கூச முனிசாமி வீரப்பன்- விமர்சனம்!

கூச முனிசாமி வீரப்பன்- விமர்சனம்!

த்தனை கதைகள் கேட்டாலும், எத்தனை பெர்ஸ்பெக்டிவ் வந்தாலும் பிரமிப்பூட்டும் வாழ்வு வீரப்பனுடையது. கொண்டாடுவதற்கோ, ஆதர்சமாக கொள்வதற்கோ ஒன்றுமில்லை. ஆனால் சமூகம் பற்றியும் நம் நாட்டு சிஸ்டம் குறித்தும் யோசிக்க வைக்கும் கதை. இதுவரை வீரப்பனை மையமாக கொண்டு வந்த படைப்புகள் பெரும்பாலானவற்றை பார்த்திருக்கிறேன்; படித்திருக்கிறேன். ஆனால் zee5ல் இப்போது வெளியாகியிருக்கும் ஆவணத்தொடர் முற்றிலும் வேறு. காரணம், இதில் வீரப்பனே பேசியிருக்கிறார். முதல் முறை பார்வையாளராக நாம் நிற்கும் இடம் மாறியிருக்கிறது. வீரப்பன் பெர்ஸ்பெக்டிவ், பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசி செய்த நக்கீரன் குழுமத்தின் தேடுதல், அரசின் வாதமென மூன்று முக்கிய புள்ளிகளைக் கொண்டு இந்த ஆய்த எழுத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தவற விடக்கூடாத ஓர் ஆவணத்தொடர்.

விரிவான விமர்சனம் எல்லாம் இதற்குத் தேவையில்லை. சில விஷயங்களை மட்டும் சொல்லலாம்.

ஒரு காவல்துறை உயர் அதிகாரி. தேடுதல் வேட்டைக்குத் தலைவன். ஆட்டுக்கறிக்கு ஆடிமை. ஒவ்வொரு நாளும் அவன் பசிக்கும் ருசிக்கும் ஆடு தேவை. மூலவருக்குக் கிடைப்பதில் பாதியாவது மற்ற உபதெய்வங்களுக்கும் வேண்டுமில்லையா? தினமும் பல ஆடு என ஆயிரக்கணக்கான ஆடுகளை மக்களிடமிருந்து பிடுங்கி உண்டிருக்கிறார்கள். ஆடுகளை இழந்த மக்கள் தன்னிடம் முறையிட்டதாகச் சொல்கிறான் வீரப்பன். அவர்களுக்காக அந்த அதிகாரியை கொல்ல முடிவு செய்து கன்னி வெடித் தாக்குதல் நடத்துகிறான். இதில் 22 பேர் இறந்தாலும் உயரதிகாரி தப்பித்துவிடுகிறான்.

அந்தக் கதையைச் சொல்லும் வீரப்பன் அந்த உயரதிகாரிக்கு தாடையில் பலத்த அடியென்கிறான். இனி அந்த வாயால் எந்த ஆட்டையும் மென்று விழுங்க முடியாத தண்டனையை கடவுள் அவனுக்குத் தந்ததாகச் சொல்கிறான் வீரப்பன். அவனுள் ஒரு பிரமாதமான கதை சொல்லி இருக்கிறான். வீரப்பன் சொல்லும் கதைகளை விட அதை சொல்லும் பாணி அட்டகாசம்.

இரண்டாவது, இந்த மாதிரி சுவாரஸ்யங்களை அப்படியே காட்டியிருந்தால் அது ‘ஒகே’ என்ற அளவில் போயிருக்கலாம். அதற்கு முன்னும் பின்னும் அழகாய் உண்மையையும், தொடர்புடையவர்களின் உரையைச் சேர்த்ததிலும் இத்தொடரை உருவாக்கியவர்களின் திறமை பளிச்சிடுகிறது.

ஆவணத்தொடருக்கு சுவாரஸ்யம் முக்கிய விஷயமல்ல. ஆனால் எனக்கு முதல் மூன்று எபிசோடுகள் பட்டாசாய் போனது. நான்காம் எபிசோடு காட்சிகள் நிறைய முறை பல படங்களிலும் பார்த்ததால் கொஞ்சம் நெருடியது. அது இல்லாமல் போனால் இதுவும் காவல்துறைக்கு ஆதரவானது என்ற விமர்சனம் எழலாம் என்பது புரிகிறது. ஆனால் பார்வையாளனாக அந்த எபிசோடும் ஐந்தாம் ஏபிசோடும் வீரப்பன் அதிகம் பேசாததால் சுவாரஸ்யம் குறைவு. முடிவும் அடுத்த சீசனா என சோர்வூட்டியது.

வீரப்பனைப் பற்றி இனி தேடித்தேடி படிப்பேனா எனத் தெரியவில்லை. இதுவரை பார்த்ததிலிருந்து சில விஷயங்கள் புரிகிறது.

1. வீரப்பனின் முதல் கொலை தந்தத்திற்கோ சந்தன மரத்துக்கோ இல்லை. அது அரசியல் கொலை.
2. மொத்தம் 11 மாதங்களே சந்தன மரம் வெட்டியிருக்கிறான். தந்தம் சில ஆண்டுகள் மட்டுமே. அவனை பிரபலமாக்கியது அவன் தலைமறைவு வாழ்க்கைதான்.
3. வீரப்பன் காட்டின் காவலன் எல்லாம் இல்லை. வேட்டையின் ருசி கண்ட ஒரு கொடூர மனிதன்.
4. அவன் ஒருவன் தான். நாங்கள் பல்லாயிரக்கணக்கான கொடூரமானவர்கள் கூட்டம் என்கிறது காவல்துறை.
5. மனிதன் என்பவன் சல்லிப்பயல் தான். மகத்தான சல்லிப்பயல் எல்லாம் இல்லையென நினைக்க வைக்கும் கதை இது. பாறையின் இடையில் வேர் விடும் துளிராய் ஒட்டு மொத்தத் தொடரில் நம்பிக்கை ஒளி எனக்குப் பாய்ச்சிவர் ஒருவர். அவரை காவல்துறைதான் ஒற்றனாக காட்டுக்குள் அனுப்புகிறது. ஆனால் அவர் வீரப்பனைக் கொல்லவில்லை. ஏனென்று இத்தொடரில் சொல்கிறார். பெயர் மறந்து விட்டது. அவர் ஒரு பாய். அப்படித்தான் வீரப்பன் அவரை அழைத்திருக்கிறான்.

Jeyachandra Hashmi kudos to the entire team and to you too bro. Excellent work.

கார்கி பவா

இத்தொடர் ZEE5 ல் காணலாம்

https://www.zee5.com/web-series/details/koose-munisamy-veerappan/0-6-4z5469248

 

error: Content is protected !!