ஆப்டிகல் கடைகளை கண்காணிக்க மத்திய அரசு முடிவு!
நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுக்க பலருக்கும் கண்ணாடி தவிர்க்க முடியாததாகிவிட்டது. பார்வைக் குறைபாடு இல்லாதவர்கள்கூட ஸ்டைலுக்காகவும் குளிர்ச்சிக்காகவும் கண்ணாடியைப் பயன்படுத்துகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளில் பெரும்பாலோர் கண்ணாடியைப் பயன்படுத்துகின்றனர். இதையடுத்து நம்மில் பலரும் தரமற்ற கண்ணாடிகளை வாங்கி அணிவது கண்ணாடி அணிவதன் நோக்கத்தையே சிதைத்துவிடுகிறது. தொடர்ந்து தரமற்ற கண்ணாடிகளைப் பயன்படுத்தினால் பார்வைக் குறைபாடு நிச்சயம் ஏற்படலாம். தரமான கண்ணாடிகளிலும் கீறல், சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டால் உடனடியாகக் கண்ணாடியை மாற்றிவிட வேண்டும். இல்லையென்றால், கூர்ந்து பார்த்துக் கண்ணுக்கு அழுத்தம் தந்து பார்வைக் குறைபாடு ஏற்பட நேரிடலாம். பார்வைக் குறைபாட்டுக்காகக் கண்ணாடி அணிந்தவர்களுக்குப் பாதிப்பு அதிகமாகும் என்ற எச்சரிக்கை வெளியானாலும் அதை சட்டை செய்யதான் ஆளில்ல்லை. இந்நிலையில் தற்போது ஆப்டிகல்ஸ் கடைகள் மாநில நிறுவனங்கள் சட்டப்படி அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றின் மீது எந்த கண்காணிப்பும் மேற் கொள்ளப்படுவதில்லை. எனவே ஆப்டிகல்ஸ் கடைகளுக்கான விதிமுறைகளை வரையறை செய்து, அவற்றை முறைப்படுத்த அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கண் மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘ அக்குழுவின் உறுப்பினரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையின் கண் மருத்துவத் துறை பேராசிரி யருமான அத்துல்குமார் கூறும்போது, “கண் மருத்துவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இது தொடர்பாக பேச உள்ளோம். இதற்கு முன் அரசு சார்பில் ஏதேனும் விதிகள் உள்ளனவா என ஆராய உள்ளோம். ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவுகள் அரசுக்கு பரிந்துரைக்கப்படும். பின்னர் இவை அமலுக்கு வரும்” என்றார்.
கண் மருத்துவர்கள் மற்றும் அதன் தொழில்நுட்பம் பயின்றவர்கள் சகல வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளில் கண் பரிசோதனை செய்கின்றனர். மூக்குக் கண்ணாடிகளுக்கு இவர்களின் பரிந்துரையை பெறுவதே சரியானது. ஆனால் ஆப்டிகல்ஸ் கடைகளே பரிசோதனை மேற்கொள்வதால் பலநேரங்களில் பிரச்சினை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே ஆப்டிகல்ஸ் கடைகளை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்திய கண் பரிசோதனை கவுன்சில் புள்ளிவிவரப்படி, நாட்டில் சுமார் 45 கோடி மக்களுக்கு கண் பரி சோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்த எண்ணிக்கை, கண் பரிசோதனைகளில் ஏற்படும் 50 சதவீத தவறுகளால் அதிகரித்துள்ளது. இதனால் சுமார் 10 லட்சம் கண் பரிசோதகர்கள் நாட்டுக்கு தேவைப்படுகின்ற னர். ஆனால் தற்போது வெறும் 9,000 கண் பரிசோதகர்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் பயிற்சிக்கான கல்லூரிகளும் 20 மட்டும் இருப்பதால் அதில், ஆண்டுக்கு ஆயிரம் பரிசோதகர்கள் மட்டுமே வெளிவருகின்றனர். இந்த எண்ணிக்கை போதாது எனவும் இந்திய கண் பரிசோதனை கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..


