சென்னை சூப்பர் கிங்ஸ்: அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமனம்!

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐபிஎல் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், இத்தொடரின் ஒட்டு மொத்த நாயகன் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, ஜடேஜாவிடம் அந்த பதவியை ஒப்படைப்பதாக முடிவு செய்துள்ளார். கேப்டன் பதவியை மட்டும் தான் கொடுத்திருப்பதாகவும், சிஎஸ்கே அணியில் விளையாடுவதை தொடர்வார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 முதல் ஆண்டு தோறும் 20 ஓவர்கள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 2020ல் இப்போட்டியின் ஸ்பான்சரை டீரிம் 11 நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு ஸ்பான்சரை விவோ பெற்றிருந்தது.
இந்நிலையில் நடப்பாண்டும் இதே நிறுவனம் ஸ்பான்சராக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டாடா நிறுவனம் முதன்மை ஸ்பான்சராக வந்துள்ளது. மேலும், இம்முறை ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் உட்பட 8 அணிகளோடு கூடுதலாக ஆமதாபத், லக்னவ் ஆகிய 2 அணிகள் இணைக்கப்பட்டிருகின்றன.
இதனையடுத்து, இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இந்த 15வது ஐபிஎல் தொடர் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபிஎல்-ன் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வீரராக களமிறங்குகிறார் மகேந்திர சிங் தோனி. தனது கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவுக்காக தோனி விட்டுக்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிஎஸ்கே அணியின் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஊடகவாசிகளிடம், ‘தோனி கடந்த சில நாட்களாகவே யோசித்துக்கொண்டிருந்தார். ஜடேஜா தனது கிரிக்கெட் வாழ்கையில் தற்போது உச்சத்தில் உள்ளார். நல்ல ஃபார்மில் இருக்கிறார். இந்த நேரம் தான் அவர் கேப்டன்சி பொறுப்பை ஏற்க சரியானது என தோனி முடிவெடுத்துள்ளார். கடந்தாண்டே முடிவானது சென்னை அணியின் எதிர்காலம் குறித்து எப்போதுமே தோனி யோசித்துக்கொண்டே தான் இருப்பார். கடந்தாண்டே ஜடேஜாவிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டுவிட்டது. தோனிக்கு பின்னர் ஜடேஜா சரியாக இருப்பார். தோனியுடன் அவர் இருந்த அனுபவம், சிஎஸ்கே குறித்த புரிதல், ஆகியவையால் கடந்தாண்டே முடிவு எடுக்கப்பட்டு விட்டது.
கோலி விஷயம் போன்று தான் தோனி அனைத்திற்குமே சரியான நேரத்தை பார்ப்பார். விராட் கோலியிடம் இந்திய அணியின் கேப்டன்சியை மிகவும் சுமூகமாக ஒப்படைத்தார். அதன்பின்னர் கோலியை சில ஆண்டுகள் மேம்படுத்தினார். தற்போதும் அதே நிலைமை தான். ஜடேஜாவிடம் கேப்டன்சியை ஒப்படைத்துவிட்டு, அவரை தயார் செய்யப்போகிறார். கடந்த 2012ம் ஆண்டு முதல் ஜடேஜா சிஎஸ்கேவில் உள்ளார். அவரின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது’ என்று காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.