சாம்சங் செல்போன் பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

சாம்சங் செல்போன் பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வரும் அதே நேரத்தில் மோசடி செய்யக்கூடிய தொழில்நுட்ப செயலிகளும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இணையதளங்கள் வழியாக நடைபெறும் மோசடிகள், குற்றங்கள் தற்போது அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. இவ்வாறான இணையதள மோசடிக்கு கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொழில்நுட்பக் குறைபாடு கொண்டு சில மாடல் தொலைபேசிகள் இருக்கிறது என்று மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் சாம்சங் செல்போனின் குறிப்பிட்ட மாடல்கள், ஹேக்கர்களின் தாக்குதலுக்கு எளிதில் ஆளாவதால், அவை குறித்தான பாதுகாப்பு கட்டமைப்புகளை உடனடியாக மேம்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்தியக் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (Indian Computer Emergency Response Team (CERT-In)), இணைய பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை அவ்வப்போது குடிமக்களுக்கு வழங்கி வருகிறது.

அந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி போன்களை பயன்படுத்துபவர்களை குறிவைத்து கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிடப்படுள்ளது. புதிதோ, பழையதோ சாம்சங் செல்போனின் கேலக்ஸி வரிசை மாடல்களை பயன்படுத்துவோர் இந்த அறிவுறுத்தல்களை உடனடியாக பின்பற்றுவது அவசியம்.

சாம்சங் தயாரிப்புகளின் கேலக்ஸி மாடல்களின் மேம்படுத்தப்படாத இயங்குதளம் கொண்ட செல்போன்கள் எளிதில் ஹேக்கர்களின் கைவரிசைக்கு ஆளாகின்றன. செல்போனின் பாதுகாப்பு கட்டமைப்புகளை கடந்து, பயனரின் தனியுரிமையை பாதிக்கும் வகையிலான தாக்குதல்களும் இவற்றில் சேரும். செல்போனில் சேகரித்து வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்கள் முதல் வங்கி அணுகல்கள் வரை ஹேக்கர் தாக்குதல்களுக்கு ஆளாகக் கூடும்.

குறிப்பாக சாம்சங் செல்போனின் 11, 12, 13 மற்றும் 14 ஆகிய ஆண்ட்ராய்டு பதிப்புகள், எளிதில் இணையவெளித் தாக்குதல்களுக்கு ஆளாகின்றன. பலவீனமான இந்த பதிப்புகளால், ஹேக்கர்களால் செல்போனில் இருக்கும் சிம் கார்டின் பின் களவுபோவது, சேகரிப்பில் இருக்கும் தரவுகள் திருட்டு, தொலைவிலிருந்து செல்போனை இயக்குவது அல்லது முழுக்கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொள்வது ஆகியவை சாத்தியமாகக் கூடும்.

இவற்றைத் தவிர்க்க சாம்சங் கேலக்ஸி போன்களின் பயனர்கள் தங்கள் சாதனத்தின் இயங்குதளம் மற்றும் ஃபர்ம்வேர் போன்றவற்றை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் பிளே ஸ்டோரை தவிர மற்ற செயலிகள் வழியாக பதிவேற்றம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் மெசேஜ், மெயில் வழியாக வரும் லிங்குகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும்.. அவ்வாறு செய்யத் தவறினால் சாம்சங் மாடல்கள் ஹேக்கர்களின் அச்சுறுத்தல்களுக்கு எளிதில் ஆளாகக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது

error: Content is protected !!