பாராளுமன்ற புதிய கட்டடம் கட்டப்பட்டு இருப்பது காலத்தின் தேவை- பிரதமர் மோடி பேச்சு!

பாராளுமன்ற புதிய கட்டடம் கட்டப்பட்டு இருப்பது காலத்தின் தேவை- பிரதமர் மோடி பேச்சு!

ந்தியா இன்று புதிய பயணத்தை தொடங்குகிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை மரியாதையுடன் உற்று நோக்குகிறது. செங்கோல் என்பதே அதிகார மாற்றத்தின் அடையாளம். அந்த புனிதமான செங்கோல் இன்று பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. சோழர்கள் காலத்தில் நீதி, நேர்மை, நல்லாட்சி அடையாளமாக விளங்கிய செங்கோல் மன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது”- என்று புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லியில் புதிய பாராளுமன்றத் திறப்பு விழா பார்லிமெண்ட் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு, பாராளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் நிறுவும் வைபவம் இன்று நிகழ்ந்தேறியது. செங்கோல் நிறுவப்படுவதற்கு முன்பாக அதற்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்களும் தேவாரமும் ஓத செங்கோலுக்கு பூஜை மேற்கொள்ளப்பட்டது. மேலும், செங்கோலுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, புனித செங்கோல் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கினார்.

இதையடுத்து, வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட, மங்கள இசை இசைக்க தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் புனித செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்கள். புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு பாராளுமன்ற மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கு சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடன் இருந்தார். இவ்விழாவில் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், யோகி ஆதித்யாநாத் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் தேசிய கீதத்துடன் தொடங்கிய இவ்விழாவிற்கு வருகை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெற்றதை நினைவுகூறும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். இதேபோல் புதிய பாராளுமன்றம் திறப்பு விழாவை நினைவு கூறும் வகையில் புதிய தபால் தலைகளையும் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில்,” புதிய பாராளுமன்றத்தை திறந்த இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்கது. இது வெறும் கட்டிடம் அல்ல. இந்திய மக்களின் கனவுகளைப் பிரதிபலிக்கிறது. இது ஜனநாயகத்தின் ஆலயமாக விளங்கும். புதிய பாதைகளில் பயணம் செய்வதே புதிய குறிக்கோள்களை அடைய முடியும். நமது விருப்பத்தையும் உணர்வையும் பிரதிபலிக்கக்கூடியதாக புதிய பாராளுமன்றம் இருக்கும். இப்படி பாராளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் விருப்பம் தெரிவித்தனர்.

அந்த வகையில் இந்தியா இன்று புதிய பயணத்தை தொடங்குகிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை மரியாதையுடன் உற்று நோக்குகிறது. செங்கோல் என்பதே அதிகார மாற்றத்தின் அடையாளம். அந்த புனிதமான செங்கோல் இன்று பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. சோழர்கள் காலத்தில் நீதி, நேர்மை, நல்லாட்சி அடையாளமாக விளங்கிய செங்கோல் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது.

செங்கோல் நம் அனைவருக்கும் என்றும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும். பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டதன் மூலம் அதன் புகழ் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷாரிடம் இருந்து அதிகாரம் மாறியதன் அடையாளமான செங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்துள்ளோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்ல ஜனநாயகத்தின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. இதனிடையே வருங்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும், அவ்வாறு அதிகரிக்கக்கூடிய மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய கட்டடம் தேவைப்படுகிறது. ஆக பாராளுமன்ற புதிய கட்டடம் கட்டப்பட்டு இருப்பது காலத்தின் தேவையாகும்.

விடுதலைக்கு பிறகு பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த இந்தியா, தற்போது சுதந்திர பொற்காலத்தில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி நமது பெருமை பலவற்றை அபகரித்தது; தற்போது காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து இந்தியா விடுதலை பெற்றது. நாடாளுமன்ற புதிய கட்டடம் நாடு முழுவதிலும் உள்ள கலைகள் அனைத்தையும் தன்னகத்தில் கொண்டுள்ளது.

ஊராட்சி மன்றம் தொடங்கி பாராளுமன்றம் வரை நமது லட்சியமாக இருப்பது நாட்டின் வளர்ச்சியும் மக்கள் முன்னேற்றமுமே ஆகும். புதிய நாடாளுமன்றத்தை கட்டியது பெருமை; அதுபோலவே 4 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டி தந்ததும் திருப்தி தருகிறது. புதிய பாராளுமன்றத்தின் வசதிகள் பற்றி பேசும்போது நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டதை நினைவுகூர்கிறேன். நாடு முழுவதும் உள்ள கிராமங்களை நகரங்களுடன் இணைக்க 4 லட்சம் கி.மீ. நீள சாலைகளை நாம் அமைத்துள்ளோம் என் பிரதமர் மோடி தெரிவித்தார்

Related Posts