தமிழ் குரல் / AI Voice
உலகளாவிய உணவுப் பாதுகாப்பு, உணவுப் பதனிடுதல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மிக முக்கியப் பங்காற்றி வரும் பெருமைக்குரிய நிறுவனங்களில் ஒன்றாக மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CFTRI) திகழ்கிறது. கர்நாடக மாநிலம் மைசூரில் அமைந்துள்ள இந்த நிறுவனம், இந்தியாவின் உணவுத் துறை ஆராய்ச்சியின் முதுகெலும்பாகக் கருதப்படுவதோடு, உலக அளவில் உணவு தொழில்நுட்பத்தில் புகழ்பெற்ற முன்னணி ஆய்வு மையமாகவும் விளங்கி வருகிறது.
உருவான பின்னணியும் வரலாற்றுப் பின்புலமும்
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில், உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதும், விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை முறையாகப் பாதுகாத்து வீணாவதைத் தடுப்பதும் நாட்டின் மிக முக்கியமான சவால்களாக இருந்தன. இந்தச் சிக்கல்களுக்கு அறிவியல் பூர்வமான தீர்வுகளைக் காணும் நோக்கில், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) கீழ் ஒரு தேசிய ஆய்வகத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்த 1950ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று மைசூரில் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், உணவுப் பொருள் உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதிலும் இந்நிறுவனம் தொடக்க காலத்தில் இருந்தே முன்னோடியாகச் செயல்பட்டு வருகிறது.
அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அரண்மனை வளாகம்
இந்நிறுவனத்தின் தலைமையகம் இயங்கும் இடம் மிகவும் தனித்துவமானது மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கது ஆகும். மைசூர் மகாராஜாக்களின் புகழ்பெற்ற பாரம்பரியத்தில் ஒன்றான ‘செலுவாம்ப விலாஸ் அரண்மனை’ (Cheluvambavilas Palace) வளாகத்தில்தான் இந்நிறுவனம் தனது பிரம்மாண்டமான தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வருகிறது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பிரம்மாண்டமான அரண்மனையும் அதன் பரந்த வளாகமும் மைசூர் மன்னர் ஜெயச்சாமராஜ உடையார் அவர்களால் நாட்டின் அறிவியல் ஆராய்ச்சி வளர்ச்சிக்கும் கல்விப் பணிகளுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த ராஜ அரண்மனையின் கட்டடக் கலை அழகுடன் கூடிய சூழலில் உலகத்தரம் வாய்ந்த உணவு ஆராய்ச்சிகள் நடைபெறுவது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும்.

அறிவியல் சாதனைகளும் உணவுத் துறை பங்களிப்புகளும்
தொடங்கியது முதல் இன்று வரை உணவுத் தொழில்நுட்பத் துறையில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்து வந்துள்ள இந்நிறுவனம், தானியப் பாதுகாப்பு, பழங்கள் மற்றும் காய்கறி பதனிடுதல், நறுமணப் பொருட்கள் அறிவியல், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு எனப் பல துறைகளில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 300-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு முறைகள் மற்றும் நவீன உபகரண வடிவமைப்புகளை இந்நிறுவனம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இங்கிருந்து கண்டறியப்பட்ட பல தொழில்நுட்பங்கள் வணிக ரீதியான பயன்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அறுவடைக்குப் பின் தானியங்களில் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பது, புதிய உணவுப் பொருட்களை உருவாக்குவது மற்றும் உலகத் தரத்திற்கு இணையான உணவுப் பாதுகாப்பு நெறிமுறைகளை வகுப்பது போன்றவற்றில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு இந்திய பொருளாதாரத்திற்கும் விவசாயிகளுக்கும் மாபெரும் பலமாக விளங்கி வருகிறது.
குறிப்பிட்டு சொல்வதானால் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு உணவுப்பொருட்களின் மூலப்பொருட்களைப் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்குக் கொண்டுவந்ததில் இந்நிறுவனத்தின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். குலாப் ஜாமுன் ப்ரீ மிக்ஸ், சிக்கன் வேபர்ஸ், ஸ்பைஸ் ஓலியோரெசின்ஸ், ஸ்பைஸ் எசென்ஷியல் ஆயில்ஸ் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்காக ஒவ்வொரு தனியார் நிறுவனத்தின் தேவைக்கேற்ப 460 வகையான உணவு ஃபார்முலாக்களை இந்நிறுவனம் உருவாக்கி வழங்கி உள்ளது. இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் தனியார் நிறுவனங்கள் இந்நிறுவனத்திடம் உரிமம் பெற்றுத் தங்களது பொருட்களைச் சந்தையில் வெற்றிகரமாக விற்று வருகின்றன. உணவு ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், இந்தியாவின் லட்சியத் திட்டமான ககன்யான் விண்வெளித் திட்டத்தில் விண்வெளியில் வசிக்கவுள்ள இந்திய விண்வெளி வீரர்களுக்குத் தேவையான கடலை மிட்டாய், சியா சீட்ஸ் போன்ற சத்தான உணவு வகைகளைப் பரிந்துரைத்துள்ளது. அதுமட்டுமின்றி, உணவுப்பொருட்களுக்கான ஃபார்முலாக்களை உருவாக்குவதோடு நின்றுவிடாமல், பொதுமக்களின் அவசியத் தேவைகளுக்காக இட்லி, தோசை போன்ற பாரம்பரிய உணவுகளைத் தயாரித்துக் கொடுக்கும் நவீன இயந்திரங்களையும் இந்நிறுவனம் வெற்றிகரமாகத் தயாரித்து வழங்கி வருகிறது.
நிலவளம் ரெங்கராஜன்
