இணைய அடிமைகளாகும் குழந்தைகள் – மத்திய அரசு தகவல்!

இணைய அடிமைகளாகும் குழந்தைகள் – மத்திய அரசு தகவல்!

பெரும்பாலான குழந்தைகள் செல்போன் மற்ரும் லேப்டாப் தொடர்ந்து பார்ப்பதால், ‘மாறுகண்,ஒன்றரைக் கண் மற்றும் கிட்டப்பார்வை’ பாதிப்புகள் பலமடங்கு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் 23.8% குழந்தைகள் படுக்கையில் இருக்கும்போது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று மக்களவையில் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

முன்பெல்லாம் சிறுகுழந்தைகள் வீட்டு முற்றங்களில் நன்றாக ஓடி விளையாடுவது உண்டு. உடல் தசைகள் இறுக்கம் கொள்ளவும், அவர்களை திடகாத்திரமானவர்களாக அது மாற்றவும் உதவியது. இப்போது பல வீடுகளில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே காணமுடிகிறது. இதனால் மழலைகளின் உடல் போதிய வலுப்பெறுவதில்லை. சுறுசுறுப்பு குறைந்து, இயல்பான செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். மேலும் செல்போனின் கதிர்வீச்சு குழந்தைகளை எளிதாக தாக்கும். செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. போதிய சுய சிந்தனை, கற்பனைத்திறனை பெறும் சக்தி அவர்களுக்கு குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றெல்லாம் எச்சரிக்கை வெளியானது நினைவிருக்கும்

இந்நிலையில் டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று ஒரு கேள்விக்கு அளித்த பதிலில், சுமார் 23.8 சதவீத குழந்தைகள் தூங்குவதற்கு முன் படுக்கையில் இருக்கும் போது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் 37.15 சதவீத குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் கவனம் செலுத்தும் திறன் குறைந்துள்ளதாகவும் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

அதே சமயம் குழந்தைகளின் இணைய அடிமைத்தனம் குறித்த குறிப்பிட்ட தகவல் எதுவும் இல்லை, ஆனால் குழந்தைகள் இணைய அணுகலுடன் மொபைல் போன்கள் மற்றும் பிற சாதனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் (உடல், நடத்தை மற்றும் உளவியல்-சமூக) குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்ட ஆய்வின் தரவுகளை மேற்கோள் காட்டியுள்ளது.

ஆய்வின்படி, 23.80% குழந்தைகள் படுக்கையில் இருக்கும்போதும், தூங்குவதற்கு முன்பும் ஸ்மார்ட் போன்களைப் பயன் படுத்துகிறார்கள். இது வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது மற்றும் 37.15% குழந்தைகள், எப்போதும் அல்லது அடிக்கடி, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் கவனம் செலுத்தும் அளவு குறைகிறது. தொற்று நோய்களின் போது குழந்தைகளிடையே செல்போன் பயன்பாடு அதிகரிக்கிறது. இதன் விளைவாக இணைய அடிமையாதல் அதிகரிக்கிறது என்றும் இணையமைச்சர் பதிலளித்தார்.

error: Content is protected !!