உறவா? கசப்பா? ராகுல் – ஸ்டாலின் நட்பின் விரிசலும் காங்கிரஸின் பேராசையும்!

உறவா? கசப்பா? ராகுல் – ஸ்டாலின் நட்பின் விரிசலும் காங்கிரஸின் பேராசையும்!

ரசியலில் ‘நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை’ என்பது பழமொழி. ஆனால், ‘நிரந்தரப் பாசம்’ என்பது உண்டா என்ற கேள்வி இப்போது தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக உறவுக்கு இடையே எழுந்துள்ளது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “திமுக கூட்டணியில் 25 இடங்களையெல்லாம் ஏற்க மாட்டோம்” என்று கறாராகப் பேசியிருப்பது ஒருபுறமெனில், ராகுல் காந்தியின் வாழ்த்தில் தெரிந்த ‘அரசியல் குளிர்ச்சி’ மறுபுறம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

1. ‘சகோதரர்’ டூ ‘முதலமைச்சர்’: ராகுலின் மெளன மாற்றம்

கடந்த ஆண்டு வரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை “எனது சகோதரர்” என்று உருகி உருகி வாழ்த்திய ராகுல் காந்தி, இந்த ஆண்டு அந்தப் பாசமான பதத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வெறும் “தமிழக முதலமைச்சர்” என்று மட்டும் விளித்திருப்பது தற்செயலானது அல்ல. 2019-ல் ஒட்டுமொத்த இந்தியாவே தயங்கியபோது, ராகுல் காந்தியைப் ‘பிரதமர் வேட்பாளர்’ என்று துணிச்சலாக முன்மொழிந்தவர் ஸ்டாலின். கூட்டணி முரண்பாடுகளைப் பொருட்படுத்தாமல் ஸ்டாலின் காட்டிய அந்த அரசியல் நேர்மைக்கு, இப்போது ராகுல் காந்தி காட்டும் இந்த ‘விலகல்’ நியாயமானதா என்ற கேள்வி வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

2. தொகுதிப் பங்கீடும் ஜமீன்தார் மனநிலையும்

ஒரு கட்சி வளர வேண்டும் என்று விரும்புவதும், கூடுதல் தொகுதிகள் கேட்பதும் ஜனநாயக உரிமைதான். ஆனால், அந்த உரிமை ‘தகுதி’ மற்றும் ‘தரைமட்ட உழைப்பை’ அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனது செல்வாக்கைச் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை வைத்து மட்டுமே எடைபோட முடியாது. ஏனெனில், அந்த எண்கள் பல நேரங்களில் கூட்டணிக் கட்சிகளின் உழைப்பால் விளைந்தவை.

மக்களோடு மக்களாகக் கலந்து, அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்காகப் போராடாமல், தேர்தல் நேரத்தில் மட்டும் ‘ஜமீன்தார்’ மனநிலையுடன் அதிகத் தொகுதிகளைக் கேட்பது காங்கிரஸின் பலவீனம். “நாங்கள் மாறியிருக்கிறோமா?” என்று காங்கிரஸார் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது.

3. தவெக காரணியும் ராகுலின் அரசியல் வித்தையும்

ராகுல் காந்தி ‘பப்பு’ பிம்பத்திலிருந்து வெளியேறி முதிர்ச்சியடைந்த தலைவராகத் தெரியலாம். ஆனால், அரசியலில் வரிகளுக்கு இடையே மறைந்திருக்கும் செய்திகளை வாசிப்பதில் அவருக்கு இன்னும் தேர்ச்சி தேவைப்படுகிறது. தமிழகத்தில் வளர்ந்து வரும் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) போன்ற புதிய சக்திகளைப் பற்றி ராகுலிடம் யாரோ மிகைப்படுத்திப் பேசியிருக்கிறார்கள் என்பது அவரது சமீபத்திய போக்கில் தெரிகிறது. இந்தத் தவறான கணக்கீடுகள் காங்கிரஸின் பலமான அடித்தளத்தையே சிதைக்கக்கூடும்.

4. பேராசை பெருநஷ்டம்: காங்கிரஸிற்கு ஒரு எச்சரிக்கை

ஆசை என்பது இயல்பானது; ஆனால் பேராசை என்பது அழிவைத் தரும். திமுகவுடனான, குறிப்பாக மு.க. ஸ்டாலினுடனான உறவை காங்கிரஸ் வளைக்க நினைத்தால், அது ஒடிந்துதான் போகும். தமிழகத்தில் திமுக என்ற ஒரு வலுவான அச்சாணி இல்லாமல் காங்கிரஸின் அரசியல் வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை ராகுல் உணர வேண்டும்.

காங்கிரஸும் திமுகவும் பிரியும் தருணத்திற்காகவே பாஜக உள்ளிட்ட எதிரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எதிரிகளின் ஆசைக்கு ராகுல் காந்தி பலியாகப் போகிறாரா அல்லது யதார்த்தத்தை உணர்ந்து ஸ்டாலினின் கரங்களைப் பலப்படுத்தப் போகிறாரா?

செ.இளங்கோவன்

Related Posts