்டும்? ஏனெனில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் காலம் ஒன்று வரும் என்று பரவலாக உலகப் பணக்காரர்களிடையே நிலவும் எதிர்பார்ப்பும் இப்போதே அங்கு நிலம் வாங்கி வைத்திருப்போரின் எண்ணிக்கை கூடிவருவதுமே காரணங்களாகும். பிராணவாயு இருந்தால்தானே மனிதர்கள் வாழ முடியும்? மேலும் அங்கு மனிதர்களை வாழ வைக்க எப்படி பிராண வாயு தயாரிப்பது? அதற்குத்தான் இந்த ஆய்வு. முதலில் விண்வெளி வீரர்களை அனுப்பி பிராண வாயு தயாரித்து அதை ராக்கெட்டில் நிரப்பி மீண்டும் பூமிக்கு பயணிக்கச் செய்யும் திட்டமும் உண்டாம். இப்படி குறைந்தளவு பிராணவாயுவைத் தயாரித்தால் போதாது. அதற்குப் பல டன்கள் வேண்டும். அப்படி என்றால்? பெரிய இயந்திரங்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும். இப்போது மிகச் சிறிய கருவி ஒன்றின் மூலமே 5 கிராம் பிராண வாயுவைத் தயாரித்துள்ளனர். பெரியக் கருவிகளின் மூலம் இதை அதிகரிக்கலாம்.

பிராண வாயுவைத் தயாரித்த மோக்ஸி எனும் கருவிதான் மற்றொரு கிரகத்தில் இச்செயலைச் செய்த முதல் கருவியாகும் என்று நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் 95% கரிய அமில வாயுதான் இருக்கிறது. அதாவது நாம் வெளியே விடும் மூச்சுக்காற்று.. சூடானது. இதிலிருந்து பிராண வாயுவைத் தயாரித்துள்ளனர். விண்வெளி வீரர்கள் செவ்வாயில் வாழும் போதும் பிராண வாயு தேவை. அங்கிருந்து ராக்கெட்டில் பூமிக்குத் திரும்ப 25 மெட்ரிக் டன்கள் பிராண வாயுத் தேவை. இங்கிருந்து செவ்வாய்க்கு பிராண வாயுவைத் தூக்கிச் செல்வதற்கு பதிலாக ஒரு டன் எடையுள்ள ஒரு கருவியைத் தூக்கிச் சென்று அதிலிருந்து பிராண வாயுவைத் தயாரிக்கலாம். ஆனால் இந்தளவு தயாரிக்க ஒரு ஆண்டுக் காலம் பிடிக்கலாமாம்.

இப்போதைய ஆய்வை மீண்டும் ஒன்பது முறை செய்ய வேண்டும். வெவ்வேறு பகுதிகளில் செய்ய வேண்டும். இதை அடுத்த இரண்டாண்டுகளில் செய்யப் போகிறார்கள். மோக்சியினால் 10 மில்லி கிராம் பிராண வாயுவைத் தயாரிக்க முடியும். இந்த முறை சென்றுள்ள பிரஸ்சவரன்ஸ் செயற்கைக்கோளின் முக்கியப் பணி பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் வாழ்ந்த மைக்ரோப்ஸ் களின் படிமங்கங்களைக் கண்டறிவதாகும்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

error: Content is protected !!